Wednesday, January 05, 2005

தமிழ்தாகத்தில் விக்கினால் விக்கி படிய்யா...

வெங்கட் நட்சத்திர வாரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிட்டதை ஏற்கனவே படித்திருப்பீர்கள். இதில் நானும் ஒரு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இதுவரை ஒரு தூசியைக் கூட இந்த விஷயத்தில் தூக்கவில்லை. காரணம் உங்களுக்குத் தெரியும்.

இந்த விஷயத்தில் நான் பங்கெடுக்க ஆர்வம் காட்டியதற்குப் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது. என் வலைப்பதிவின் மூலம் என்னைக் கண்டுகொண்ட பழைய ஸ்நேகிதி ஒருவர், தனக்கும் வலைப்பதிய ஆர்வம் இருப்பதாக சொல்ல, அவருக்கு உதவ வேண்டி, ப்ளாக்கர் மூலமாக ஒரு பதிவைத் துவக்கினேன். ஏற்கனவே நான் இதையெல்லாம் என் மூக்குக்காக செய்திருந்தாலும், நிறைய விஷயங்களை மறுபடியும் யோசித்து யோசித்து செய்ய வேண்டி இருந்தது. (உதா: இயங்கு எழுத்துரு, டெம்ப்ளேட் மாற்றம், தமிழ் பின்னூட்டம் மற்றும் அவருக்கான அடிப்படை விளக்கங்கள்) . ஏற்கனவே நண்பர்கள் பலருக்கு இதை செய்திருந்தாலும், இந்த முறை செய்யும்போதுதான், இதற்கான எல்லா தகவல்களும் ஒரே இடத்தில் இல்லை என்கிற உண்மை உறைத்தது. ஒரு இடத்தில் இருந்தால், புதிதாக வலைப்பதிய விரும்பும் மக்களுக்கு யாருடைய உதவியும் தேவை இல்லை என்பது விளங்க, காசியை தொடர்பு கொண்டேன்.

இதற்கான முயற்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும், விரும்பினால் நான் ஏதாவது ஒன்றில் இணையலாம் என்றும் கூறினார். HTML, PHP, MYSQL அறிவு நான் செய்யப்போகும் வேலைக்கு தேவைப்படாது என்ற உபரித் தகவலையும் அளித்தார். இதுதான் பூர்வ கதை.

இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த விநாடி தமிழ்மணத்தில் முன்னூற்றிபதிநாலு வலைப்பதிவுகள் பதிவாகியுள்ளன. இதே வளர்ச்சி விகிதம் தொடர்ந்தால் இந்த வருட முடிவுக்குள் ஆயிரம் பதிவுகளாவது வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருபவர்களின் வேலையை சுலபமாக்க வேண்டாமா..?? இன்னும் ஏகப்பட்ட அக்கினிக்குஞ்சுகள், சனியன்கள், தூறல்கள், வீச்சறுவாள்கள் வரவேண்டாமா..??

வாருங்கள் வலைப்பதிவு விக்கிக்கு. இது ஒரு ஆன்லன் மேன்யுவல். ஊர்கூடி இழுக்கும் தேர். எல்லா ஆறுகளும் தேடிவந்து கலக்கும் கடல். சுவைக்குமுன்னமே வாயில் நீரூறச்செய்யும் அவியல். உங்களுக்கு வலைப்பதிவு ஆரம்பித்து, அதை நடத்துவதற்கு தேவைப்பட்ட, தேவைப்படும் நுட்பங்கள், டிப்புகள், ட்ரிக்குகள் அத்தனையையும் இங்கேவந்து எழுதுங்கள். ஏற்கனவே எழுதி இருந்தால் உங்கள் இடத்திலிருந்து இங்கே வெட்டி ஒட்டுங்கள்.

அடுத்தமுறை யாராவது வலைப்பதிவு ஆரம்பித்தால், "விக்கிக்கு ஜே" என்று சொல்லி அவர் தன் முதல் பதிவை போடுவதில், அதில் கிடைக்கும் திருப்தியில் இருக்கிறது இதற்காக நாம் செலவிடும் நேரமும், உழைப்பும்.

வாருங்கள் வலையர்களே...!!

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...