Wednesday, January 26, 2005

மண்ணு தின்னப் போவதை....

"காயமே இது பொய்யடா" என்றெல்லாம் நவகாலத்தில் சொல்லிக்கொண்டு ஆன்மபலம், அறிவுபலம் என்று ஜல்லியடித்தால், மனைவிமார்கள் தொப்பையில் குத்தி, குளிர் இரவில் வெளியே தள்ளி விடுவார்கள். மாறாக, படிப்புக்கு, மனத்திண்மைக்கு தயார் செய்யும் பருவத்திலேயே உடம்புக்கும் ஏதாவது செய்து திடப்படுத்திக் கொண்டால், என்னைப் போல வயசான காலத்தில் குளிரிரவில் சைக்கிளோட்டிக் கொண்டு ஜிம்முக்கு போய் தங்கு தங்கென்று ஓடத் தேவை இராது.

சின்ன வயசில் சிவாஜியையும், மற்ற தாட்டியான ஹீரோக்களையும் பார்க்கும்போது அவர்கள் நடிப்பு பாதித்த அளவுக்கு, அவர்கள் தொப்பையும், குட்டி ஐஸ் வண்டி போல சிரமப்பட்டு நகரும் அவர்கள் உருவமும் ஏன் தொந்தரவு தரவில்லை என்று தெரியவில்லை. பிறந்தது மூன்று சகோதரிகளுடன் என்பதால் வெறும் பல்லாங்குழி, ஏழாங்கல், ஏரோப்ளேன் தாயம், கேரம்போர்டு , செஸ், சில்லிகோடு, ஐஸ்பாய் ( I Spy யாம் இது!!!) என அதிக தொந்தரவில்லா விளயாட்டுகளாகதான் இளமையில் பழகினேன். ஆரம்பப்பள்ளிகளில் வைக்கப்படும் விளையாட்டுப் போட்டிகளில் எல்லாம், எல்லாரும் என் துரத்தலுக்கு பயந்து முன்னே அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். தப்பித் தவறி ஒருமுறை கிரிக்கெட் மட்டையை பிடித்தபோது, சூறாவளியாக ஓடிவந்த தோழன் "கடாவெட்டு" சிவகுமார் ஒரு ஃபுல்டாஸ் பொட்டு, கார்க்பாலின் பிரதியை என் கண்ணுக்கு சற்று கீழே வைத்தான். நல்ல வேளை கண்ணாடியை கயட்டிக் கொடுத்திருந்தேன். அத்தோடு ஸ்கூல் கிரிக்கெட் ஓவர். மைதானம் பக்கமே போகவில்லை.

பின்னே தெருப்பையன்களோடு தென்னை மட்டை பேட் கிரிக்கெட். சவுக்க விறகு ஸ்டெம்ப். சைக்கிள் ட்யூப் கட் பண்ணி தயாரித்த பந்து. அந்த கிரிக்கெட்டிலும் நான் ரொம்ப பிரபலம். தைரியமாய் என் பக்கம் பந்தடிப்பார்கள். தரையில் வந்தால் நண்டு பிடிப்பேன். காட்ச் வந்தால் எங்கேயாவது கை நீட்டி, உத்தரவாதமாக விடுவேன். பம்பரம் விளையாடினால், உக்கு வைத்து வைத்து பம்பரம் காந்திமதி மூஞ்சியாகும். கோலி விளையாடினால், ஏகப்பட்ட கப்பம் கட்டுவேன். கிட்டிப்புள் விளையாடினால் அளந்து அளந்து முட்டி தேயும்.

எட்டாவது, ஒன்பதாவது படிக்குபோது மாநகர பூங்கா அருகே வலை கட்டி விளையாடும் சேட்டு பசங்களின் விளையாட்டு பிடித்துப் போனது. " எடம் சார் எடம் " என்று சொல்லிக் கொண்டே ப்ளேஸ் வைக்கும் அந்த ஆட்டத்தின் பேர் பேட்மிண்டன் என்று பின்னாளில் தெரிந்தது. அதோட சகோதர விளயாட்டு ஷட்டில்காக்தான் நான் முதன் முதலில் பிடித்துப் போய் விளையாடிய அவுட்டோர் விளையாட்டு. பின்பு பத்தாவது, பனிரண்டாவது பரிட்சை மார்க்குகளுக்காக, புத்தகங்களை தின்று வாந்தி எடுக்க முனைந்ததில் அந்த விளையாட்டும் விலகி ஓடியது. காலேஜிலும் இதே நிலைதான். ஆனால் ஆரம்ப காலத்தில் இருந்தே கிரவுண்டு பக்கம் போகிறவர்கள் எல்லாம், பெரிய பெரிய பையன்களாக, வயசுக்கு மிறிய வளரல்களாக, சிகரெட் பாபிகளாக, பெண்களை கிண்டல் செய்பவர்களாக, A படம் பார்ப்பவர்களாக, தியேட்டரில் கசமுசா சீன்களில் ஊய் என்று விசில் அடிப்பவர்களாக, குறைந்த மார்க் எடுப்பவர்களாக பெரும்பாலும் இருந்தமையால், எதுவும் இழந்ததாக தெரியவில்லை.



வயது ஆக ஆக, உணவுப் பழக்க வழக்கங்களும், திரவ லாகிரிகளும் சேர்ந்ததில் உடம்பு ஒரு மாதிரி சைஸுக்கு போய் விட்டது. கல்யாணத்துக்கு முன்பே என்னிடம் "எத்தனை குழந்தைகள்" என்று கேட்ட வஞ்சியர்களை எல்லாம் "நான் மாமா இல்லை" என்று தலையில் சத்தியம் பண்ணி நம்ப வைக்க வேண்டி வந்தது. வயசு கூட இருக்கிறது மாதிரி தெரிகிறதே என்று நானே யோசிக்க ஆரம்பித்த பிறகுதான் உடம்பின் சைஸே அதற்குக் காரணம் என்ற ஞானோதயம் வந்தது.

என் வீட்டுக்காரம்மா விளையாட்டு வீராங்கனை. தமிழ்நாடு ஸ்டேட் லெவல் ஹாக்கி டீமில் விளையாடி இருக்கிறார் என்ற சேதி கேட்டபோது ஒரு மாறுதலுக்கு என் தொப்பை என்னைப் பார்த்து சிரித்தது. ஆனால் கல்யாணமான ஓராண்டுக்குள் சிங்கப்பூரில் இருந்த வரை கூட, நான் உடம்பைக் குறைக்க ஏதும் செய்தேனில்லை. "சின்ன வீடு" ஜெய்கணேஷ் மாதிரி ஆகிப்போனேன்.

அமெரிக்கா வந்ததும் தான் உணவுப் பழக்க வழக்கங்களும், உடம்பை ஸ்லிம்மாக வைத்துக் கொள்வதும், ஸ்போர்ட்ஸ்மேன்களுக்கு மட்டுமல்ல, சகல அமெரிக்கர்களும் பாவிக்கும் விஷயம் என்று தெரிந்து போனது. எத்தனை வயசான மாமாக்கள் என்றாலும், சிக்கென்று உயரமும் அகலமுமாக, சட்டம் போல முதுகோடு இருக்கும் அந்த உருவத்துக்கு மனசு ஏங்க ஆரம்பித்து ஜிம் போக ஆரம்பித்தேன். 200/250 கலோரிகள் ட்ரெட் மில்லில் அழித்த பிறகு, கொஞ்ச நேரம் சைக்கிளிங். பின் Weights என்று பழகியதில், உடம்பு குறைந்ததோ இல்லையோ, இருக்கிற ஊளைச்சதை கொஞ்சம் இறுகி இருப்பது நிஜம்.

எப்போது ஜிம்மினாலும், அங்கே செல்ல ஏதாவது ஒரு வகையில் மோட்டிவேட் பண்ணிக் கொள்ள வேண்டுமென்பதற்காக, கொஞ்சம் கல(ர்)கல(ர்) வென இருக்கும் சமயங்களில் போவதை வழக்கமாக்கிக் கொள்வேன். பக்கத்தில் யாராவது ஒரு பெண்பால் நடந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தால் நடக்கும் களைப்பு தெரியாதென்பது ஒரு கணக்கு. காமி( Camy) என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு பெண்ணிடம் ( வசதியான பேர் என்று சுஜாதா சொல்வார்) நேற்று பேசிக் கொண்டிருந்தபோது அவள் கேட்ட ஒரு கேள்வி எனக்கு எவ்வளவு சந்தோஷம் கொடுத்திருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள்.

கேள்வி என்ன என்று கண்டுபிடித்து சொல்வோருக்கு பரிசு உண்டு.



படம் : நானில்லை...!!! :-)

6 comments:

  1. Are you married? என்பது அந்தக் கேள்வியாக இருந்து நீங்கள் சந்தோஷப்பட்டிருந்தால்... ;)

    ReplyDelete
  2. Gotcha....

    பாம்பு...நீர் பலே ஆளய்யா...!!!

    ReplyDelete
  3. அய்யோ அதுக்கு பேரு I spy-யா? நாங்க கேர்ள் பிரண்டு பாய் பிரண்டோட வெளாடும் போது 'ஐஸ் பால்'ன்னு சொல்லி வெளாடுவோம்...

    ReplyDelete
  4. 'ஜல்லியடித்தல்' என்றால் என்ன மூக்கு மாமா?

    ReplyDelete
  5. இன்னா சாமி... நல்ல படம் ஏதும் இல்லியா இன்னிக்கு, என்னோட ஸ்டாக்குலேருந்து ஏதும் அனுப்பனுமா?

    ReplyDelete
  6. அல்வா மருமகனே,

    சொந்தமாக, ஜாலியாக, பைசாவுக்கு பிரயோஜனமில்லாமல் என்னை மாதிரி மட்டையடித்தால் ஜல்லியாம். மண்டபத்துல சொன்னாங்க :-)

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...