Tuesday, January 11, 2005

அமெரிக்காவின் அழுகுரல்

கையைக் காலை உதைத்துக் கொண்டு, தரையில் உட்கார்ந்து கதறும் பிடிவாதக் குழந்தையை பார்த்த மாதிரி இருக்கிறது இதைப் பார்த்து. நம் வீட்டுக் குழந்தையாக இருந்தால் கன்னத்தில் ஒரு திருகு திருகி, முதுகில் ஒரு வெடி போடலாம். ஆனால் ஊரான் வீட்டுக் குழந்தை ஆயிற்றே, கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்க வேண்டும்.

அமெரிக்க ரேடியோ ஸ்டேஷன் ஜாக்கி ஒருவர், கால் சென்டர் வேலைகளை இந்தியாவுக்கு அனுப்பும் ஒரு கம்பெனி எண்ணைத் தொடர்பு கொண்டு, கன்னா பின்னா என்று ஃபோனில் பேசி இருக்கிறார். அமெரிக்க பொருட்களை, கலாசாரத்தை பற்றித் தெரியாத இந்திய அம்மணி, எப்படி தனக்கு சர்வீஸ் செய்வது என்கிற வெறி அவருக்கு. பதிலுக்கு "ஸ்டீனா" என்கிற அந்த இந்திய அம்மணி, பொறுமையாக பதில் சொன்னதையும் கேட்காமல், Bitch என்றும், Rat eater என்றும், I will choke the f**k out of you என்றும் அநாகரிகமாக பேசி ஃபோனை அறைந்து சாத்தி இருக்கிறார். இப்போது அந்த ஸ்டேஷனின் மானேஜர் ரிச்சர்ட் வருதம் தெரிவித்து இருக்கிறார் என்றாலும், சம்பந்தபட்ட ஜாக்கிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

சிரிப்புத்தான் வருகிறது.

உங்களுக்கு இந்தியர்களுடன் பேச சங்கடமாக இருந்தால், அவுட்சோர்ஸ் செய்யும் அந்தக் கம்பெனியிடம் புகார் செய்யுங்கள். அதிக லாபத்துக்காக அவுட் சோர்ஸ் செய்யும், கம்பெனி பொருட்களை முடிந்தால் புறக்கணியுங்கள். இந்த நடவடிக்கையை ஆதரிக்கும் செனட்டர்களிடம் பேசுங்கள். அதை விடுத்துவிட்டு அந்த அமைப்பின் கடைநிலை செயலரிடம் சென்று அநாகரீகமாக பேசுவது முழுக்க முழுக்க உங்கள் இயலாமையின் வெளிப்பாடு.

மாறி வரும் பொருளாதார சூழ்நிலையில், தொழில்நுட்ப முன்னேற்றத்தில் உலகம் என்பது சிறிய கிராமம். போட்டிகள் எல்லா நாடுகளில் இருந்தும் வரும். உங்கள் வேலையைத் தக்கவைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டுமோ, அதனை செய்யாவிடில், வேலை வெளியாருக்குப் போகும். வேளியாருக்குப் போகும் வேலைகள்தான் எனக்கு வேண்டும். நான் படிக்க மாட்டேன். எனக்கு இம் மாதிரி நாக்கு தேயாமல், பாட்டுக் கேட்டுக் கொண்டே ஃபோனில் கஸ்டமர் சர்வீஸ் பண்ணிவிட்டு, இந்திய ஆசாமிகள் பெறும் சம்பளத்தை விட பல மடங்கு அதிக சம்பளம் வேண்டும் என்றால்....

ஸாரி...அந்தக் காலம் முடிந்து விட்டது.

இந்தியாவுக்கே சீனாவிலிருந்து ஆட்கள் வந்து வேலை செய்கிறார்கள். அமெரிக்கர்களே பலபேர் அங்கே பணி புரிகிறார்கள். மாறி வரும் நடப்பை புரிந்து கொள்ளாமல், வெறுமே மூர்க்கமாக கத்துவதில் பயனில்லை. வெறுமே கத்திக் கொண்டிருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை.

ஊரான் வீடுக் குழந்தையையும் ஒரு கட்டத்தில் கண்டிக்க வேண்டி இருக்கும்.

( ரீடிஃப் இணைப்பில் உள்ள சம்பாஷணை கேட்காவிட்டால், எனக்கு எழுதுங்கள். அனுப்பி வைக்கிறேன்)

2 comments:

  1. இதே இந்தியாவிலிருந்து வேலைகளை அமெரிக்காவுக்கு அனுப்பினால், அதை smart business என்பார்கள் என்று நினைக்கிறேன். அதே இங்கேயிருந்து அங்கே போனால், ஐயோ பிடுங்குகிறார்கள் என்று பிரலாபம்.

    ReplyDelete
  2. http://www.petitiononline.com/removest/petition.html

    ReplyDelete

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...