Tuesday, January 25, 2005

இணையவெளி வீதியிலே...நண்பர் ஈழநாதனை சிங்கையில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் காலச்சுவடு கண்ணணோடு பார்த்தபோது நம்பமுடியவில்லை. இவரா இத்தனை வலைப்பதிவுகள் வைத்துக்கொண்டு, வயதுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத சீரியஸ் தன்மையுடன் எழுதிக் கொண்டிருக்கிறார் என்று. ஆர்ச்சர்ட் ரோட் பார்க்குகளிலும், மலேசியா ஜோஹர் பாஹ்ரூவிலும், செந்தோசா, பத்தாமிலும் நேரம் செலவழிப்பதை விடுத்து, இப்படி உட்கார்ந்து மாங்கு மாங்கென்று எழுதும் தமிழார்வத்திற்கு வந்தனம். சில விடயங்களில் அவரது தீவிரத்திற்கு என்னிடம் மாற்றுக் கருத்து உண்டென்றாலும், தமிழால் கவர்ந்த இளைஞர். சலனச்சுருள் பதிவில் குறும்படங்களைப் பற்றியும், படிப்பகம் பதிவில் ஈழத்து எழுத்தாளர்களின் புத்திலக்கியம் பற்றியும், கவிதை என்கிற தன் முக்கிய வலைப்பதிவில் தற்போது, இயல் விருது பெற்ற லண்டன் பத்மநாப ஐயரைப் பற்றியும், அவர் எழுதி வருவது மிக சந்தோஷமான விஷயம். இலங்கை பிரதேசத்தின் இலக்கியச் சுவை நுகர விரும்புவோர் தவறாது நினைவில் கொள்ள வேண்டிய ஈழநாதன் சிங்கப்பூரில் வசிக்கிறார்.

கடந்த அக்டோபரில் இருந்து வலைப்பதியும் உதயகுமார் சென்னைவாசி. எடுத்துக்கொண்டிருக்கும் தலைப்புகள் எல்லாம் சீரியஸான தலைப்புகள் என்றாலும், எழுதின ஆழத்தில் ஏதோ குறைபாடு. என்னை மாதிரி சினிமா கிசு கிசு ஸ்டைலில் எழுதுபவர்கள், அந்த மாதிரி லைட்டான விஷயங்களில் பத்து பதினைந்து வரிகளுக்கு மேல் எழுதக்கூடாது. எழுதினால் எலி விக்கிக் க்ளிக்கி ஐஈ ஜன்னல் மூடி விடும். உதயகுமார் எடுத்துக் கொண்டிருக்கும் தலைப்புகளுக்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டும். இன்னமும் நிறைய எழுத வேண்டும். இம் மாதிரி தலைப்புகளை எழுதும் மற்ற வலைப்பதிவர்கள் உதா: பத்ரி சேஷாத்ரி எவ்வளவு ஆழமாக இறங்கி எழுதுகிறார்கள் என்று உதயகுமார் ஒரு முறை படிக்க வேண்டும்.

நவம்பரிலிருந்து வலைப்பதியும் எம்.ஈ.ஏ, ஆரம்பத்தில் எல்லோரையும் போல ஆரம்பித்து, பின் தடாலடியாக மாத்ருபூதமாகி ( முதலிரவு டிப்ஸ்- இன்ன பிற) , பிறகு தற்போது விடுதலைப் பிரசுர புத்தகத்தை அத்தியாயம் அத்தியாயமாக எடுத்து இட்டுக் கொண்டு இருக்கிறார். ஏற்கனவே எழுதிய படைப்புகளை வைத்து அவர் சொந்தமாக எழுதக் கூடியவர்தான் என்பது தெரிந்தாலும், இப்படி ஒரேயடியாக புத்தகத்தை "தட்டிப்" போடும் லெவலுக்கு எப்படி இறங்கினார் என்பது தெரியவில்லை. எனக்குத் தெரிந்து பல் விளக்குவதைக் கூட புத்தகம் பார்த்து செய்யும் ஜீவிகள் இருக்கிறார்கள். பொதுப்புத்தியின் வழிகாட்டலைக் கூட கண்டுகொள்ளாமல், கண்டதுக்கெல்லாம் புத்தகம் படிக்கும் அல்லது மேற்கொள் காட்டும் புத்திஜீவிகள் மாதிரி நீங்களும் முடிந்து விடக் கூடாது. புத்தகத்தின் சாரம் உங்களுக்கு எட்டியதா..? அதில் எந்தப் பகுதி உங்களுக்குள் வெளிச்சம் போட்டது..ஏன்..? ஜனசங்கத்தின் தற்கால முகம் இன்னமும் அந்த குறிக்கோள்களை தன்னகத்தே வைத்திருக்கிறதா என்று அத்தியாயங்களின் நடுவே நிங்களும் விளக்கலாம். தப்பில்லை.

சமீபமாக எழுத துவங்கி இருக்கும் எல்லாளன் முதலில் எழுத்துருவை பெரிதாக்க முடிந்தால்தான் என் போன்ற சோடாபுட்டிகள் படிக்க முடியும். படித்தால்தானே கருத்து சொல்ல..??

பி.கு: தினம் எழுதுற விமரிசனப் பதிவில் கட்டாயம் படம் உண்டு - காரணமே இல்லை என்றாலும். பின்ன கலெக்ஷன்ஸ் எல்லாம் எப்ப உபயோகப்படுத்தறதாம்..? :-)

No comments:

Post a Comment

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...