Friday, January 14, 2005

மாயவரம் பொங்கல்

விவசாயக் குடும்பங்களில் தீபாவளிக்கு இருக்கும் முக்கியத்துவத்தை விட பொங்கலுக்குத்தான் அதிகம் இருக்கும். இருபது வேலி, முப்பது வேலி நிலமெல்லாம் பாதி குத்தகைக்காரனிடமும், மீதி தானே முன்வந்து விற்றதிலுமாய் கழிந்து விட, அரிசி மூட்டையாய் வாங்கி வைத்துக் கொண்டு சாப்பிட்டாலும், பொங்கல் கொண்டாடும்போது மட்டும், முன்னாளைய "சுகஜீவனம்" நினைவுக்கு வந்து விடும்.

எங்கள் இல்லத்திலும் அப்படித்தான். காலையில் இருந்தே அப்பா டென்ஷனாக சுற்றிக் கொண்டிருப்பார். விடிகாலை எழுந்து, ஈரத்துணியோடு, கொல்லையில் சூரியன் தெரியும் இடமாக பார்த்து, பூமியில் செவ்வகமாக குழி தோண்டி, அந்த மண்னை வைத்தே உருண்டைகள் செய்து, குழிக்கு இரண்டு புறமும் கொஞ்சம் இடைவெளி விட்டு வைப்பார். பிறகு மண்பானைகள் வைத்து, இஞ்சிக் கொத்து மஞ்சள் கொத்துடன் அடுப்பில் வைத்து, பொங்கல் பொங்கி இறக்கி சாமிக்கு படைப்பதற்குள் முதுகு விரிந்து விடும். பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அருகம்புல் சொருகி, சூரியகாந்திப் பூவை மேலே வைத்து, பொங்கல் வைத்து படைத்து முடித்ததும்தான் காலையில் இருந்து மறந்திருந்த பசி விறு விறு என்று மண்டைக்கு ஏறும்.

மறுநாள் இன்னமும் பிசி. எங்களுக்கு சொந்தமான கோவிலுக்கு மாட்டுப்பொங்கல் அன்று கிட்டத்தட்ட நூறு வருடங்களாக கரகம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதற்காக, என் அப்பாவுடன் கூடப்பிறந்தவர்கள் ஏழு பேரும் அவர்களுடைய குடும்பத்தினர் சகிதம் பொங்கல் இரவு ஊரிலிருந்து வந்து இறங்கி விடுவார்கள். காலையில் எழுந்து லாகடத்துக்கு (துலாக்கட்டம்)( காவேரிக்கரைக்கு) போய், பூங்கரகம் செய்து, பெரிய கடைத்தெரு, மணிக்கூண்டு, பட்டமங்கலத்தெரு வழியாக வந்து, கோவிலில் வந்து இறக்கி முடித்தவுடன் தான் மறுபடியும் வீட்டுக்குப்போய், பொங்கலிட்டு சாமிக்கு படைக்க வேண்டும். இரட்டிப்பு வேலை. ஆனால் ஊரிலிருந்து வந்திருக்கும் சித்தப்பா, பெரியப்பாக்கள் அத்தைகளோடு, அவர்கள் பையன்கள் பெண்களோடு அளவளாவுவதில் அன்றும் களைப்பு ஒன்றும் தெரியாது. ஒருவர் குடை பிடிப்போம். இன்னொருவர் கத்தி. இன்னோருவர் தீவட்டி பிடிப்போம். இன்னொருவர் சாம்பிராணி சட்டி. கொஞ்சம் வளர்ந்த பையன்மார் நடைபாவாடை போடுவார்கள். இன்னும் கொஞ்சம் பேர் வழி நெடுக உண்டி குலுக்குவார்கள். பூசாரிக்கு சிலம்பு மாட்ட, அவருக்கு சாமி வரும்போது, எலுமிச்சம்பழம் அறுத்து "கழிப்பு" கழித்துவிட, பூசாரி ஆவேசத்தில் தடுமாறும்போது, கரகத்தை அணைவாக பிடித்துக் கொள்ள என்று பெரியவர்களும் கூட வருவார்கள். "சாமி" வரும்போது பூசாரியிடம்
வீபூதி பூசிக்கொள்ள " நான் மின்னே. நீ முன்னே" என்று போட்டி போடுவார்கள். ஆனால் நானும் சரி, என் அப்பாவும் சரி, ஓரமாக நின்று கொண்டு அவர் தலையில் இருக்கும் கரகத்தினை கும்பிட்டு விட்டு வருவதோடு விலகிவிடுவோம்.

குடும்பத்தில் யாராவது இறந்து போனால், மற்றது எதுவும் ஒரு வருஷத்துக்கு கொண்டாடாமல் தீட்டு காப்போம். ஆனால், கரகம் மட்டும் விதிவிலக்கு. போனவருஷம் என் சின்னா சித்தப்பா தவறிப் போயிருந்தாலும், இன்றும் கரகம் உண்டு. கோவிலில் பூஜை உண்டு. நேற்று இரவு அப்பாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, ஊரிலிருந்து எல்லாரும் வந்து இறங்கி இருப்பதாக சொன்னார். பெரியப்பாவுக்கு நடக்கவே முடியவில்லையாம். தடி ஊன்றிதான் நடக்கிறாராம். ஆனாலும் வைராக்கியம் அழைத்துக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

[ காலையில் சில பொங்கல் வாழ்த்துக்கவிதைகள் படித்தேன். நல்ல தமிழ்சொற்கள் கோக்கப்பட்டு எழுதிவரும்போதே பேச்சு வழக்கு சொற்களை கவிஞர்கள் உள்ளே நுழைத்து விடுகிறார்கள். படிக்கும்போது பல்லில் தட்டுப்பட்டு, நற நற வென்று கூசுகின்றது. இது எனக்கு மட்டுமோ என்னவோ..இல்லை எல்லாருக்குமேவா..?? தெரியவில்லை... ]


1 comment:

  1. //படிக்கும்போது பல்லில் தட்டுப்பட்டு, நற நற வென்று கூசுகின்றது//

    KARUMBU thinnukittae kadichiruppeengalo..sorry...padichiruppeengalo?! ;)

    ReplyDelete

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...