மறுபடியும் ஜெயேந்திரர் விவகாரம்.
கூடிய சீக்கிரமே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவிருப்பதாக செய்திகள். ரவி அப்ரூவர் என்று பேச்சு. வழக்கும், அதன் முடிவும் என்ன வேண்டுமென்றாலும் ஆகிவிட்டுப் போகட்டும். ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது மக்கள் மெளனமாக இருந்து அரசு நடவடிக்கையை ஆதரித்தது பற்றி நண்பர் ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். " யார் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் சரி, ஏதாவது ஒருவராவது பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக பேசுவார்கள்.இவ்வளவு ஏன், வீரப்பன் இறந்ததற்கே கூட, மனித உரிமைகள் மீறப்பட்டதாய் பயங்கர உறுமல் கிளம்பிற்று. ஏன் ஜெயேந்திரரிடம் எல்லோருக்கும் இத்தனை வெறுப்பு..?? " என்றார். எனக்குத் தெரிந்த வகையில், உடனே நினைவுக்கு வந்ததை வைத்து ஜல்லி அடித்தேனே ஒழிய விளக்கமாக சொல்லவில்லை. கீழே உள்ளது விகடன்.காம்மில் இருந்து ஆழமாக கிளறி, தரப்பட்ட அலசல். விகடனுக்கு துவேஷம் ஏதும் இல்லை என்று நான் நம்புகிறேன். இனி ....
---0----0----0---0----
சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது ஜெயேந்திரருக்கு சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது போல! என்ன தான் சுவையானதாக இருந்தாலும் சதா அதைச் சாப்பிட்டால் நன்றாகவா இருக்கும்? ஆனால் ஜெயேந்திரருக்கு திகட்டவே இல்லை. மனிதர் சர்ச்சைகளில் சிக்காமல் இருந்த காலம் தான் குறைய!
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் மேலாளர் சங்கர்ராமன் செப்டம்பர் மாதம் 3ம் தேதி கோயில் வளாகத்துக்குள் வைத்தே கொலை செய்யப்பட்டார். இது காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரின் உத்திரவுப்படி தான் நடந்தது என்று போலீஸ் சொல்கிறது. இதனடிப்படையில் நவம்பர் 11ம் தேதி தீபாவளி நாளில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். வேலூர் சிறைக்கும் கொண்டு போகப்பட்டார். கைதிகளுக்கு நன்நெறி புகட்டக்கூட ஜெயேந்திரர் இதுவரையில் சிறைச்சாலைப் பக்கம் போயிருக்கமாட்டார். முதல்வர் ஜெயலலிதா இந்த அனுபவத்தையும் ஜெயேந்திரருக்கு கொடுத்துவிட்டார்.இந்த விஷயம் பற்றிக் கேள்விப்பட்டதுமே ‘இப்படி இருக்குமா?’ என்று கேட்ட சிலர் ‘இப்படிச் செய்யலாமா?’ என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். நாம் யோசிக்கப் போவது ஜெயேந்திரர் பற்றித்தான். சங்கர்ராமன் விவகாரம் அல்ல.
ஜெயேந்திர சரஸ்வதிக்கு அவர் வீட்டில் வைத்த பெயர் சுப்பிரமணியன். வேதங்களில் மகனுக்கு ஈடுபாடு இருப்பதாகச் சொல்லி மகாபெரியவர் சந்திரசேகர சரஸ்வதியிடம் சுப்பிரமணியம் ஒப்படைக்கப்பட்டான். யாரையும் அவ்வளவு சீக்கிரத்தில் நம்பாத மகாபெரியவர், ‘வேதப்பாட சாலையில் படிக்க வையுங்கள்’ என்று சொன்னார். ஆறு ஆண்டுகள் அங்கு படித்த பிறகு 1954 மார்ச் 22 ம்தேதி ஜெயேந்திர சரஸ்வதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு காஞ்சி மடத்தின் 69வது மடாதிபதியாக அமர்த்தப்பட்டார்.
1.
மூத்தவர் அளவுக்குப் படிக்கவில்லை என்றாலும் மூத்தவர் போலப் படித்தவர் ஜெயேந்திரர். எல்லாவற்றையும் அச்சு அசலாக அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற பிடிவாதம் இல்லாமல் காலத்தின் தேவைக்கேற்ப சில மாறுதல்கள் செய்து கொண்டால் மட்டுமே மதத்தைக் காப்பாற்றமுடியும் என்று நினைத்துச் செயல்பட்டதால் மகாபெரியவருக்கும், இவருக்கும் வேறுபாடு எழுந்தது.
2.
ராம ஜென்ம பூமி விவகாரத்தைக் கிளப்பி.. இந்தியாவில் புதுப் பிரச்னைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட போது அதற்கு ஆதரவாகக் கருத்துக் கூறினார் ஜெயேந்திரர். வேதம் தவிர வேறு எது பற்றியும் யோசிக்காத பெரியவர் ‘அவரது அரசியல் கருத்துகளுக்கு அவரே பொறுப்பு. அவற்றை மேற்கொள்வது அவரது விருப்பம்’ என்று பதில் தருமளவுக்கு தீவிர கருத்துகளை வெளியிட ஆரம்பித்தார்.
3.
இந்த நிலையில் தான் திடீரென்று காணாமல் போனார் ஜெயேந்திரர். 23.08.1987ம் நாள் நள்ளிரவில் இது நடந்தது. ‘மூன்றாண்டுகளுக்கு முன்னரே நாட்டு நலப்பணிக்கு போகப்போவதாகச் சொன்னார். அதற்காகவே சங்கர விஜயேந்திரனை இளைய மடாதிபதியாக என்னைக் கேட்காமலேயே நியமித்து விட்டார்’’ என்று மகா பெரியவர் விளக்கமளித்தார். இது சட்டச்சிக்கலான போது.. ‘ஜெயேந்திரர் தனக்கு வாரிசாக விஜயேந்திரருக்கு பரிவட்டம் என்ற பட்டுத்துணியை 1984ல் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் வைத்து பரிசளித்துவிட்டார். இது தவிர வேறு சடங்கு எதுவும் தேவையில்லை’ என்று கூறப்பட்டது. ஆனால் செப்டம்பர் 8ம் தேதி மீண்டும் காஞ்சி மடத்துக்கு வந்து சேர்ந்து விட்டார். சங்கராச்சாரியார்கள் மடத்தைவிட்டு வெளியில் செல்லும் போது தண்டி எனப்படும் பிரம்பினை விட்டுச்செல்ல மாட்டார்கள். ஆனால் அதை விட்டுசென்றார் ஜெயேந்திரர்.
4.
அதன் பிறகு ஜெயேந்திரர் திராவிட இயக்கத்தவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ‘தமிழ் தாய் மொழி என்றால் சமஸ்கிருதம் தந்தை மொழி’ என்று ஜெயேந்திரர் சொல்ல.. இதற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதியும், தி.க.தலைவர் வீரமணியும் பதில் சொல்ல விவாதம் சூடு பிடித்தது.
5.
‘காமாட்சியை வேண்டினேன். கருணாநிதிக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது’ என்று ஜெயேந்திரர் சொன்னதாக பரவிய செய்தி கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
6.
ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமில் கலந்துகொண்டு தீவிர இந்துத்துவா கருத்துக்களைப் பரப்பினார்.
7.
‘கணவன் இறந்த பிறகு மனைவி உடன்கட்டை ஏறுவது அந்தப் பெண்ணின் விருப்பத்தைப் பொறுத்தது’ என்று சொல்லி திடுக்கிடவைத்தார்.
8.
தமிழ்மொழியில் கோயில்களில் அர்ச்சனை செய்வதற்கு எதிராகக் கருத்துக்கூறிய ஜெயேந்திரருக்கு எதிராக பெரிய இயக்கமே எழுந்தது. இவரின் ஆலோசனைப்படியே மதமாற்றத்தடைச் சட்டத்தை ஜெயலலிதா கொண்டுவந்ததாகச் சொல்லப்பட்டது.
9.
இந்துக் கோயில்களில் கூட சைவ, வைணவ வேறுபாட்டுடன் கருத்துச் சொன்னதாக இவர் மீது சந்தேகம் கிளம்பியது.
10.
கடந்த ஆண்டு மீண்டும் பாபர் மசூதி பிரச்சனையைக் கையிலெடுத்தார் ஜெயேந்திரர். இந்து&முஸ்லீம் ஒற்றுமைக்காக இந்த விஷயத்தில் தலையிட்டதாக சொன்னார். ‘‘அயோத்தியில் ராமர்கோயிலும் மசூதியும் அருகருகில் கட்டப்படும். மதுரா, காசி நகரங்களில் உள்ள மசூதிகள் உள்ள நிலப்பரப்பை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்ற சமாதானத்தை முஸ்லீம் அமைப்புகள் ஏற்கவில்லை. இந்து அமைப்புகளும் ஏற்கவில்லை. நொந்து போன ஜெயேந்திரர் ‘இனி ராமர் கோயில் பிரச்சனை பற்றிப் பேசவேமாட்டேன்’ என்று சொல்லி அமைதியாகிவிட்டார்.
11.
அதற்குப் பிறகு தான் சங்கர்ராமன் விவகாரம்.இது ராமர் கோயில் விவகாரத்தை விடச் சிக்கலாகிக் கொண்டிருக்கிறது. எப்போதும் ஏதாவது ஒரு சிக்கலில் சிக்கிக் கொள்ளும் ஜெயேந்திரருக்கு இந்த விவகாரம் அவ்வளவு சீக்கிரம் விடுதலை வாங்கித் தருமா? தெரியவில்லை!
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
No comments:
Post a Comment