Friday, January 28, 2005

காலம் தாண்டிய ஓட்டம்

எங்களை எல்லாம் எங்கள் பெற்றோர்கள் எப்படி வளர்த்தார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது இப்போது நினைக்கும்போது.

முக்கியமாக ஊரிலிருந்து வெளியே வந்து தனியே குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு இது புரியுமென்று நினைக்கிறேன். முன் தலைமுறை பெற்றோர்கள் போல இந்த தலைமுறை பெற்றோர் இல்லை. குழந்தைகளிடம் அத்தனை கண்டிப்பு காட்டுவதில்லை. பெற்றுக் கொள்வெதே ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு என்றாகி விடுவதால், செல்லம். கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் போக்கு, சாப்பாடு சாப்பிடுவதில் கூட "இது வேண்டுமா..அது வேண்டாமா..சரி பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடு" என்று குழந்தை வளர்ப்பின் முகமும் முறையும் மாறி வருகிறது.

என் இளமைக்காலம் செல்லமாய்த் தான் கழிந்தது. கடைக்குட்டி, ஒரே பிள்ளை என்பதால் அத்தனை செல்லமென்றாலும், கட்டறுத்து விட்டு வளர்ந்ததாய் எப்போதும் நினைவில் இல்லை. எங்களுடன் சேர்ந்து பாட்டுப் பாடும், டான்ஸ் ஆடும் , சகலவிதமான புத்தகங்களையும் படிப்பதற்கு அனுமதி தந்திருந்த, என் வகுப்புத் தொழிகள் வீட்டுகு வந்தால் கிண்டலடிக்கும், சினிமா பார்த்து விட்டு கூட உட்கார்ந்து விவாதிக்கும், பனிரண்டாவது படிக்கும்போது பெங்களூரில் "பீர் சாப்பிடறியா" கேட்ட, அப்பா, அப்பா தந்திருந்த சகல சுதந்திரங்களும் முறை தவறாமல் உபயோகப்படுத்தப்படுகிறதா என்று கண்காணித்துக்கொண்டிருந்த அம்மா, மிரட்டிக் கொண்டே இருக்காமல் பழகிய தமக்கைகள் என்று ஜாலிதான். ஆனால், ஏதாவது தப்பு செய்தால் என்ன நடக்கும் என்று ஸாம்பிள் காட்டுவது மாதிரி என்று அவர்கள் நடந்து கொண்ட ருத்ரட்தாண்டவ சம்பவங்களும் ஞாபகம் இருந்தது என்பதால் வண்டி தடுமாறாமல் ஓரளவு நேர்க்கோட்டில் ஓடிக் கொண்டிருந்தது.

வீட்டில் உள்ளவர்கள் கடுமையாக பேசி, கொபித்துக் கொண்டு அடித்தாலும், அவர்கள் அடிக்கிறார்களே என்று வந்த கோபத்தை விட, இப்படி பண்ணிவிட்டோமே என்கிற தன்னுணர்வும், சுயபச்சாதாபமுமே அதிகமாக இருந்தது. அதற்கு காரணம் சாதாரண சமயங்களில் நான் அனுபவித்த சுதந்திரமே என்று நினைக்கிறேன். அப்பா என்றால் அளவுக்கு மீறிய பக்தியோடும், மரியாதையோடும் இருக்கும் சில குடும்பங்களை பார்த்திருக்கிறேன். அது தவறு என்று சொல்ல விழையவில்லை. ஆனால் மரியாதையும், பக்தியையும் விட, அன்பும் ஸ்நேஹமும் தான் முக்கியம் என்று எனக்குத் தோன்றுகிறது. அது முக்கியம் என்று உணர்த்தப்பட்டதால்தான், பதின்ம வயது சிக்கல் காலங்களில் கூட எனக்கும் என் பெற்றொருக்கும் இடையே இருந்த உறவுச் சங்கிலி பலமாகவே இருந்தது. அப்படி இருக்கும் பெற்றோர், என் திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் என் கூட விவாதிப்பதையே முழுதாக தவிர்த்து விட்டனர் என்பது இன்றளவும் வருத்தம்தான் - " கூட உட்கார்ந்து பேசினா கன்வின்ஸ் பண்ணிடுவானோன்னு பயமா இருக்கும்மா " என்று என் தமக்கையிடம் அவர் சொன்னதை பின்னாளில் கேட்டபோதும் கூட.



சூர்யாவை கேஷுவல் ஆகத் தான் வளர்த்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் அவனுக்கு ச்சும்மா ச்சும்மா பயமெல்லாம் கிடையாது. ஆனால், கொஞ்சம் எல்லை தாண்டினால் நானும் சரி, அவன் அம்மாவும் சரி, என்ன ரேஞ்சுக்கு போவோம் என்று அவனுக்குத் தெரியும். இந்த தலைமுறை பெற்றோர்களை ஒப்பிடும்போது நாங்கள் இருவருமே கண்டிப்புக்காரர்கள் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. சூர்யாவுக்கு விவரம் தெரிந்து அவன் ஆட்சேபிக்கும் வரை நாங்கள் இப்படித்தான் இருக்கப்போகிறோம். அந்த வயதிற்குள் எங்களது அன்பையும், கோபத்தின் நோக்கத்தையும் தன்மையையும், காரணங்களையும் அவனுக்கு புரிய வைத்துவிட்டால், அதற்கப்புறம் இத்தனை ஸ்ட்ரிக்ட் ஆக இருக்க வேணும் என்கிற அவசியம் கூட இல்லை. பிறகு அவன் பதின்ம வயது மோடுக்கு நானும் மாறிவிட்டால், சொச்ச காலம் ஜாலியாக போய் விடும்.

"கல்யாணம், வாழ்க்கை விஷயங்களில் கூட நான் தலையிடப்போவதில்லை. நன்றாகப் படித்துக் கொண்டு, படிப்பு/வேலை என்று அவன் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டால், வீட்டை அவனிடம் ஒப்படைத்து விட்டு, அக்கடாவென்று மாயவரம் கிராமப்பக்கம் எங்காவது ஒதுங்கி விடுவேன்" என்று சொன்னால், சூர்யாவின் அம்மா நக்கலாக சிரிக்கிறாள்.

எனக்குப் புரியவில்லை...உங்களுக்கு..??

2 comments:

  1. ஐந்து வயது வரையில் ராணி அல்லது ராஜா மாதிரி குழந்தைகளை நடத்தணும்; அதற்கப்புறம் பதினாறு வயது வரை நல்ல கண்டிப்புடன்; பிறகு தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட பின் தோழன் / தோழி மாதிரி - என்று குழந்தை வளர்ப்பு பற்றி ஒரு பழமொழி உண்டுங்க. அதனால் ஓரளவு கண்டிப்பு காட்டுவதில் தவறில்லை. ஆனால் காயப்படுத்தாமல் இருப்பது முக்கியம். கண்டிப்பாக இருந்தாலும், ஏன் எதற்கு என்று காரணங்களை விளக்குவது மிக அவசியம். பகிர்ந்து கொள்ளுதலும் அப்படியே. சின்ன சமாசாரங்கள், தங்கள் ரசனைகள், கருத்துக்கள் என்று இப்படி குழந்தைகளோடு நம் வாழ்வின் பல அம்சங்களை - அவர்கள் லெவலுக்கு நாமும் குழந்தையாகி (!!!) அல்லது நம்ம லெவலுக்கு அவர்களுக்குப் புரிய வைத்து ரசனைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது தோழமை உணர்வு வலுப்படும். நல்ல பதிவு :-)

    ReplyDelete
  2. உங்கள் கருத்துக்கு நன்றி மேடம்.

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...