Wednesday, January 26, 2005

கைவீசம்மா கைவீசு..உலாப்போகலாம் கைவீசுதேர்தல் நேரத்தில் வந்தோ அல்லது மற்ற முக்கியமான அரசியல் நிகழ்ச்சிகளின்போதோ எழுத்தாளர் மாலன் வலைப்பதிவது வழக்கம். ஆனால் இப்போது வாசகன் என்கிற தன் புதிய வலைப்பதிவில் எழுதத்துவங்கி இருக்கிறார். எழுதிய மூன்றுமே அவருக்குள் இருக்கும் வாசகனை பேச விட்டிருக்கும் முயற்சிகள். வாக்கப்பட்ட பூமி புத்தகத்தில் உள்ள ஒரு கிராம தேவதையின் வாஞ்சை குறித்தும், பொன்னியின் செல்வனின் மேல் பித்து கொண்ட ஏராளமான வாசகர்களுக்கான கேள்வியாகவும், கட்டபொம்மன் மரணதண்டணையை நிறைவேற்றிய பானர்மேன் சாட்சியம் பற்றியும் எழுதப்பட்ட பதிவுகள் அவை. சன் டீவி வேலைகளுக்கு இடையேயும், திசைகள் ஒன் மேன் ஆர்மியாக இருப்பதற்கும், மற்ற சமூக/அரசியல்/எழுத்து/இலக்கிய வேலைகளுக்கு நடுவே, தான் வாசகனாக உணர, வலைப்பதிவுக்கு அவரைப் போன்றவர்கள் வருவதில் இருந்து, வலைப்பதிவுகளின் தனித்தன்மையும் முக்கியமும் ஒருவாறு விளங்குமென நினைக்கிறேன். இதைப் போலவே பத்ரியின் கிராம முன்னேற்றம் சம்பந்தமான வலைப்பதிவில் பத்திரிக்கையாளர் சுதாங்கன் பின்னூட்டம் பார்த்தேன். நடு முதுகில் சில்லென்றிருந்தது. இன்னமும் எத்த்னை பிரபலங்கள் நம் எழுத்துகளை எல்லாம் வாசிக்கிறார்களோ...வலைப்பதிவர்களே...எழுதும்போது இவர்கள் எல்லாம் நம்மைப் படிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு எழுதுங்கள். கொஞ்சம் "கிக்" ஆக இருக்கும்.

வாக்கப்பட்ட பூமி பற்றி எழுதும்போது மாலன் கண் கட்டிக்கு அமிர்தம் தந்த கிராமத்து தாய் பற்றி எழுதி இருந்தார். பாக்யராஜ் படத்தில் இதை உபயோகப்படுத்தி இருந்தால் வேறு மாதிரி எழுதி இருப்பார் பாக்யா. சினிமாவில் எப்படி ஊட்டப்படுகிறதோ, எப்படி உருவகிக்கப் படுகிறதோ அப்படியே பார்வை திருகிப் போகிறது நம்மில் பெரும்பாலோனோர்க்கு- நான் உள்பட. ஜெர்மனியில் இருந்து வலைப்பதியும் தோழி சந்திரவதனா ஏராளமான வலைப்பதிவுகள் வைத்திருந்தாலும் அவருடைய முக்கிய வலைப்பதிவு ஒன்று பெண்கள் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகளை, பிரசவத்தை, இன்ன பிற பேசத் தயங்கும் விஷயங்களை ( தமிழ் சினிமாவின் சந்தைப்பொருளை) பேசுகிறது. பத்திரிக்கைகளிருந்து எடுத்து இடப்படுபவை என்றாலும், ஒரே இடத்தில் கிடைக்கும் அருமையான விவரமான செய்திப் பெட்டகம் அது. அமெரிக்க பெண்களில் எட்டில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் வருகிறதாம். கடந்த வாரம் அறுவைச்சிகிச்சையில் மார்பகங்கள் அகற்றப்பட்ட என் அமெரிக்க தோழியுடன் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார். இம் மாதிரியான சூழ்நிலைகளில், பெண்களுக்கு அவர்கள் உடல் பற்றிய, அதன் உபாதைகளைப் பற்றிய அறிவும், விவாதிக்கக் களமும் தேவைப்படுகிறது. மகளிர் வலைப்பதிவை நான் அப்படிப்பட்டதொரு இடமாகக் காண்கிறேன்.

இன்று என்று ஒரு வலைப்பதிவு சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. புவனபத்ரஜிக்கியாக மடற்குழுவில் அவதாரம் எடுத்த "தகடு-தகடு" குமார் துகள்கள் என்கிற பதிவில் தன் புனைவுப் படைப்புகளை இட்டுக் கொண்டிருந்தார். அப்போதே நினைத்ததுண்டு - இவர் ஏன் புனைவுக்கு கொடுக்கும் அளவுக்கு ரிப்போர்ட்டிங்குக்கு கொடுக்க மாட்டேன் என்கிறார். என்று. அவருடைய துகள்களிலேயே சொல்லலாம் என்று கூட நினைத்திருக்கிறேன். பெரிய எழுத்தாளர் அவர். அவருக்கு நாம் என்னத்தை சொல்லி ந்ம் அதிகப்பிரசங்கத்தைக் காட்ட என்று ஒரு யோசனை. வாளாவிருந்து விட்டேன். கடைசியில் அவரும் தானாகவே இன்று வில் இறங்கி விட்டார். வாழ்த்துகள்.

செஸ் விளையாட்டுக்காக ஒருவர் வலைப்பதிவை வைத்துக் கொண்டு தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். ஆரம்பிக்கும்போதே இதற்கு எந்த அளவு வரவேற்பு இருக்கும் என்று அவருக்கு தெரிந்திருந்தாலும், வலைப்பதிவு ஆரம்பித்து நெடுநாள் ஆனவர்களே புலம்பும் பின்னூட்டம் சார்ந்த புலம்பல்கள் இல்லாமல் ஒரு கர்மயோகியை போல அவர்பாட்டுக்கு கீதாசாரத்தின் முழு வடிவமாக எழுதிக் கொண்டிருக்கிறார். கீப் இட் அப் கண்ணண். சோர்ந்து போகாதீர்கள். நடுவே ஒரு க் இருந்திருந்தால், உங்கள் பின்னூட்டப் பெட்டி இந்நேரம் நிரம்பி வழிந்திருக்கும். ஆனால் அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஹி..ஹி...நீங்கள் செஸ் எழுதுங்கள்.

பெட்டிக்கடை வைத்து, கடை விரித்தேன் கொள்வோர் பலருண்டு என்று ரொம்ப ஆப்டிமிஸ்டிக்காக இறங்கி இருக்கும் கிச்சுவின் வலைப்பதிவு ஒழுங்காக வடிவமைக்கப்படிருக்கிறது. பதிவுகளை அழகாக பிரித்து வைத்திருக்கிறார். எழுதுவதில் கொஞ்சம் நக்கல் நையாண்டி கூட இருக்கிறது. ஆனால் இடைவெளிதான் கொஞ்சம் அதிகமோ என்று ஒரு யோசனை. ஒரு வேளை அதிகமாக கடை விரித்தால் பெட்டிக்கடை கூட்டம் தாங்காது என நினைத்தாரோ என்னவோ..?? என்னைப் போலவே நிறைய பொம்மை போட்டு அசத்துகிறார். ஆனால் அத்தனையும் பதிவிற்கு சம்பந்தப்பட்ட பொம்மைகள். அதுதான் ஒரே வித்தியாசம். பேருக்கு ஏத்த மாதிரி கிச்சு கிச்சு மூட்டாமல் உருப்படியாக எழுத முயன்றிருக்கிறார்.

வெண்பாவுக்கு பதிவு போட்டு இன்னொருவரின் ராக்கெட் வேகத்தால் பின் வாங்கினேன் என்று சொக்கனால பாடல் பெற்ற பதிவு இது. பேர் புஸுபுஸுவென்று இருந்தாலும் போட்டிருக்கும் ஐட்டங்கள் எல்லாம் ரூர்கேலா எஃகு ரகம். மடலாடற்குழுவில் வெண்பா ரசிகர்கள் எல்லாம் இதைப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. "நேர் நேர் ஹேமா" "நிரை நேர் கமலா" வோ என்னவோ சொல்லிக் கொண்டு வெண்பா பயிலுபவர்கள் எல்லாம் இதைக் கட்டாயம் பார்க்க வேண்டும். மாதிரிக்கு கொஞ்சம்

ஜெயிலில் ஜெயேந்திரர் ஜெபமும் தபமுமாக
ஒயிலாய்ப் பொழுதைக் கழிக்கின்றார் - பெயிலில்
வருவது கஷ்டமாம் வந்தாலும் விடமாட்டார்
அறுவது வயதில் அவஸ்தை.

தயிர்சாதம் சாப்பிட்டு தாச்சுண்டு எழுந்துண்டு
உயிர்வளர்க்கும் ஜெயேந்திரரைப் பாரங்கே - மயிரே
போச்சென்றுதானே பொல்லாப்பு தனைச்சேர்த்தார்
ஆச்சார்யார் அம்பேல் இனி.

தூக்கம் வருதுப்பா...இன்னைக்கி அவ்வளவுதான்.

( படம் : அஸின் - அஜித் ( நற..நற..) )

No comments:

Post a Comment

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...