Monday, January 24, 2005

உலாப்போகும் நேரங்கள் - 1

என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய வரையில் சில விமரிசனங்களை தருவதாக உத்தேசம். படம் ச்ச்ச்சும்மா...ஜாலிக்கு. கண்டுக்காதீங்க. கொஞ்சம் வாசனையா இருக்கட்டுமேன்னுதான் ஜாஸ்மினைப் போட்டேன்.



அஜீவன் என்கிற நண்பரைப் பற்றி, அவர் குறும்படங்களைப் பற்றி ஈழநாதன் மூலமாக அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய Alien Veil என்ற படத்தைக் கூட பார்த்திருக்கிறேன். ஏதோ கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது. விஷயம் என்னவென்றால் நண்பருக்கு சினிமா மேல் பயங்கர வெறி. சினிமாவைப் பற்றிய அவருடைய சிந்தனைகள் தான் ஏறக்குறைய அவருடைய வலைப்பூ முழுவதும் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் என்ன காரணத்தாலோ, படிக்க சுவாரசியம் ஏற்படாதவாறு ஒரு அயர்ச்சி. வலைப்பூவின் வடிவைமைப்பிலா, இல்லை பத்தி பிரிப்பதிலா, இல்லை வண்ணங்கள் தேர்ந்தெடுத்ததிலா..ஏதோ ஒன்று. அஜீவன்.காம் என்ற தன் வலைத்தளத்தினை கூட, தனியாக வலைப்பூ படிப்பவர்களின் கவனத்தினை ஈர்க்கும் வண்ணம் செய்யாது, டிஸ்க்ரிப்ஷன் கூட சேர்த்து இட்டிருக்கிறார். தன் படங்களை பற்றி, சினிமா ஆர்வத்தினை பற்றி, தன் வலைத்தளத்தைப் பற்றி அருண் வைத்தியநாதன் எப்படி வெளிப்படுத்தி இருக்கிறார் என்று அஜீவன் ஒரு முறை பார்த்து தன் தளத்தினை மீளத் திருத்தினால், இன்னமும் பல பேரை சென்றடைவார் என்று எண்ணுகிறேன்.

அலெக்ஸ் பாண்டியன் காவேரிக்கரை ஓரமாக வரச்சொல்லி தமிழ்மணம் மூலமாக கொஞ்ச நாள் இழுத்தார். ஆனால் பார்த்த இரண்டு / மூன்று முறையும் எல்லே சுவாமிநாதன் படைப்புகளாக போட்டுக் கொண்டிருந்தார். நானே இப்படி எனக்குப் பிடித்த படைப்புகளை அங்கங்கே பீராய்ந்து போடுவது வழக்கமென்றாலும், இத்தனை ரெகுலராக செய்வதில்லை. ஏனெனில் படிப்பவர்கள் " அட இந்தாள் என்னப்பா..., மத்தவங்க எழுதறதையே போட்டுத் தாக்கறான்" என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது. அப்படியே மற்றவர் எழுத்தை எடுத்துப் போட்டாலும், அதை பற்றி தன் கருத்து என்ன..?? எதனால் எடுத்துப் போட்டேன் என்று சின்ன விளக்கம் தருவது நல்லது. விளக்கம் - யாருக்குமல்ல. நமக்கே நமக்கு. நண்பர் அலெக்ஸுக்கு நல்ல செளஜன்யமான ஸ்டைல் இருக்கிறது. தமிழ்நாட்டு குடும்பநலத்திட்ட அட்வைஸ் கேட்ட மாதிரி இரண்டு பதிவுகளுக்கிடையே "இவ்வளவு" பெரிய இடைவெளி எல்லாம் அவர் விடக்கூடாது. இன்னதுதான் எழுதவேண்டும் என்று கட்டுப்படுத்திக் கொள்ளாது, கொஞ்ச நாள் மானாவாரியாக எழுதினால், பிறகு கொஞ்சம் பிடிபடும் என்று நினைக்கிறேன். . ஸ்டைல் பிடிபட்டவுடன் உள்ளடக்கம் மற்ற லொட்டு லொசுக்குகளை செட் செய்து கொள்ளலாம். பிறகென்ன..நிஜமாகவே எந்தப் பக்கம் உரசினாலும் பொறி பறக்கும் அவர் வலைப்பூவில்.

அல்வாசிட்டியின் போட்டுத்தாக்கு என்ற தலைப்பே அவர் வலைப்பூ என்ன மாதிரி இருக்கும் என்று ஒரு விதத்தில் சொன்னாலும், ஆசாமி இப்போதுதான் செட்டாகி, கொஞ்சம் முனைந்து எழுத ஆரம்பித்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். எப்படி எழுதலாம் என்று அவருக்கு ஏற்கனவே தெரிந்து விட்டதால், எதை எழுதலாம் என்பதையும், எவ்வளவு ஆழமாக எழுதலாம் என்பதையும் அவர்தான் இனி தீர்மானித்துக் கொள்ளவேண்டும். அவருடைய மிகப் பழைய படைப்புகளையும் படிக்கும் வகையில், அவருடைய டெம்ப்ளேட் அமைப்பை மாற்றிக் கொள்வது நல்லது. ஏனெனில் ஒரு பதிவால் கவரப்பட்டவர்கள், உடனடியாக பழைய படைப்புகளை படிக்க விரும்புவார்கள். அந்த ஆசை நிறைவேறுவதை ஒட்டிதான், அவர்கள் உங்கள் வலைப்பூவுக்கு மறுபடியும் வருவார்கள். அதனால், அல்வாசிட்டி!!! டெம்ப்ளேட்டை போட்டுத் தாக்கு.

ஆசாத் பாய் பற்றி ஏற்கனவே இங்கே எழுதி இருக்கிறேன். அவரின் எண்ணம் வலைப்பூ இன்னமும் அவருடைய சகலவிதமான எண்ணங்களையும் வெளியே கொணரவில்லை என்று என் எண்ணம் ( அப்பாடா..எத்தனை எண்ணம்..??) . அவர் வலைப்பதிவுகள் எல்லாமே மடலாடற்குழு விவாதங்களின் நடுவில் இடப்பட்ட அவர் மடல்கள். எனவே முன்னும் பின்னும் இல்லாமல் பதிவுகள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருப்பது போல் ஒரு பிரமை. மடலாடற்குழுவில் இடப்பட்ட மடல்களை இங்கே ஒட்டும்போது, முழு பதிவாக தெரிவது மாதிரி சிற்சில மாற்றங்கள் செய்யலாம். பதிவின் தலைப்புகளை கொஞ்சம் மாற்றி வைக்க முனைந்தால், "சிலம்பம்" பதிவுக்கு அடுத்து "பர்வீன்பாபி" பதிவுக்கு டகாலென்று தாவுவதை, அதன் விளைவான அதிர்ச்சியை மட்டுப்படுத்தலாம். அவ்வப்போது வெப்லாகிமேஜஸ்.காம் உதவியுன் பொம்மை போட்டால், படிக்கிற என்னைப் போன்ற அரை டிக்கட்டுகள் சுவாரசியமாக படிப்பார்கள். பாயின் வலைப்பூ லே அவுட், பழைய கால டயரியை படிக்கிற மாதிரி இருக்கிறது. இளமை துள்ளும் பாய் மனசுக்கு ஏத்த மாதிரி ஒரு லே அவுட் போட்டா, அலேக்...

சுறுசுறுப்பா எழுத ஆரமிச்சு கலக்கிக் கட்டின ஆசிப்பு, ஏன் இப்படி சுரத்தே இல்லாம போயிட்டாஹன்னு வெளங்கலை. படிக்க ஜாலியா இருக்குமுல்லா...எழுதுவே..( அதென்ன.. வாப்பான்னு வாய் நிறைய கூப்பிடாம, ஊடகச்செல்வர்னு லேடியோ பொட்டி ஆசாமி மாதிரி விளிக்கிறீரு..?? )

2 comments:

  1. என் அருமை மூக்கே,

    இந்த ஆசாமி படைத்த அல்வாவையும் முகர்ந்து, தரத்தை சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

    உங்கள் விமர்சனத்தைப் பார்த்தவுடன் ஒரு கிலோ அல்வாவையும் சேர்ந்து அடிச்ச மாதிரி கிரக்கமா தான் இருக்கு.

    இப்போ தான் அல்வா எப்படி இருக்கனும்னு ஒரு பிடி கிடைக்கிறதுங்கிறதை முகர்ந்துப் பார்த்து சூப்பரா அட்வைஸ் கொடுத்திருக்கீங்க. இருந்தாலும் இந்த கத்துக் குட்டி கிண்டுற அல்வா சில சமயம் சவ சவன்னு இருக்கிறதும், சில சமயம் இனிப்பு தூக்கல இருக்கிறதும், சில சமயம் நெய் ஜாஸ்தி ஊத்தி கொழ கொழன்னு பண்றதும் உண்டு. நம்ம தமிழ்மணம் லாலா கடையில எல்லாரும் டேஸ்ட் பண்ணி பார்த்துட்டு, இந்த அல்வா நல்ல இருக்கு, இந்த அல்வால இனிப்பு கொஞ்சம் சேர்க்கனும்னு சொல்லும் போது தான் நல்ல அல்வா கிண்டும் ஐடியாவே வருது இல்லையா? இன்னும் அல்வா கிண்டுவேன். சாப்பிட்டுட்டு நல்ல இருக்கு இல்லைங்கிறதை தயங்காம சொல்லுங்க.

    நம்ம அல்வா கடை டெம்ப்ளடை மாத்தனும்னு தான் நினைக்கிறேன். ஆன என்ன அவ்வளவு சிரமம் எடுத்துகிறதுல்ல. சீக்கிரமே டெம்ப்ளட்டை மாத்த முயற்ச்சி பண்றேன்.

    ReplyDelete
  2. மூக்கரே,

    எமது வலைப்பதிவை விமர்சனம் செய்து எடுத்திட்டமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி. நேரமின்மை காரணமாக, வார இறுதிகளில் தான் பெரும்பாலும் எழுத நேரம் கிடைக்கும் என்பதால் இரண்டு பதிவுகளுக்கு இடையில் இடைவெளி ஏற்படுகிறது. மேலும் சூட்டோடு சூடாக பல விஷயங்களையும் ஓரிரு பாராக்களில் பகிர்ந்து கொள்ள ஆவல்தான். பார்ப்போம். (வார நாட்களில் மற்ற எல்லோருடைய பதிவையும் படிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது.) எல்லே சுவாமி அவர்களின் படைப்புகளை எடுத்துப் பதிவதற்கான காரணங்களும் முதல் பதிவில் இட்டிருக்கிறேன். விரிவாக இன்னோர் பதிவில் எழுதுகிறேன்.

    நமது மாவட்டக்காரர்கள் என்றாலே ஒரு தனி பிரியம் தான் :-)

    - அலெக்ஸ்

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...