Friday, April 30, 2004

குழலூதி மனமெல்லாம்
=================

மகரந்தத்தின் புண்ணியத்தில் தும்மிக் கொண்டே காலையில் கைக்குட்டை சளியனாக அலுவலகம் வந்தேன். வெளியில் நின்று புகையூதிக் கொண்டிருந்த கேத்தி ட்யூபெட்ஸ் " ஹாய்..சுண்டா " என்றாள் வழக்கம் போல் "ர்" தொலைத்து. இங்கெல்லாம் பெண்கள்தான் அதிகம் சிகரெட் குடிக்கிறார்கள். அது ஒரு ஆச்சரியமான விஷயம்தான். நம்மூரில் சிகரெட் பிடிப்பது ஆண்மையின் அடையாளமோ என்று மெல்லிசாக ஒரு மயக்கம் உண்டு. சீனியர் ஓபராய், சிசர்ஸ் குடித்துக் கொண்டே பைக் ஓட்டுவதைப் பார்க்க அந்தக் காலத்தில் ஒரு கூட்டமே உண்டு. ரஷ்யாவில் நம்மூர் சார்மினாருக்கு ஸ்த்ரீ சம்போகமே சித்திக்குமாம்.

அது மட்டுமல்ல. என் ஸ்நேகிதிகளிலேயே கொஞ்சம் பேருக்கு சிகரெட் வாசனை(?!!) கொஞ்சம் பிடிக்கும் என்று சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். நிழல் நிஜமாகிறது சஞ்சீவி விடும் வளையங்களை மறக்க முடியுமா.. ... என்று சொல்வார்கள் கண்ணில் கிறக்கத்துடன். "சில நேரங்களில் சில மனிதர்கள்" கங்காவுக்கும் இதே விருப்பம் உண்டு என்று உங்களுக்குத் தெரியும்.

ஆசை யாரை விட்டது......

என் லீலா விநோதங்களில் மேற்சொன்ன ஆறாவது விரலும் சேர்ந்தது தனிக்கதை. மும்பையில் 1992 ல் கொஞ்சநாள் HCL ல் மார்க்கெட்டிங் ஆசாமியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். மார்க்கெட்டிங்கிற்கு பேர் போன HCL சேல்ஸ் கூட்டமே துடிப்பான கூட்டம். ஒரு டப்பாவில் பசுஞ்சாணத்தை கொடுத்தால் அதையே ஏகப்பட்ட வேலையில் விற்று விடுவார் என்று HCL அஜய் செளத்ரிக்கு பேர் உண்டு அந்த நாளில். ஆரம்ப நாள்களில் சீனியர்களொடு cold calls போகும்போது ஒவ்வொரு விசிட்டுக்கும் நடுவே காஃபி/சிகரெட்டோடு இளைப்பாறிக் கொள்வார்கள். காப்பி மட்டும் குடித்து விட்டு தேமே என்று உட்கார்ந்திருப்பவனை சிகரெட்டை கொடுத்து வம்புக்கு இழுப்பார்கள். அதையும் தனியாகத் தான் ட்ரை பண்ண வேண்டும் என்று காத்திருந்தேன்.

4square

தனியே ஒரு முறை மும்பை , ஹார்பர் லைன் பகுதியில் உள்ள ரே ரோட் ப்ரித்தானியா ஆபீஸ் சென்றிருந்தேன். மறுபடி அலுவலகம் வருமுன் , " சரி, இன்று ஊதிப் பார்த்து விடுவோம் ' என்று ஒரு Four squares சிகரெட் வாங்கினேன். பைய வாயருகில் கொண்டுபோய், கொளுத்தி புகை விட்டேன். எல்லோருக்கும் வரும் அந்த முதல் முறை ' லொக் லொக் " எனக்கு வரவில்லை. அப்பவே ரொம்ப ப்ரொபஷனலாக அடித்து இருக்கிறேன் போல. லேசாக சுட்ட அப்பளம் வாடை வந்தது. ஆயினும் அது பழக்கமாகவில்லை. மும்பையில் இருந்த வரை தண்ணி அடிக்கும் போது மட்டும் தம அடித்துக் கொண்டிருந்தேன். உணர்ந்தவர்களுக்கு தெரியும்.....சூப்பர் காம்பினேஷன் அது.

பிறகு தமிழ்நாட்டில் நெக்ஸஸ் ஸில் வேலை பார்க்கும்போதுதான் இது அதிகமாயிற்று. திருச்சி கிளையில் பணிபுரிந்த அத்தனை பேரும் ஏறத்தாழ இளைஞர்கள். ஷோக பேர்வழிகள். மேலும் கிளையை நிர்வகித்தவ்ரும் பிரம்மசாரிக் கட்டை. மக்களை இது மாதிரி விஷயங்களில் அட்ஜஸ்ட பண்ணிக் கொண்டு, கம்பெனி கொடுத்தால் எல்லாரையும் நிர்வகிப்பது எளிது என்ற சூத்திரம் தெரிந்தவர். விளைவு...ஆஃபிஸ் மாதிரியே இருக்காது. காலேஜ் மாதிரி ஒரே கலக்கலாக இருக்கும். பகல் முழுக்க கஸ்டமர்..கஸ்டமர் என்று வேட்டையாடி விட்டு , சாயந்திரம் ஏதாவது ஒரு பாரிலோ, அல்லது அவர் வீட்டிலோ இடது கையில் ஒரு கிளாசை பிடித்துக் கொண்டு, வலது கையில் gold kings உடன் உட்கார்ந்து விடுவோம். ஏதாவது படம் ஓடும். பாட்டு ஓடும். அரட்டை ஓடும். சண்டை நடக்கும்...ஜாலியான நாட்கள் அவை. பாட்டுக் கேட்பது, புத்த்கம் படிப்பது, யோசிப்பது , எழுதுவது , தண்ணி அடிப்பது, அரட்டை என்று பிடித்த இன்ன பிற விஷயங்களுடன் சிகரெட் காம்பினேஷன் போட்டுக் கொண்டு என்னை முழுதுமாய் உள்ளே இழுத்துக் கொண்டது. கொடைக்கானல் போனபோது ஃபாரின் உலக்கை சுருட்டு எல்லாம் பிடித்துப் பார்த்தேன்.ஆனாலும் Gold kings Filter தான் பிடித்த பிராண்ட்.

Gold kings


ஒரு நாளைக்கு இருபது சிகரெட் வரை போகும் போது தான் உள்ளே மணி அடித்தது. ஆள்காட்டி விரலுக்கும் சுட்டு வரலுக்கும் நடுவே விரல் முனையில் கறுப்பு தழும்பானது. ரோஜா நிற நகக் கண்கள் நிறமிழந்தன. உதடுகள் கறுத்த்ப் போயின. கண்களின் விழித்திரை (வெள்ளை பகுதி) கலங்கலாயிற்று. பசியில்லாது உடம்பு மந்தம் ஆனது. மூக்கு நுனியில் எப்போதும் எண்ணை வ்ழிந்து, சின்ன சின்னதாய் கறுப்பு புள்ளிகள் வந்தன. எத்த்னை கழுவினாலும் கை விரல்கள் புகையிலை நாற்றமடித்தன. காஃபி குடித்த வாசனையும் சிகரெட் வாசனையுடன் கலந்து விநோத மணம் கமழ்ந்தது. அடிக்கடி சளி பிடித்தது. இருமும்போது , சகோதரிகள் சந்தேகமாக பார்த்தார்கள்.

ஒரு சுபயோக சுப நாளில், கையில் ஒரு சிகரெட்டை வைத்துக் கொண்டு, நண்பர் கூட்டம் நடுவே, " இதுதான் கடைசி சிகரெட்" என்று சொல்லிக் கொண்டு கீழே போட்டேன். ஜூலை 8, 1996. எட்டு வருஷமாக மறுபடி தொடவே இல்லை. தொடுவதாகவும் இல்லை. பழக்கம் விட்ட புதிதில் வேகமாக முடி கொட்டியது. தண்ணி அடிக்கும் போது கையில் சும்மாவானும் வெற்று சிகரெட்டை வைத்துக் கொள்ளத் தோன்றியது. இப்போது அதுவும் இல்லை. ஒருவேளை இப்படி " வெளியே வந்து விட முடியும் " என்ற நம்பிக்கை இருப்பதனால்தான் எல்லாவற்றிலும் இறங்கிப் பார்க்கிறேனோ என்னவோ...

கடவுளுக்கே வெளிச்சம்.

ஆனால், சிகரெட்டை பொறுத்தவரை தொடாமல் இருப்பதே உத்தமம். இறங்கி விட்டு அல்லல் படுவதற்கு ஒதுங்கி இருப்பது மேல்.

ஒதுங்கி இருந்தால் தான் Male. ஆம் .....

Thursday, April 29, 2004

யாக்கை திரி
=========

மேற்கண்ட பாடலை எழுதிய பாடலாசிரியர் யாராயிருந்தாலும் , என்னை கொஞ்ச நாள் முன்பு பார்த்திருந்தால், சூடாக நாலு வார்த்தை கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்று அதற்கிருந்த அவசியம் போய் விட்டது.

போதுவாக நான் அலுவலகத்தில் யாஹூ சாட்டில் இருப்பதோ அல்லது ஹெட்ஃபோனை காதில் வைத்துக் கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பதோ கிடையாது. இன்று அபூர்வமாக ஆய்த எழுத்து பாட்டுக் கேட்க வேண்டும் என்று தோணிப்போக, ஏற்கனவே டவுன்லோடு செய்து வைத்திருந்ததை ( பாட்டு கேட்காதவனுக்கு டவுன்லோடு எதற்கு என்று கேட்பவர்களுக்கு - நான் அலுவலகத்தில் தான் பாட்டு கேட்க மாட்டேன். காரிலும், வீட்டிலும் கேட்பேன். அவ்ளோ தொயில் பக்தி...) கொஞ்சம் கேட்டேன்.

யாக்கை திரி என்ற பாடலைக் கேட்டு விட்டு நண்பர்கள் அர்த்தம் கேட்டபோது , நடுவில் 'த்' இருப்பதாக நினைத்துக் கொண்டு நான் கொனஷ்டையாக கொடுத்த விபரீத அர்த்தம் நினைவுக்கு வந்தது. பாட்டு அப்படி இல்லை...

யாக்கை (என்பது) திரி (என்றால்) காதல் சுடர் (ஆகும்)

இப்படியே கீழே மற்ற வரிகளையும் படிக்கவும்..

ஜீவன் நதி காதல் கடல்
பிறவி பிழை காதல் திருத்தம்
இருதயம் க்ல் காதல் சிற்பம்.
ஜென்மம் விதை காதல் பழம்



ஆஹா..எப்படி இருக்கிறது..

எதுக்கு ஒழுங்கா 'ச்'சணும், "ப்"பணும், "த்"தணும் ங்கிறது இப்போ வெளங்குச்சு சாமிகளா...

எழுதாக் கவிதை

============

காலையில் அரக்கப் பரக்க
வாக்கிங் போய்
கிடைத்தை தின்று
பார்க்கிங்
லாட் மூடுவதற்குள்
காரை உள்செலுத்தி
ஓடி வந்து காலை மீட்டிங்
தாமதமாய் உள்நுழைந்து
பணியிடத்தில் கூப்பிட்ட
குரலுக்கு ஓடியாடி
மாலை மனையாள் பணிக்கு
விடை கொடுத்து
காய்கறி வாங்கி அடுக்கி
பெற்ற செல்வத்தின்
சாக்கர் க்ளாஸ¥க்கு
போய் வந்து
அதன் முகம் கழுவி
கால் துடைத்து
உடை மாற்றி
சோறும் நீரும் கொடுத்து
தான் குளித்து
மீண்டும் தின்று
மனைவியை
அழைக்க
பணியிடம் சென்று
பின்னிரவில்
வீடு மீள
தோன்றியது .....

இன்று
கவிதை எதுவும்
எழுதவில்லை.

தூக்கத்தில் புரண்டு
'ஐ லவ் யூ டாடி' என்று
கனவுக்குள்
சிரித்தது கவிதை.


blog_042804

Wednesday, April 28, 2004

மனசு வானம்தான்
==============

காதல் கவிழ்ந்தால் தாடி வருகிறதோ இல்லையோ, கவிதை வருகிறது என்று கொஞ்ச காலத்துக்கு முன் ஒரு ஜோக் சொல்வார்கள். இப்போது அதற்குக் கூட நேரம் இல்லை...அடுத்த காதல் செய்ய நேர்ந்து விடுவதால். எதுவும் கவிழாமலேயே, கவிதை, அதுவும் உருப்படியான கவிதை எழுதுவதற்கு ஒரு தனி மனசு வேண்டும்.

அது இருக்கிறது ராஜ்குமாருக்கு.

ராஜ்குமார் என் கல்லூரி நண்பன். மகா கோபக்காரன். உணர்ச்சிக் குவியல். அனிச்சம் பூ மனசு. உணர்ச்சி வசப்படும் பொழுது மூக்கு 'சிங்கார்' குங்குமத்தை அப்பியது மாதிரி சிவந்து விடும். என்னை காலேஜில் 'சுள்ளான்' என்றுதான் கூப்பிடுவான். தீவிர ரஜினி ரசிகன்.அடிக்கடி அவனை உசுப்பி விட்டு, இர்ரிடேட் பண்ணி கன்னத்தில் அறை வாங்கி இருக்கிறேன். வலிக்க வலிக்க மூஞ்சுக்கு நேரே உண்மை பேசுவான். பெண்கள் கூட பழகுவதில் கூச்சம் என்பதால், நான் அவனை "போலிச்சாமியார்" என்றுதான் கூப்பிடுவேன்.

ராஜ்குமார் கல்லூரி நாட்களில் இருந்தே கவிதை எழுதிக் கொண்டிருக்கிறான். அத்தனையும் மனசுக்கு புரிகிற மாதிரி பூமிக்கு வந்து நிசம் பேசும் கவிதைகள். NIIT Madras ல் பிஸினஸ் மானேஜராக பணிபுரிகிறான். சமீப காலங்களில் அதிகம் எழுதாமல் இருந்தான். என்னுடன் அடிக்கடி தொடர்பு இருப்பதால், அவனை எழுதச் சொல்லி ந்ச்சரித்து, வலைப்பூவுக்கு அழைத்து வந்திருக்கிறேன்.

இங்கே அவன் மன வானத்தைப் பார்க்கலாம்.

முதல் பதிவில் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு எழுதி இருக்கிறான்.

சொன்னேனே....அவன் கவிஞன் .!!!!!

Tuesday, April 27, 2004

வீடு வாங்கலையோ வீடு
==================

நான் பிறந்த்போது எங்கள் குடும்பம் சென்னை அஷோக்நகரில் இருந்தது. மூன்று சகோதரிகளுடன், கடைக்குட்டியாகிய என்னையும் சேர்த்து எங்கள் வீட்டில் மொத்தம் ஆறு பேர். அஷோக்நகர் நாகாத்தம்மன் கோவில் தெருவில் ஒரு வீட்டில் குடியிருந்தோம். ரொம்பச் சின்ன வீடுதான். நடுவில் கம்பி போட்ட முற்றம் இருக்கும். சுற்றி தாழ்வாரம். தாழ்வாரத்தை ஒட்டி வெவ்வேறு போர்ஷன்கள். கொல்லையில் கிணற்றடி , தென்னை என்று இந்தக் கால மெட்ராஸ் குடித்த்னக்காரர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத லக்ஸூரி.

சொந்த ஊர் மாயவரம் என்றாலும், வேலைவாய்ப்புத்துறையில் பணி புரிந்த என் தந்தையை பணி நிமித்தம் வெவ்வேறு ஊர்களுக்கு , மூன்று வருடத்துக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டிருப்பார்கள். எனவே எங்கும் வாடகை வீடுகள்தான்.குழந்தைகள் வளர, வளர, எங்காவது ஒரு இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வந்த அவர் கட்டிய வீடு மாயவரத்தில்.

அதை வீடு என்று ( இப்போது) சொல்ல முடியவில்லை. குடும்பத்தின் ஒரே சம்பாதிக்கும் உறுப்பினர், நான்கு குழந்தைகளுக்கு தகப்பன், தன்னுடைய குறைந்த பட்ச தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வீடு கட்டினால எப்படி கட்டுவாரோ, அதனை செய்தார். மிகுதியை உங்கள் ஊகத்துக்கு விட்டு விடுகிறேன். தாய் தந்தையர்களிடமிருந்து சரியான ஆதரவு இல்லாமல், லோன் கூட எடுக்காமல் ( கடன் வாங்கக் கூடாது. கெட்ட பழக்கம்..!!!! ), ஓடு போட்ட அந்த வீட்டை 1975 ல் அவர் கட்டி முடிப்பதற்குள் பட்ட பாடு சிவனறிந்து போயிற்று. அதற்கு பிறகு, கடந்த 25 வருடங்களாக ஒரு சிற்பி சிலை செய்யும் லாவகத்தோடு, அதே வீட்டையே மாற்றி, மாற்றி, மா.....ற்ற்றிக் கட்டிக் கொண்டிருக்கிறார் பாவப்பட்ட பசுபதியார்.

படவேண்டிய துனபம் எல்லாம் அவரே பட்டு விட்டதால், அயல்நாட்டு ஆதரவில் நான் நான்கு மாதத்தில் சென்னையில் போன வருடம் இன்னொரு வீட்டை கட்டி முடித்தேன். அதீத சந்தோஷம் அவருக்கு. ஊரெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு தலைமுறை பட்ட அதே கஷ்டத்தை , அடுத்த தலைமுறையும் அனுபவித்தால் வளர்ச்சி ஏது...?? எனவே தன் தலைமுறை வளருகிறது என்ற் சந்தோஷம் அவருக்கு.

அமெரிக்கா வந்து வருஷம் மூணாச்சே என்று ச்மீபத்தில் வீடு வாங்கலாம் என்று கோதாவில் இறங்கினேன். விலை எல்லாம் ராக்கெட் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது. ஒரே வீட்டுக்கு மூன்று பேர் ஆஃபர் கொடுக்கிறார்கள். விறபனை செய்பவர் கேட்கும் விலையை விட $10000/$15000 அதிக விலைக்கு எல்லா வீடுகளும் விற்றுத் தீர்கிறது. சாய்ஸ் இல்லை. தட்டிப் பொறுக்கி கம்பேர் செய்து யோசித்து வாங்க யாருக்கும் அவகாசம் இல்லை.கலிபோர்னியா மார்க்கெட் அப்படி.

ஒருவழியாக , மனசை சமாதானப்படுத்தி, குழந்தையின் எதிர்காலத்திற்காக, வீடு வாங்கலாம் என்று முடிவுக்கு வருவதற்கு செய்துகொண்ட சமரசங்கள், மேற்கொள்ளும் சிக்கன நடவடிக்கைகள், தள்ளிப் போடும் இந்தியப் பயணங்கள், மனைவியின் பகுதி நேர வேலை, இழந்த மாலைநேரங்கள் ஆகியவற்றை நினைக்கும்போது, இன்னொரு பசுபதியார் உருவாகிக் கொண்டிருப்பதாகத் தான் தோன்றுகிறது.

நாம் எல்லோரும் அதே வாழ்க்கையைத்தான் திரும்ப திரும்ப வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...??

வளர்ந்து கொண்டே இருக்கும் தேவைகளின், ஆசைகளின் பிடியில் வாழ்க்கையின் முகம் மாறுகிறதே தவிர, லயம் பிசகுவதே இல்லை.

Monday, April 26, 2004

வித்தியாசமான டைரக்டரும் ஒரு விளக்கெண்ணை ஹீரோவும்
=============================================

வார இறுதியில் வர்ணஜாலம் படமும் பார்த்தேன்.


varin


தன் குடும்பத்தை சின்னா பின்னமாக்கிய போலீஸ் அதிகாரியின் குடும்பத்தை கதாநாயகன் "அடுத்துக் கெடுக்கும்" கதை. ஸ்ரீகாந்த். சதா, குட்டி ராதிகா, நாசர் ஆகியோர் நடிப்பில் நகுலன் பொன்னுச்சாமி ( யாருப்பா இது..புது ஆளா..??) டைரக்ட் செய்திருக்கும் படம். படத்தின் டைட்டில் காட்சியில் இருந்து, கடைசி வரை சஸ்பென்ஸ் குறையாமல் நன்றாக சிரத்தை எடுத்து செய்திருக்கும் டைரக்டருக்கு ஒரு ஷொட்டு. கதையில் ஸ்ரீகாந்த் மட்டும் கொஞ்சம் ஒத்துழைத்திருந்தார் என்றால் படம் எங்கேயோ போயிருக்கும்.

கோபம், காதல், ஜாலி, சீற்றம் ஆகிய எல்லா உணர்ச்சிகளுக்கும் , ஒரே மாதிரி முகபாவங்கள். குரலில் ஒரே மாதிரி மாடுலேஷன் என்று வெறுப்பேற்றுகிறார் ஸ்ரீகாந்த். "ஆள் ஸ்மார்ட்டா மட்டும் இருந்தா போதாது ஸார்..கொஞ்சம் நடிக்கவும் செய்யணும்" என்று யாராவது இவருக்கு சொன்னால் தேவலை. இவருக்கு ரெண்டு ஹீரோயின் வேறு. குட்டி ராதிகா படம் முழுக்க வந்தாலும் , ஸ்கோர் செய்வது சதா தான். ஜெயம் படத்தில் குட்டியூண்டு பெண்ணாக வந்தவர் , இங்கே ஃபுல்....ல்லாக இருக்கிறார். கண்டிப்பாக ஒரு ரவுண்டு வருவார் என்று பட்சி சொல்கிறது. அதிலும் அந்த துப்பாக்கி சூட்டில், அழகான ஒயிட் கலர் சூடிதாரில், அந்த அழகான இடத்தில், குண்டடி பட்டு இறக்கும் போது பதறிப்போகுது மனசு.

நாசர் வேலையை தெளிவாக செய்திருக்கிறார். இப்போது அவர் பலவித கதாபாத்திரங்களும் ஏற்று குணச்சித்திர வேடங்களில் நடிப்பதால்,கடைசியில் அவர் வில்லத்தனம் வெளியே தெரிய வரும்போது , நம்மையும் அறியாமல் நாம் நிமிர்ந்து உட்காருகிறோம். ஊட்டியின் அழகை காமிரா அள்ளிப் பருகியிருக்கிறது. படத்தின் பல காட்சிகள் இலங்கை நுவரேலியாவிலும் எடுக்கப்பட்டு, ஊட்டியாகவே படத்தில் வருகிறது என்று கேள்விப்பட்டேன். உறுத்தாத இசை. கவனமான திரைக்கதை. டைரக்டர் படித்த புத்தகங்கள் எல்லாம் படத்தில் நடிக்கிறது. ( ஆல்வின் டாஃப்ளர் - future shock).

அடுத்த முறை நல்ல ஹீரோவை தேர்ந்தெடுங்க நகுலன்...வாழ்த்துக்கள்.

சாக்ரமண்டோ தமிழ்மன்றம் - புத்தாண்டு விழா
=======================================

போன வாரஇறுதியில், சாக்ரமண்டோ தமிழ்மன்ற நிகழ்ச்சிக்கு போக நேர்ந்தது. குடாப்பகுதி , லாஸ் ஏஞ்சல்ஸ், நியூஜெர்சீ தமிழ்ச்சங்கங்களோடு ஒப்பிடுகையில் வந்திருந்த கூட்டம் குறைவுதான். சாக்ரமண்டோவில் இருக்கும் தமிழன்பர்கள் எண்ணிக்கையே குறைவு என்பதால்.

ஓக்மாண்ட் ஹைஸ்கூல் அரங்கத்தில் நடந்த இந்தக் கூட்டம், எல்லா தமிழ்சங்க கூட்டங்களின் கல்யாணகுணங்களை ஒட்டி இம்மி பிசகாமல் நடந்தேறியது. விழா ஏற்பாடுகளை ஜெயந்தி ஸ்ரீதர், முருகேஷ் போன்றவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இவர்கள் சாக்ரமண்டோவில் அவ்வப்போது தமிழ்ப்படங்களை திரையிட்டு புண்ணியம் கட்டிக் கொண்டு வருகிறார்கள்.

விழா ஆரம்பித்த முதல் இருபது நிமிடங்கள், காலமாகிப்போன ஆக்டிவ் உறுப்பினர் ஜார்ஜுக்கு எல்லோரும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தார்கள். மக்கள் சரியாக உட்காராமல், ஒரே களேபரம். இறுதியில் ஒரு வழியாக எல்லோரும் உட்கார்ந்து நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். இளம்பெண்கள் கலர் கலராக உடுத்திக்கொண்டு , நளினமாக நடனித்து பெருமூச்சு விடச்செய்தார்கள். குழந்தைகள் திரு திரு என்று விழித்துக் கொண்டே மன்மத ராசா பாட்டுக்கு ஆட்டம் போட்டார்கள். தொகுத்து வழங்கியவர்களும் வேஷ்டி சட்டை, அங்கவஸ்திரம் , பட்டுப்புடவை என்று கலாச்சார உடை அணிந்து உடைந்த தமிழில் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, ஸ்பாட்டிலேயே சான்றிதழ் வழங்கப்பட்டது. சான்றிதழுக்காக கை நீட்டிய வண்ணம் ஒரு பிஞ்சு வெகுநேரமாக நின்றிருக்க, அதை காத்திருக்க வைக்காமல், ' பேர் மாறிப்போனா பரவால்லை. பினாடி பாத்துக்கலாம். இதோ வச்சுக்க ' என்று கைக்கு கிடைத்த சான்றிதழை எடுத்துக் கொடுத்தார் வழங்கியவர். நிகழ்ச்சிகளை உடனுக்குடன் படம் எடுத்து, ஓவர்ஹெட் ப்ரோஜெக்டரில் சூடாக அங்கேயே டிஜிட்டல் இமேஜை காண்பித்துக் கொண்டிருந்தார்கள். ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டின்னரை, ஸ்ட்ரேஃபோர்ம் டப்பாகளில் போட்டு, ஒவ்வொருவருக்கும் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததற்கு பாராட்டுகள். உணவு வீணாய்ப்போவது இதனால் தவிர்க்கப்பட்டது. நிகழ்ச்சி நிரல் பல காரணங்களால் தாமதமானதால், திரையிசை அந்தாக்ஷரி பாதியில் கைவிடப்பட்டு ட்ராமா ஆரம்பிக்கப்பட்டது. ஏற்கனவே நேரமாகிப் போய், குழந்தைகள் தூங்க ஆரம்பித்ததால், நிறைய பேர்களுடன் சேர்ந்து நானும் பாதி நிகழ்ச்சியிலேயே கிளம்பி விட்டேன்.

நண்பர் முருகேஷுக்கு சில விண்ணப்பங்கள் :

1. வருடத்தில் மூன்று விழாக்கள்தான் என்று நிறுத்திக்கொள்ளாமல், அடிக்கடி தமிழ்நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.

2. உறுப்பினர் அட்டைக்கு ஏற்பாடு செய்து, தமிழ்ச்சங்கத்தில் சேர விரும்புபவர்களுக்கு ஒரு கட்டணம் நிர்ணயித்து, சங்கத்தை முறைப்படுத்த வேண்டும்.

3. யாஹூ மடலாடும் குழு ஒன்றை நிறுவி, சங்கம் சம்பதந்மான மடல்களை அதில் அனுப்ப வேண்டும். இதன் மூலம் சாக்ரமண்டோ தமிழ் நண்பரகளின் ஈமெயில் விலாசங்களை திரட்டி வைக்க முடியும்.

4. அடிக்கடி தமிழ்த் திரைப்படம் திரையிட வேண்டும். (ஹி...ஹி..)

இன்னமும் நிறைய செய்யலாம். மேல் விவரங்கள் வேண்டுமாயின், குடாப்பகுதி தமிழ்மன்ற தலைவர் திரு. தென்றல் மணிவண்ணணையும், லாஸ் ஏஞ்சல்ஸ் தமிழ்ச்சங்கத் தலைவர் ஏஞ்சல் ராமையும் தொடர்பு கொண்டு தகவல் தர நானாயிற்று.

அன்றும் ..... இன்றும் ...... murug

==================

ராயர் காப்பி கிளப்பில் மறுபடியும் இரா.மு வுக்கு அழைப்பு விடுக்கும் திரி ஓடிக்கொண்டிருக்கிறது. இது சம்பந்தமாக நடந்த காயிதப் பரிமாற்றங்கள் அந்தக் கால நிகழ்வுகளை கொஞ்சம் கண்முன் கொண்டு வந்தன. கசிந்தது உள்ளம். உங்கள் தகவலுக்கு....

நா. கி:

இங்குள்ள மற்றவர்கள் மீதும் (உங்க¨ளையும் சேர்த்து) நல்ல அபிப்ராயங்கள் உள்ளன. பா.ரா வோ, ரெ.காவோ, இரா.கியோ. ஹரிகிருஷ்ணனோ, பிரபுராஜதுரையோ, நாகூர் ரூமியோ, வெங்கடேஷோ, வெங்கட்டோ, திருமலையோ,பத்ரியோ (விடுபட்டவர்களுமிருக்கலாம், தயை கூர்ந்து மன்னிக்கவும்), இங்கே ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் மிகச்சிறப்பாக எழுதும்போது நமது சந்தோஷத்தை ஏதோவொருவகையில் தெரியபடுத்தத்தானே வேண்டும். புதுமுகமெனக் களமிறங்கி, எல்லாவற்றையும் நேர்த்தியாக, சோர்வின்றி மடலில் வெளிப்படுத்த முனைந்த சுரேஷைக்கூட நாம் வெளிப்படையாக பாராட்டியாக வேண்டும். இது எழுத்துக்கு நாம் கொடுக்கின்ற குறைந்த பட்ஷ வெகுமதி. இந்த வெகுமதிகளுக்காக அவர்கள் கையேந்தி நிற்பதில்லை. இது மறைத்துக் கொடுப்பதற்கு கையூட்டுமல்ல, உரிய நேரத்தில் வெளிப்படையாகக் கொடுப்பது நியாயமென்றே நினைக்கிறேன்.

பிரகாஷ்

இணையத்துக்குள் நுழையுமுன்னர், என்னுடைய உலகம் மிக மிகச் சிறியது. படித்த புத்தகங்களும் கேள்விப்பட்ட படைப்பாளிகளும் மிகக் குறைவு. மத்தளராயரும், லவணராயனும் பா.ராகவனும், ராமராயரும் நடத்திவந்த ராகாகியில் இணைந்த பின் தான் பல புதிய எழுத்தாளர்கள், படைப்புகள், விமர்சனங்கள், இணைய இதழ்கள் என்று பலதும் அறிமுகமாயிற்று. எனக்கு படிக்க தோதான இடம் இதுதான் என்று புலப்பட்டது. அண்ணாநகர்காரார் ( அப்போது நங்கநல்லூர்) மரபு சொல்லிக்கொடுக்கத்துவங்கினார். ( அப்ப அப்ப டிமிக்கி கொடுத்தார் என்றாலும், இனி அவர் தப்பிக்க முடியாது. அவர் துவக்கி இருக்கும் வர்ச்சுவல் மரபிலக்கியப் பள்ளியிலே முதல் பெஞ்ச்சில் சீட்டு போட்டு வைத்திருக்கிறேன். :-)) . சேவியரின் கவிதைகள், பசுபதிராயரின் கிறுக்கல்கள், நிர்மலாவின் குழந்தைகள் பற்றிய கவிதை கட்டுரைகள், சொக்கனின் நூல்விமர்சனங்கள், எல்லே சீனியர் மற்றும் ஜூனியரின் அங்கதங்கள், மத்தளராயரின் தேதியில்லா நாட்குறிப்பு, ராகவனின் எழுத்தாளர் அறிமுகங்கள், இராம.கி அய்யாவின் மறுக்க இயலா தருக்கத்துடன் வந்த வந்த தனித்தமிழ் பற்றிய கட்டுரைகள், ஆராயரின் கவிதைகள், கானாக்கள் & பொன்னடியான் விமர்சனங்கள் , பாலாஜியின் அமெரிக்கா bases சிறுகதைகள், ரெகாவின் படைப்புக்கள், வெங்கடேஷின் விமர்சனங்கள், சடையன் சாபுசாரின் ஒன்லைன் 'பஞ்ச்'கள், ஆனந்த் ராகவ்வின் பாங்காக் நைட்லை·ப் கட்டுரைகள், தனிநபர் விமர்சனமல்லாது சித்தாந்தங்களை மட்டுமே கேள்வி கேட்ட முகமூடிகள், பின்நவீனத்துவத்தையும், ஜப்பான் கழிவறைகளையும் இணைக்கும், யாப்பும் அறிவியலும் தெரிந்த , வெங்கட்டின்மொழி நேர்த்தி, கே.ஆர்.ஐயங்காரின், நகைச்சுவைக் கட்டுரைகள், வாஞ்சிநாதனின் யாப்பு, நிறுத்தற்குறியீடுகளற்ற நீளவாக்கியங்களிலான , நகைச்சுவை என்று முன்பு நினைத்த, ஆனால் மிக ஆழமான படிமங்கள் கொண்ட ரமணிதரனின் படைப்புக்கள் என்று பலவிதமான வாசல்களை திறந்துவிட்டது. இவை அனைத்தும் எந்த எதிர்பார்ப்புமில்லாத அனைவரது ஈடுபாட்டினால் நிகழ்ந்தது.

புதியவர்களுக்கு அந்தக் குழு மடல்கள் படிக்க எகலப்பை தேவைப்படலாம். இங்கே இறக்கிக்கொண்டு, உங்களுடைய கண்ணியில் Install செய்து கொள்ளுங்கள். முடிந்தால் குழுவில் சேருங்கள். ஆரம்பத்தில் பயமாக இருக்கும். பிறகு பயம் பழகிவிடும்.

என் பயணம் அங்குதான் துவங்கியது.

Sunday, April 25, 2004

பழங்கஞ்சி
==========

நேற்று இரவு விருமாண்டி பார்த்தேன். எல்லோரும் படம் பார்த்து, விமரிசனம் எழுதி, திட்டி, சிலாகித்து சொன்னது எல்லாம் கிட்டத்தட்ட மறந்தே போன நேரத்தில், நேற்று பார்க்கக் கிடைத்தும் ஒரு வகையில் நல்லதாய்ப் போயிற்று.

படம் பார்த்து முடித்த பின் மனசுள் தேங்கிய மிச்சங்களை நேராக இங்கே தந்திருக்கிறேன்.

23sld1

* பட ஆரம்பம் கொஞ்சம் பழைய பட நினைவுகளை கொண்டு வந்தது. பேய்க்காமனை காட்டியபோது, ' அட இவர்தானா அது என்று நினைத்துக் கொண்டேன். Typical தமிழ்நாட்டு போலீஸ் கண்முன் வந்து நிற்கிரார், அந்த டிரேட்மார்க் தொப்பையோடு.

* பசுபதி. டைரக்டராக கமல் பெரு வெற்றி பெற்றிருக்கும் பாத்திரம். கண்களில் நயவஞ்சகமும், வெறியையும் வைத்துக் கொண்டு ஒரு தென்மாவட்ட கிராமத் தேவனை அநாயாசமாகக் கொண்டு வந்திருக்கிறார்.பாதி நேரம் அவர் பசுபதி என்பதே மறந்து போகிறது

* கதை சொல்லியிருக்கும் உத்திக்காக , எடிட்டிங் அற்புதமாக கையாளப்பட்டிருக்கறது. பசுபதி சொல்லும்போது , எங்கு வெட்ட வேண்டுமோ அப்படி வெட்டி இருக்கிறார்கள். அதே கதையை கமல் சொல்லும்போது விட்ட காட்சிகளோடு , சொன்ன எல்லாவற்றையும் கோர்த்தால் போர் அடிக்குமே என்பதற்காக, லைட்டாக கோடி காட்டி விட்டு கமல் வெர்ஷனை சேர்த்து இருக்கிறார்கள். பொதுவாக சில சஸ்பென்ஸ் த்ரில்லர்களில் கடைசி இரண்டு ரீல்களில் கையாளப்படும் இந்த விஷயம் இங்கே படம் முழுக்க தெளிவாக செய்யப்பட்டிருக்கிரது

* வசனம். அருமையான வசனங்கள். தனித்துத் தெரியாமல் , பாத்திரங்களோடு கலந்து அவற்றிற்கு உயிர் கொடுத்திருப்பதிலிருந்தே, வசனகர்த்தா ஜொலிப்பது தெரியும். அன்னலட்சுமி மொபெட்டை உருட்டியபடி நடக்க, அவளுடன் நடந்து கொண்டே விருமாண்டி ஜொள்ளு விடும் காட்சியில் வசனம் படு இயல்பு. அதே போல நாயக்கர் குடும்பம் பேசும் கொச்சைத் தெலுங்கும். சில காட்சியமைப்புகள் மட்டும், ஸ்பீடாக சொல்ல வேண்டும் என்பதற்காக, கிராமத்து அழகியலை சமரசம் செய்து கொண்டு சொல்லப்போக, நகரத்து ·பாஸ்ட புட் வாசனை அடிக்கிரது.

* அந்த "உள்பாடி" வசனம் உறுத்தவே இல்லை. கமல் படங்களில் ரசிக சுவாரசியத்திற்காக அங்கங்கே செக்ஸ் தூவல் வழக்கம்தான். ஆனால் இந்த வசனம் கண்டிப்பாய் அதற்காக சேர்க்கப்படவில்லை என்று தெரிகிறது. பசுபதியின் பார்வையில் இருந்து கமல் பார்வைக்கு படம் நகரும் முதல் சீன் அது. அதை இப்படி வைக்காவிட்டால்தான் தவறு.

* அபிராமி. அருமையாக செய்து இருக்கிரார். குத்துவிளக்கு மாதிரி இருந்து கொண்டு படம் நெடுக அவர் கமலுக்கு இணையாக ஓடி வந்திருக்கும் வேகம் நான் எதிர்பாராதது. ரொமான்ஸ் ஸீன்களில் கமலும் இவரும் இழையும்போது, ஆதி கால சிவாஜி படங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன.

* நாசர், நெப்போலியன், எஸ்.என்.லட்சுமி, ரோகிணியை பற்றி விசேஷமாக சொல்லிக் கொள்ள ஏதும் இல்லை. பாத்திர எல்லையை தாண்டாமல் உள்ளேயே இருந்து விளையாடி இருக்கிறார்கள்.

* சிறைக்கலவரம் ஒரு வேஸ்ட். வேறு ஏதாவது வழியில் ஏஞ்சலா தப்பிப்பதாய்க் காட்டி இருக்கலாம். ஆனால் கொத்தாளத்தேவனை கொல்ல வேண்டிய கதாநாயக நிர்ப்பந்தத்துக்கு டைரக்டர் பலியாகி, ஏகப்பட்ட எரிச்சலை சம்பாத்¢த்துக் கொண்டிருக்கிறார். அதிலும் நாசர், தன் துப்பாக்கியையும், தொப்பியையும் கமலுக்கு கொடுத்து வீரத் திலகமிட்டு அனுப்புவது ரொம்பவே ஓவர்.

* இசை. "மொட்டை" க்கு சொல்லியா தர வேண்டும்..? கிராமத்து படம் என்றால் சர்க்கரை கட்டி ஆச்சே அவருக்கு. வசனம் போலவே படம் நேடுக கலந்திருக்கும் இசை. சில அருமையான பாடல்கள். "உன்னை விட ' பாடல் படமாக்கப்பட்டிருக்கும் விதம் ஒண்ணாங் க்ளாஸ் ஸாரே. "மாட வெளக்கே " பாட்டு "ஒன்னைப் போல ஆத்தா..என்னைப் பெத்து போட்டா " என்று ராஜ்கிரண் படப் பாடல் ஸ்டைலில் இருக்கிறது

* கமல். கமல் நடிப்பைப் பற்றி புதுசாக சொல்ல ஒன்றும் இல்லை. அதே சிரத்தை. அதே கலக்கல். அதே பாடி லாங்குவேஜ். அதே etc. ஆனால் டைரக்டர் சார் கொஞ்சம் வயலன்ஸ் சமாசாரத்தை கட்டுக்குள் வைப்பது பெட்டர். தியேட்டரில் இதை பார்த்து விட்டு, வீட்டுக்கு போகும்போது பஸ்ஸில் இடப் பிரச்சினை வந்தால் , நம்ம ஜனங்கள் வீச்சரிவாளை எடுத்து வீசி விடுவார்களோ என்று பயம் வந்தது நிஜம். எனக்கே கொஞ்சம் விறு விறு என்று இருந்தது

* கதை உண்மைக்கதையா..?? அப்படி இல்லை என்றால் கதையாசிரியருக்கு ஒரு மெகா ஓ.

Friday, April 23, 2004

முரட்டு இலக்கியம்
==============

குமுதம் நண்பர் பாபா வலைப்பதிவில் மரபுஇலக்கியம் யாஹூ குழுவின் விளம்பரம் பார்த்தேன். லிங்கைப் பிடித்து போய் நான்கு மடல்கள் வாசித்து விட்டு வந்தேன். மற்ற மடற்குழுமங்களில் வெண்பா வடித்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் மொத்தமாக செர்ந்து அங்கேயே வடித்துக் கொள்ளலாம் இனிமேல். கவிதை பிடிக்காது என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் விட்ட நம்ம பாரா சார் கூட ஒரு வெண்பா வடித்து உள்ளே நுழைந்திருந்தார். ஹரி அண்ணா மிரட்டி இருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன்.' அடேங்கப்பா..பெரியாளுக புழங்கும் இடம் ' என்று ஓடி வந்து விட்டேன்.

தமிழாசிரியர்களுடனும், தமிழ் இலக்கணத்துடனும் என்னுடைய உறவு பள்ளி நாட்களில் எல்லாம் இணக்கமாகவே இருந்திருக்கிறது. என்னுடைய தமிழ் விடைத்தாள்களில், ' அழகரசரே...கதை விட வேண்டாம். வினாவுக்குரிய விடையை மட்டும் எழுதினால் போதும் ' என்று என் தமிழாசிரியர்கள் பர்சனல் கமெண்ட்டோடு மார்க் போட்டிருப்பார்கள். தமிழ் மீது இவ்வளவு ஆர்வம் இருப்பதனால் தான் இவ்வளவு காலம் கழித்தும் , தட்டச்சு கூட சரிவரத் தெரியாமல் தப்பும் தவறுமாக இணையத்தில் தமிழ் எழுதி கொண்டிருக்கிறேன்.

ஆனால் ஹரி அண்ணா வேறு வகையான தமிழ் ஆர்வலர். தமிழ் மீது முரட்டு பக்தி. ஏன் , வெறி என்று கூடச் சொல்லலாம். சில விஷயங்கள் எல்லாம் அவர் எழுதும்போது மனசு நெகிழ்ந்து போகும். நனறாக உள்ளது என்று நாலு வார்த்தை எழுதினால் ஏதாவது விநோதமாக பதில் சொல்வாரோ என்று பயந்து கொண்டே வாளாவிருந்து விடுவது வழக்கம். கம்பனையும், பாரதியையும் கரைத்துக் குடித்த அவர் நெஞ்சில் சில பேரைக் கண்டால் கனிவு மட்டும் எட்டிக் கூடப் பார்க்காது. புதுக்கவிதை எழுதுபவர்களை எல்லாம் பொத்தாம் பொதுவில் போட்டுத் தள்ளுவார். ஒரு பிரச்சினையை விவாதித்து முடித்து , எவ்வளவு நாட்கள் ஆனாலும், அதை மறக்காது , நினைவில் கொண்டு, சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் ஜாடை மடையாக குத்திக் கொண்டே இருப்பார். மாலனுடன் நடந்த ஒரு விவாதத்தில் , மாலன் ' படிவநிரப்பி ' என்று சொன்னதை ஒரு நூறு முறையாவது மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டே இருந்தார். ஏதாவது ப்ரூவ் பண்ண வேண்டுமென்றால் " நான் சொன்னது தப்பானால் புத்தகத்தை தீயிட்டு கொளுத்துகிறேன் " என்று சவால் விட்டு விட்டு, பிறகு அது தப்பு என்று தெரிந்தாலும் ' இப்ப என்ன பண்ணனுங்கிறீங்க அதுக்கு" என்பார். தனி மடலில் சாபங்கள் பறக்கும். மரபு வழிச் சார்ந்த கலைகளை நிலைப்படுத்தும் பெருங் காரியத்தை செய்யும் அவர், சற்று கனிவுடன் இருக்க வேண்டும் என்று எத்தனையோ முறை தனி மடலில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். திரு.இரா.மு விடமும் " ஹரி அண்ணாவின் கடுமையை குறைத்துக் கொள்ள சொல்லுங்கள் ' என்று தனி மடலில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ம்..ஹூம். இதுவரை என் முயற்சி ஜெயிக்கவில்லை.

இந்தக் குழுவை இப்போது அவர் நண்பர் மதுரபாரதியுடன் துவக்கி இருக்கிறார். பொறுமையும், நிதானமும் உள்ள மதுரபாரதியாவது, ஹரி அண்ணாவை , இளைஞர்களை பயமுறுத்தி விடாமல் , நல்ல தமிழ் சொல்லித் தந்து வழி காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இதை வேறு யாராவதென்றால் முகமூடிப் பெயரில் வேறு ஒரு வலைப்பூவிலோ, அல்லது அதே மரபிலக்கியம் குழுமத்திலோ எழுதி இருப்பார்கள் . எனக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை.

இதை படித்து விட்டு , ஹரி அண்ணா விடும் சாபங்களில் இருந்து கடவுள் என்னைக் காப்பாற்றட்டும். இதை சரியான முறையில் அவர் புரிந்து கொண்டால் அவருக்கு என் மானசீக நமஸ்காரங்கள். நன்றிகள்.வாழ்த்துக்கள்.






பிரபலங்களின் அருகே
======================

சினிமாவிலும், டீ.வி யிலும் வரும் பிரபலங்களை நேரில் பார்ப்பது தமிழனுக்கு ஒரு பரவச அனுபவம். தான் பிரபலமாகி, புகழ் பெறாத ஆற்றாமையை , இப்படிப்பட்டவர்களிடம் ஆட்டோகிரா·ப் பெற்றாவது தீர்த்துக் கொள்வோம் என்ற ஏக்கம் பலருக்கும் உண்டு.

கல்லூரியில் படிக்கும்போது ரொம்ப அறிவுபூர்வமாக பேசும் என் நெருங்கிய நண்பன் ஒருவன் சூப்பர் ஸ்டாரைப் பார்க்கப் போய்விட்டு, அவரைப் பார்த்தவுடன் தன்னுள் நிகழ்ந்த பரவச உணர்ச்சியை கண்கள் மின்ன சொல்லிக் கொண்டிருந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. ரஜினி ராம்கியின் வலைப்பூவிலும் அவர் அத்தகையதொரு அனுபவத்தையே எழுதி இருக்கிறார்.

நான் முதன் முதலில் டைரக்டர் டி.ராஜேந்தரை என் தெருவில் பார்த்தேன். மாயவரத்தை ( என் சொந்த ஊர்) சேர்ந்த அவர் அவர் பிரபலமாவதற்கு முன், மகாதானத்தெரு வீட்டு திண்ணைகளில் எல்லாம் தாளம் தட்டி பாட்டு பாடிக் கொண்டே இருப்பாராம். கோதண்டபாணி என்ற ஜோசியர் வீட்டில் தன் டிரேட்மார்க் தாடியோடு உட்கார்ந்து கொண்டு " என்னடா...சினிமா டைரக்டரை பாக்க வந்தீங்களா" என்றார் கர கர குரலில் . டவுசர் வயசில் இருந்த நான் வெட்கப்பட்டுக் கொண்டு ஓடியே வந்து விட்டேன்.

collect


பிறகு டெல்லி கணேஷையும் ( தணியாத தாகம் ஷ¥ட்டிங்) , அதே படத்தில் நடித்த கவிதாவையும் எங்கள் ஊர் கோயில் அருகே பார்த்தேன். அதே கோயிலில்தான் "மைக்" மோகனையும் , ஸ்ரீபிரியாவையும். திடீரென்று ஒருநாள் சரிதா சாமி கும்பிடுகிறார் என்றார்கள். ஓட்டமாக ஓடி பார்த்தபோது, அபயாம்பாள் சந்நிதியில்
பேர் கேட்ட குருக்களுக்கு 'சரித்..தா" என்று பவ்யமாக சொல்லிக் கொண்டிருந்தார். குளித்து முடித்து கோடாலி முடிச்சிட்டு இருந்தை கவனிக்கும் வயசு அப்போது எனக்கு. என் நண்பனின் அக்காவை, "முழி" தியாகுவுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தபோது, அவர்கள் ரிசப்ஷனில் , அதே முழியோடு, கொஞ்சம் அசட்டுக் களையையும் சேர்த்துக் கொண்டு தியாகு உட்கார்ந்திருந்தார்.

காலேஜ் படிக்கும்போது பாலகுமாரன், இளந்தேவன், மு.மேத்தா, ஜெய்சங்கர் போன்றவர்கள் கல்லூரி விழாக்களுக்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கிறார்கள். மு.மேத்தா அருமையாக கவிதை படித்தார். ஜெய்சங்கர் வேக வேகமாக பேசி விட்டு, தான் எடுத்து வந்திருந்த பிள்ளையார் பொம்மைகளை ஏலம் விட ஆரம்பித்தார். ஏதோ அனாதைப் பள்ளிக்காக அதை செய்வதாக சொன்னாலும், எங்களுக்கெல்லாம் கடுப்பாக இருந்தது. பாலகுமாரன் வந்தபோது, அவர் எழுத்தில் இருந்த முதிர்ச்சி பேச்சில் இல்லாதது கண்டு ஏமாற்றம் அடைந்து போனேன். தத்தக்கா..பித்தக்கா என்று பேசி விட்டுப் போனார்.

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் தான் விகடன் அனுபவம். விகடன் பயிற்சி முகாமில் வந்தவர்கள் வேறு விதம். அவர்கள் வெறும் பவுடர் ஆசாமிகள் அல்ல. சுதாங்கன், ரவிசங்கரன்( ·போட்டோகிரா·பர்), நியூஸ் வீக் பன்னீர் செல்வம், சுஹாசினி, ஆசிரியர் பாலன், இணையாசிரியர் மதன், அவர்கள் நிழல் போல சுற்றிக் கொண்டிருந்த (காலம் சென்ற) ப.திருப்பதிசாமி என்று மூன்று நாட்களிலேயே ஏகப்பட்ட அறிமுகங்கள். பிறகு மதனுடன் நடக்கும் தனிப்பட்ட சந்திப்புகளில் ஜாலி டைமில், "சரோஜாதேவி" யைப் பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருப்பார். ஹெக்ஸாவேரில் நான் பணி புரிந்தபோது, நடிகர் கிட்டி அங்கே பிஸினஸ் கன்சல்டன்ட் ஆக இருந்தார். "நீங்கதான் கிட்டியா " என்று கேட்டபோது , இல்லைப்பா நான் அவர் தம்பி " என்று இடி இடி யென்று சிரித்தார். எரிச்சலாக இருந்தது எனக்கு .

சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் ஒருமுறை வெள்ளை உடையில் , அதே ·போட்டோ புன்னகையோடு தேனிசைத் தென்றலைப் பார்த்தேன். எழுத்தாளர் திரு.ஜெயகாந்தனுடன் ஏற்பட்ட சந்திப்பைப் பற்றி ஏற்கனவே இங்கே எழுதி இருக்கிறேன். வயலின் குன்னக்குடி வைத்தியநாதனை அதே ஏழு இஞ்ச் இளிப்போடு சிங்கப்பூர் கோமள விலாஸில் ஒரு முறை பார்த்தேன்.

ஆனால் டவுசர் காலம் தவிர, பிற்காலங்களில் யாரைப் பார்த்தும் எனக்கு புல்லரிக்கவெல்லாம் இல்லை. " எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் சரி, அவனுதை அவந்தான் கழுவிக்கொள்ளனும் " என்று மூஞ்சியில் அறைகிற மாதிரி ஒரு "பெரிசு" எனக்குச் சொன்னது அத்தருணங்களில் எனக்கு நினைவுக்கு வந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.


ஹாலிவுட்டில் தங்கரு
================

மென்மையாக படம் எடுக்கத் தெரிந்தாலும், தன் திறமையால் குறுகிய காலத்திலேயே கூர்ந்து கவனிக்கப்படும் டைரக்டர் ஆனாலும், நம்ம தங்கர் பச்சான் பிரச்சினைக்குரிய தன் வாயினால் அவ்வப்போது அல்லலில் மாட்டிக் கொள்வதுண்டு. ' நான் பேச தேவையில்லை. என் படங்கள் பேசும் " என்று அநியாயத்திற்கு மெளனம் சாதிக்கும் மணிரட்னத்துக்கு தங்கர் அப்படியே ஆப்போசிட்.

ஹாலிவுட்டிலும் இம்மாதிரி ஆட்கள் இருக்கிறார்கள்.

போன வருஷம் ஆஸ்கார் அவார்டு விழாவைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, மைக்கேல் மூர் என்ற டைரக்டருக்கு வ்ருது கிடைத்தது. இராக போரின் விளைவால , அதில் இறக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கையால், நாடெங்கும் பதட்டம் கிளம்பி இருந்த காலகட்டம் அது. பரிசு வாங்க வந்த அவர் மேடையிலேயே, Shame on you Bush . your time is up என்று தன் எதிர்ப்புக் குரலை பதிவு செய்து விட்டுச் சென்றார். அப்போதுதான் அவரை முதல் முறையாகப் பார்த்தேன்.

books-films-b4c-callout_02


Bowling for coumbine என்ற அவருடைய படம், அமெரிக்காவின் வன்முறையை , துப்பாக்கிக் கலாசாரத்தை பற்றி உரத்துப் பேசி பரிசு பெற்றது. FAHRENFEIT 911 என்ற அவருடைய புது படம் செப்டம்பர் 11 - உலக வர்த்தக கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்ட தொடர்பில் எடுக்கப்பட்டு, கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்படுகிறது. இதைத் தவிர சர்ச்சையூட்டும் பல புத்தகங்களையும் எழுதி வருகிறார். அமெரிக்காவின் வேலைகள் வெளிநாட்டு ஆட்கள் மூலம் (outsourcing) செய்ய்ப்படுவதைப் பற்றி, "Dude ! where is my country " என்று எழுதிய புத்த்கம் இங்கே தேர்தல் நேர ஹாட் டாபிக்.

சும்மா இருப்பார்களா எதிர் முகாம் ஆட்கள்...??

drudgereport.com என்ற வெப்சைட், "அமெரிக்க மக்களுக்காக போராடுவது போல காட்டிக் கொள்ளும் மைக்கேல்மூரின் வெப்சைட்டின் டெவலப்மென்ட் கனடாவில் உள்ள கம்பெனிக்கு outsource செய்யப்பட்டது. அதை வலையில் இட்ட கம்பெனியும் கனடாவை சேர்ந்ததுதான் " என்று புயல் கிளப்பி இருக்கிறது. ' ஊருக்கு மட்டும் தான் உபதேசமா..அது உனக்கு உதவாதா ' என்று மைகேலை கிழி கிழி யென்று கிழித்திருக்கிறார்கள்.

மைக்கேலூ, படம் மட்டும் எடு கண்ணூ...என் கிட்டே வம்புக்கு வராதே என்கிறாரோ டெக்ஸாஸ் கெளபாய்.

Thursday, April 22, 2004

என் மதிப்புக்குரிய பாலமுருகன்
=======================

என்னுடைய முந்தைய வலைப்பதிவிலும், பின்னூட்டங்களிலும் நிறைய அடிபட்ட பெயர் இது. கோயமுத்தூரில் தற்போது இந்திய கலால்துறை உதவி கமிஷனராக இருக்கும் திரு.பாலமுருகன் அவர்களை முறையாக அறிமுகப்படுத்துவது முக்கியம் என்று நினைக்கிறேன்.

college


நான் படித்த்து காரைக்குடி அழகப்பச்செட்டியார் பொறியியற் கல்லூரியில் என்று ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கிறேன். நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சையிலிருந்த எனக்கு காய்ந்து கிடந்த செம்மண் பூமியான காரைக்குடி ஆரம்பத்தில் பிடிக்கவே இல்லை. நான்காவது வருடம் படிப்பு முடித்து விட்டு வேலைக்காக காரைக்குடியை விட்டு வெளியே வரும்போது, காலேஜ் மெயின் பில்டிங் முன்னால் நடு ரோட்டில் கட்டாந்தரையில், அதே செம்மண் பூமியில் விழுந்து வணங்கி கண் கலங்கி விட்டு வந்தேன். அவ்வளவு மாற்றங்களை உண்டாக்கிய வருடங்கள் அவை.

பாலா எனக்கு ஒரு வருஷம் சீனியர். லால் பகதூர் சாஸ்திரி உயரம். பட்டை ஃப்ரேம் கண்ணாடி. புஸ்தி மீசை. குறும்பு கொப்பளிக்கும் கண்கள். அதிரடி குரல். எனக்கு அவர் அறிமுகமானது காலேஜ் டேலன்ட்ஸ் டே விழாவில். அவருக்கும் தமிழ் மீதும், கலை நிகழ்ச்சிகள் மீதும் ஆர்வம் உள்ளதால் இயல்பாக பேச ஆரம்பித்தார்.அவர் வகுப்பின் ரெப் ( Rep ) ஆக இருந்தார். கலாட்டாவும் சந்தோஷமுமான் ரெகுலர் காலேஜ் பையனாக இருந்தாலும், ஆசிரியர்களால் தனித்துக் கவனிக்கப்பட்டார் என்றே நினைக்கிறேன். ( நிம்மதியா தம் கூட அடிக்க முடியலைடா என்பார்.) எங்கள் கல்லுரியின் கலைக்குழு வேறு கல்லூரிகளுக்கு போகும்போது தமிழ் நிகழ்ச்சிகளுக்காக கூட போய் வருவார். எங்கள் கல்லூரியின் மாகஸீன் 'சங்கமம்' எடிட்டராக இருந்தார். எனக்கு முந்தைய ஒருவருடம் அவரும் ஜூ.வி மாணவப் பத்திரிக்கையாளராக பணி புரிந்தார். கல்லூரி கலைவிழாவுக்கு பாலகுமாரனை அழைத்து வந்து, விழா ஏற்பாடுகளில் முக்கிய பங்காற்றினார். நான் அப்படி இப்படி யான படங்களுக்கு போய் வந்து அசந்தர்ப்பமாக் அவரிடம் மாட்டிக் கொண்டால், ' மலையாளப்படம் மட்டும் போகத் தெரியுது. இது பண்ணமுடியலியா ' என்று கேட்பார். காலேஜ் முடிந்தவுடன் அவ்வளவாக் டச் இல்லை.

சமீபத்தில் இந்தியா சென்றிருந்தபோது, விகடனில் சீனியர் எடிட்டராக பணிபுரியும் இன்னோரு கல்லூரி சீனியர் ம.கா.சிவஞானத்தை சந்திதேன். அவர் என்னிடம் பாலா தன்னை வந்து பார்த்தாகவும், பாலா இப்போது இ.ஆ.ப ஆக பணிபுரிவதாகவும் பெருமையோடு சொன்னார். அரசு ஊழியம் செய்ய முடியாமல், கொஞ்சம் கஷடத்துடன் தன் மகனை படிக்க வைத்த பாலாவின் தந்தை பற்றி எனக்கும் கொஞ்சம் தெரியும் ஆதலால், எனக்கும் மனம் கொள்ளாத பெருமையாக இருந்தது.

இப்போது இணையத்தில் என்னைக் கண்டுபிடித்து , இங்கே வந்திருக்கிறார். அவருடைய தனி மடலின் ஒரு பகுதியை கீழே தந்திருக்கிறேன். அவரும் வலைப்பதியத் துவங்கி விட்டதாக , தற்போது வந்த பின்னூட்டம் மூலம் அறிகிறேன். அவரை இங்கே பார்க்கலாம்.

1991 to 2004:

Joined English Electric Co. Chennai (now known as
Alsthom Ltd) as Management Trainee in July 1991.
Worked at Pondicherry Unit of English Electric till
Jan 1995. Solid foundation for future career was laid.

Resigned from English Electric and started preparing
for Civil Services Examination. During the process,
simultaneously served in DSQ software, Govt. of
TN for six months each in 1995 and 96.

Was selected for Indian Revenue Service( Customs &
Central Excise) in 1997 Civil Services Examination.
Undergone extensive training in various institutions
and academies throughout the country (Hyderabad,
Faridabad, New Delhi, Vizag, Chennai, Ludhiyana,Mumbai,
Dehradun, Kolkata, Mangalore, Gwalior, Bangalore
etc..etc..) for two years.

First posted as Assistant Commissioner of Customs at
Kolkata Customs House in 1999. Experienced the "dull
but festive" culture of "City of Joy" for one year.

Then transferred to Madurai in July 2000. Explored the
southern part of Tamilnadu down upto Kanniyakumari for
another year. During this period, served in places
like Thirunelveli, Kovilpatti and Tuticorin as
Assistant Commissioner of Central Excise. Again
shifted to Dindigul in July 2001. Married to Meenakshi
on 24th April 2002. Had and immediately lost our first
baby in March 2003 (doctors could not diagonize the
reason for baby's illness). The lighter side is, now,
we expect our next baby in July this year.

Transferred to Coimbatore in April 2003. Presently,
Deputy Commissioner of Central Excise and Service Tax
in Coimbatore.

Sundar, it is a long journey in the last 12 years to
transform myself into a Revenue Administrator of
Government of India from an Electrical and Electronics
Engineer. I have been enjoying every moment and every
event during this period. I hope that the journey is
on the right track.

"Two roads diverged in a wood, and I-
I took the one less traveled by,
And that has made all the difference.
--Robert Frost"


Now, that's a brief about..."the future President of
India"(ayya..cool..cool..cool down..in lighter vein, i
mean what i write!)let us dream BIG because it is only
WE who are going to change the things for better
india. let us believe it.

Then, how are things there? hope you are enjoying
every bit of time. your writing is sharp and your
peoms are thought provoking. keep writing. it will
keep you in good health also.


அவருடைய கனவுகள் எல்லாம் பூர்த்தியாகி , அவர் இன்னமும் உயர்ந்த இடங்களுக்கு செல்ல எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும்.

சாப்பாட்டு வரிசையில்
================

இன்று மேஷ ராசி, அசுவினி நட்சத்திரக்காரர்களுக்கு, பட்டினி என்று எழுதி இருக்கிறது போல.

மாதாந்திர அலுவலக மீட்டிங் நடக்கும்போது வரும் எங்கள் வைஸ் பிரசிடெண்டுக்கு மஸ்கா அடிக்க , வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த நாங்கள், அந்தந்த நாட்டு உணவு வகைகள் கிடைக்கும் ரெஸ்டாரெண்டை தெரிவு செய்வது வழக்கம்.இந்த மாதம் மீட்டிங் இன்சார்ஜ் சோழிப் பல்லோடு சிரிக்கும் என் பிலிப்பினோ நண்பன் டானி பர்னாஹா.

இதற்கு முன் மெக்ஸிகன், தாய், இத்தாலி, மெடிட்டரேனியன், இந்தோனேசியன், சைனீஸ் உணவு வகைகளை ருசி பார்த்திருக்கிறேன். அமெரிக்காவில் இந்திய ரெஸ்டாரெண்டுகளுக்கு போவது ரொம்ப அபூர்வம். அப்படியே போனாலும், சுவை ஒரே மாதிரி இருப்பதாய் ஒரு எண்ணம். தவிரவும், பஃபே டைப் அயிட்டங்கள் ரீசைக்கிள் பண்ணப்பட்டு இன்னொரு ஹோட்டல் அனுப்பப்படுகிறதோ என்ற சந்தேகமும் எனக்கு உண்டு.

விஷயத்துக்கு வருகிறேன்.

இன்று போன இடம் பிலிப்பினோ ரெஸ்டாரெண்ட். வட்ட வடிவ டேபிள் போட்டு நடுவில் மரத்தில் செய்யப்பட்ட ஒரு சக்கரம் இருந்தது. அதில் ஒரு பிளேட்டில் , 20 சுருட்டு மாதிரி சமாசாரங்களை வைத்திருந்தான். அது பசியூட்டி ( ஹி..ஹி..அப்படைஸர்) யாம். உள்ளே பன்றி இறைச்சி. மக்கள் எல்லாம் ஆனந்தமாக சாப்பிட ஆரம்பிக்க,இந்தியர்கள் மட்டும் திரு திரு என்று விழித்தபடி உட்கார்ந்திருந்தோம்.அசைவம் சாப்பிட எனக்கு ஆட்சேபம் ஏதும் இல்லை எனினும் கோழியோடு நிறுத்திக் கொள்வது வழக்கம். அடுத்து சூப் வந்தது. நம்மூரில் மாடுகளுக்கு கழுநீரில் புண்ணாக்கு , பருத்திக் கொட்டை கல்ந்து ஒரு பானம் கொடுப்பார்கள்.பார்ப்பதற்கு அதே கலர். அதில் என்ன இருக்கிறது என்று டானிக்கே தெரியவில்லை. அதையும் தவிர்த்து விட்டு எல்லாரையும் பராக்கு பார்த்தபடி உட்கார்ந்திருதேன். பிறகு ப்ராகெல்லி ( Brocelli) , வெங்காயம், கேரட் கலந்து ஒரு வெஜிட்டேரிய ஐட்டம். பிறகு கொஞம் நூடுல்ஸ். டம்ளர் டம்ளராக கோக். இதற்கு நடுவில் குஷியாகப் போன என் V.P யின் சேல்ஸ் டாக்.

ஒரு மார்க்கமாக சாப்பிட்டு முடித்து வெளியே வரும்போது, பிலிப்பினோ உணவுக்கு மானசீகமாக முழுக்கு போட்டுவிட்டு வெளியே வந்தேன். நம்மூரு சுகன்யா ஸ்டைலில், சிரித்து சிரித்து ஒடியாடி, குறுகலான சேர்களின் நடுவே நெளிந்து உபசரித்த BMW பிலிப்பினோ பெண்கள் மட்டும் ஒரே ஆறுதல்.

வயிற்றுக்கில்லாத உணவு, தாராளமாக கண்களுக்கு ஈயப்பட்டது.

Wednesday, April 21, 2004

ருசி கண்ட பூனை
=============

நண்பர்கள் மன்னிக்கவும். முக்கியமான காரியமாக நேற்று அலைய வேண்டி இருந்ததால் ஏதும் எழுத முடியவில்லை. குளித்துமுடித்து, ஒன்பது மணிக்கு மேல், என் வலைப்பதிவை பார்த்தபோது ஏதோ இழந்தாற்போல இருந்தது நிஜம்.

எழுத ஆரம்பித்த இத்தனை குறுகிய காலத்திற்குள்ளாகவே, என்னுள் படரும் நிம்மதியை, லேசாக எனக்குள் படரும் தெளிவை எப்படி விவரிப்பதென்று தெரியவில்லை. ரொம்ப சுதந்திரமாக இருக்கிறார் போலிருக்கிறது. லேசாக சீட்டி அடித்துக் கொண்டே, பூந்தூறல் அடிக்கும் மலைப்பாதையில், மனசுக்குப் பிடித்தவளின் சூடிதார் துப்பட்டாவை பிடுங்கி இடுப்பில் கட்டிக் கொண்டே அவளுடன் நடப்பது போலிருக்கிறது

'தமிழ் இத்தனை காலம் எனக்கு சோறு போட்டது. தமிழுக்கு நான் இப்போது சோறு போடுகிறேன் " என்று கவிப்பேரரசு ஒருமுறை சொன்னாராம். அவரைப் பார்த்து எனக்கு பரிதாபமாக சிரிக்கத் தோன்றுகிறது. தமிழை வைத்து பாட்டெழுதிப் பிழைத்து விட்டு, கையில் காசு சேர்ந்தவுடன் இப்படிச் சொல்லுவது அவரின் அதீத நம்பிக்கையா அல்லது அறியாமையா என்று தெரியவில்லை. ஆனால் துளியூண்டு பொடியன் , எனக்குத் தோன்றும் இந்த விடுதலை உணர்வு அவருக்கும் வந்திருக்கும். சில படிகள் தாண்டியவுடன், எல்லாம் தெரிந்ததாய் காட்டிக்கொள்ளும் உணர்வு வந்து விட்டது. நாக்கு புரண்டு விட்டது.

எழுதும்போது, எனக்காக எழுதினாலும், அதைப் படித்து விட்டு நீங்கள் பின்னூட்டம் கொடுக்கும்போது, பாராட்டும்போது , சந்தோஷமாய் இருக்கிறது. அதை மறுப்பத்ற்க்கில்லை. நிர்ப்பந்தங்கள் எதுவும் இல்லாமல், அரிதாரம் களைத்து நான் ஆனந்தப்படும்போது, என்னைத் தவிர இன்னும் சில ஜீவன்களும் அதில் ஆனந்திப்பது அபூர்வமான அனுபவமாய் இருக்கிறது. பல நண்பர்களை இது எனக்கு புதிதாய் தந்திருக்கிறது. குழுமங்களில் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் என்னிடம் பாரா முகமாக இருந்த பல நண்பர்கள் அடையாளமற்று நான் இங்கே எழுத ஆரம்பித்ததும் இன்னமும் இங்கே நெருங்கி வந்திருக்கிறார்கள். என் கல்லூரி நண்பர், என் சீனியர், என்னைபோலவே ஜீ.வி யில் பணிபுரிந்தவர், தமிழ்நாட்டில் இ.ஆ.ப ( மாவட்ட கலெக்டர்) ஆக இருப்பவர், இத்த்னை வருடம் கழித்து இணையத்தில் மேயும் போது , என்னை இனம் கண்டு, ' நாந்தாண்டா..காலேஜ் பெரிசு' என்று தனிமடல் இட்டிருக்கிறார். இங்கு பின்னூட்டங்கள் தந்திருக்கிறார்.

சரி..வாத்யாரே..இன்னாதான் சொல்ற நீ இப்போ என்று கொஸப்பேட்ட குப்ஸாமி கேட்பதற்குள் முடித்து விடுகிறேன்.

நான் இன்னமும் தீவிரமாக எழுத நினைக்கிறேன். 'குங்குமமோ', "ஜில் ஜில்" லோ, அதை தொடர்ந்து செய்யப்போகிறேன்.

நீங்கள் வசமாக மாட்டிக் கொண்டீர்கள்...

cat

Monday, April 19, 2004

தேடிச்சோறு நிதந்தின்று
==================

வெகுநாட்கள் கழித்து விகடன் வெப்சைட் ஒழுங்காக வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது. ஜூனியர் விகடன் அட்டைப்படத்தில் விஜயகாந்தை கொண்டுவந்து அடுத்த பரபரப்புக்கு அடிகோலியிருக்கிறது

wrapper_jv


ரஜினிகாந்த் திமுக-பாமக கூட்டணிக்கு எதிராக போவதைப் பார்த்து , கருணாநிதி விஜயகாந்தை அரசியலுக்கு இழுக்கிறாராம். மக்கள் சப்போர்ட் தனக்கு இருக்கிறதா , இல்லையா என்று நாடி பிடிக்கும் எண்ணத்தில் உள்ள கேப்டன், ஜெயிக்கும் கூட்டணிக்கு ஆதரவு கொடுத்து களமிறங்குவாராம்.

சிரிப்பதா , அழுவதா என்றே தெரியவில்லை. முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் நடிக்க வரும் இளைஞன் முதல் சீனில் க்ளாப் அடிக்கும்போது "கடவுளே...நல்லா நடிச்சு, பணம் சம்பாதிச்சி, காரும் பங்களாவும் வாங்கணும் ' என்று வேண்டிக்கொள்வான். இப்போதெல்லாம் ' கடவுளே...நடிச்சி, தமில்நாடு முதலமைச்சரா ஆகணும் ' என்று வேண்டிக்கொள்வான் போலிருக்கிறது. சரி...அவனுக்குத்தான் ஆவலாதி என்றால், வெட்கங் கெட்ட மீடியாக்களும் ( என்னயும் சேர்த்துதான்.....) இந்த மாதிரி கொம்பு சீவிவிட்டு தமிழ்நாட்டை கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, தன்னுடைய விகடன் பேட்டியில் " ' 'பாய்ஸ்' படத்தில் ஒரு வசனம் வரும். அதில் செந்தில் இன்ன தேதியில் இங்கே சோறு கிடைக்கும் என்று சொல்லும்போது வியாழக்கிழமை விஜயகாந்த் வீட்டில் சாப்பாடு போடுவார்கள். போய் வாங்கி வா ' என்று ஒரு பையனிடன் ஏவுவார். அதுதான் என் கணவர் சேர்த்து வைத்த சொத்து ' என்று புளகித்துப் போய் பேட்டி கொடுத்திருந்தார்.

காறித் துப்பலாம் போலிருக்கிறது.

தமிழனுக்கு ஓசியில் சோறு போட்டு, அவனை கையாலாதாகவன் ஆக்கி, பிச்சைக்கார வேஷம் கொடுக்கும் முயற்சி அது என்று ஏன் இவர்களுக்கு விளங்கவில்லை. ' ஒருவனுக்கு நீ ஒரு மீனை கொடுத்தால் அவனுக்கு அவ்வேளைக்கு சோறிடுகிறாய். அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால் நீ ஆயுசுக்கும் சோறிடுகிறாய் ' என்பதெல்லாம் இவர்களுக்கு விளங்குவதில்லையா..?? சோறு போடும் செலவை மூன்று மாசத்துக்கு சேர்த்து வைத்தால், ஒரு பஞ்சாலை வைக்கலாமே, ஒரு அரிசி மில் துவங்கலாமே, அட..குறைந்தபட்சம் ஒரு மளிகை கடை வைக்கலாமே...!! வைத்து அதில் கொஞ்சம் பேருக்கு வேலை கொடுத்தால், அது எல்லோர்க்கும் உதவுமே..

பயம்...வீணாப்போன பயம்.

' விஜயகாந்து சும்மாவா குடுக்கிறாரு. வேலை செஞ்சேன் . குடுக்கிறாரு' என்று சொல்லி விடுவார்களே. சும்மா குடுத்தாத்தான் பேர் வாங்கலாம். சோறு போட்டாத்தான் கட்சி ஆரம்பிக்க்லாம். ஒட்டு வாங்கலாம். பிறகு ஆட்சியைப் பிடிக்கலாம். பிறகு

அம்மைக்கு முண்டும்
அப்பைக்கு ச்சாராயமும்
குஞ்ஞினுக்கு சோறும்


என்று ஜனநாயக முறையில் சோறுபோட்டு வள்ளலாகவும், பொன்மனச்செம்மலாகவும் உருவெடுக்க்லாம்.

கருமம்.....நினைக்கவே கேவலமாக இருக்கிறது.

அரசியல்வாதிகளும் அரசியலுக்கு வரவிழைவோரும், மக்களை சோத்தாலடிச்ச பிண்டங்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

இவன்களுக்கெல்லாம், திமிர் எடுத்து திரிந்தாலும் ஜெயலலிதா தேவலாம்.

ஸ்நேகத்துக்கு .......

===============


சுற்றி எல்லாம் சுபம்

இவ்வுலகத்துக் காலம்
என் கனவு நிமிடங்களால் பகுப்பட்டிருக்கிறது

நடுச்சாமம் முழுதும்
எச்சி ஒழுக அரற்றிக்கொண்டிருந்த பசு
ஈன்றிருக்கிறது

வழியெங்கும்
அழகிய மஞ்சள் வட்ட மலர்களைத் தட்டான் சுற்ற
சூரியகாந்திப்பூ சூரியன் நோக்கியிருக்கிறது

கஷாயம் போலிருக்கும்
முக்கு டீக்கடை சாயா பாலுடன் கனக்க
எப்போதும் கரகரக்கும் ட்ரான்சிஸ்டர்
காதற்பாடல்களை ஒலிக்கிறது

நீர்வற்றிப்போயிருந்த பண்டாரங்குளத்தில்
சில தண்ணீர்ப்பூக்கள் தலைநீட்டியிருக்கின்றன
அங்கு
கலந்துகொண்டிருக்கும் நாயிரண்டைச் சுற்றி
சிறுவர் கூட்டமில்லை, கல்லெறிதல் இல்லை.

பலசாதிச் சிறுவர்கள்
தோள் மேல் கை போட்டுக்கொண்டு
தபாலில்லாத ட்ரவுசருடன்
பள்ளி செல்கிறார்கள்

சொன்னதைக் கேட்கிறது வீட்டு நாய்

சேவற் கூவலுடன் அமைதியில் காலை விடிய
கோயில் மணி மெலிதாய் ஒலிக்கிறது
மனவெழுச்சி நிரம்பிய இரம்மியப் பொழுதொன்றில்
இரவு கவிகிறது

எனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.


-oOo-

ஹரன் பிரசன்னா இந்தக் கவிதையை எழுதிவிட்டு ,திருநெல்வேலி செல்கிறார் தன் திருமணத்துக்கு.

இந்த மாதிரி மனநிலயில் கல்யாணம் செய்து கொள்வது ஒரு வரம்.

கவிதை மனசும், கற்பூர புத்தியும், உயர்ந்த ரஸனையும், ஒளிரும் எதிர்காலமும் உள்ள இந்த இளைஞனுக்கு, நம் இனிய ஸ்நேகிதனுக்கு எல்லா நலன்களும் உண்டாக இறைவனை வேண்டுவோம்.
செஸ்னா - கால்யா - நெக்ஸஸ் - கரீம்நகர்
=================================

மும்பையில் ஜெனித் கம்ப்யூட்டர்ஸ் என்ற கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது என் அம்மாவும், அப்பாவும் என்னைப் பார்க்க வந்தார்கள். மும்பையின் அவசர வாழ்க்கை, பணிக்கு தினமும் நான் செல்ல வேண்டி இருக்கும் தூரம், மும்பையின் நாகரீகமோகம் நிரம்பிய வாழ்க்கை, 90 ரூபாய்க்கு அபார்ஷன் செய்யப்படும் என்று கூவிக் கூவி அழைக்கும் விளம்பரங்கள் எல்லாம் அவர்களை சஞ்சலப்படுத்த ' மெட்ராஸூக்கு சீக்கிரம் வந்து சேரு ' என்று அன்பாக மிரட்டி விட்டு , ஒரு மழை நாள் இரவில் சென்னை எக்ஸ்பிரஸ்ஸில் கிளம்பிப் போனார்கள்.

அவர்களிடம் சொன்னபடி அடுத்த இரண்டு மாதத்தில் நெக்ஸஸ் கம்ப்யூட்டர்ஸ் என்ற சென்னை கம்பெனியில் சேர்ந்தேன். கம்பெனியைப் பற்றிய அறிமுகமே மிரட்டலாக இருந்தது. முப்பதாயிரத்த்துக்கும், இருபதாயிரத்துக்கும் கணிணிகள் மலிவுவிலையில் கிடைத்த அந்தக் காலத்திலேயே நெக்ஸஸ் அறுபது/எழுபதாயிரத்துக்கு விற்றுக்கொண்டிருந்தது. அவர்கள் அளிக்கும் வாடிக்கையாளர் சேவைக்காகவும், டெக்னாலஜி உதவிகளுக்காகவும் அந்த விலை கொடுத்தும் கம்ப்யூட்டர் வாங்க ஏராளமான வாடிக்கையாளர்கள் இருந்தனர். வேலை செய்பவர்களுக்கும் நல்ல ஊதியம், போனஸ், இன்செண்டிவ் என்று பணிசெய்யும் சூழ்நிலையே வித்தியாசமாய் இருந்தது.

தலைமை அலுவலகம் ஆரோவில் பாண்டிச்சேரியில். மைக்கேல் லூமியேர் என்ற ஃப்ரெஞ்சு கனவான் அரவிந்த ஆசிரமத்தில் தங்க வந்தபோது, அங்கு கிடைத்த அமைதியினாலும் , நிம்மதியினாலும் இளகி, கால்யா என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு , தன் சகாக்கள் உல்ரிச் ப்ளாஸ் என்ற ஜெர்மானியன், மற்றும் சுனைனா மண்டீன் என்ற் இந்திய பெண்மணியின் உதவியோடு 'அரோலாக் டேட்டா ப்ராஸஸிங் சிஸ்டம்ஸ்' என்று ஆரம்பித்த கம்பெனியே பின்னாளில் நெக்ஸஸ் கம்ப்யூட்டர்ஸ் என்றாயிற்று.

பணிபுரிந்த நான்கு வருடங்களும் நான் திருச்சி கிளையிலும், கும்பகோணம் சர்வீஸ் சென்டரை நிர்வகித்தும், பணிபுரிந்து வந்தாலும், பாண்டிச்சேரியுடனும், எங்கள் மதிப்புக்குரிய கால்யாவுடனும் அடிக்கடி தொடர்பு இருந்தது. தன்னிடம் வேலை செய்தவர்களை போஷாக்குடன் வைத்திருந்ததாலும், உழைப்புக்கு மதிப்பு அளித்ததாலும், தரத்தில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாததாலும் , கூடிய விரைவிலேயே நெக்ஸஸ் பல்கிப் பெருகியது. வருடம் ஒரு முறை எல்லா கிளைகளுக்கும் அதிரடி விசிட் செய்து எல்லா ஊழியர்களையும் அவர் சந்தித்து அளவளாவுவது வழக்கம். அப்படி வருகையில், தனக்கு சொந்தமான செஸ்னா விமானத்தில், தன் சொந்த பைலட்டுடன் தான் அவர் வருவார். போன வருடத்தில்தான் அந்த விமானத்தை அக்னி ஏவியேஷன் என்ற கம்பெனிக்கு விற்றார் என் மதிப்புக்குரிய மாஜி முதலாளி.


cessna


வார இறுதியில் எல்லோரையும் 'உச்' கொட்டவைத்த சவுந்தர்யா, அக்னி ஏவியேஷனுக்கு சொந்தமான அந்த விமானத்தில்தான் , விமானம் வெடித்து, உடல் கருகி இறந்தார்.

கால்யா எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்.

இந்தியாவில் இம் மாதிரி விமான விபத்துக்களின் காரணங்கள் தீர்க்கமாக ஆராயப்படட்டும்.

Saturday, April 17, 2004

பிள்ளைக்கு

===========

வாழ நினைத்த வாழ்க்கை பற்றி
நினைக்கையில்
பொங்கி வந்த துக்கம்
மறந்து
உன் சிரிப்பினில் நான்
உலகம் மறப்பினும்

தன் வயதில் தனக்கெட்டா
வசதியும் செல்வமும்
உனக்கு வேண்டும் என்று
என்ணி எண்ணி
தூக்கம் விலக்கினும்

படிக்கும் வயதில்
குடும்ப சூழலால்
தானிழந்த வேடிக்கையும்
விளையாட்டும்
நீயிழக்கலாகாதென்று
என் சுபாவம் மாற்றி
உப்போடு அப்பாய்
உணர்ந்து கலப்பினும்

கண்களை லேசாய் நீ
சிமிட்டினாலே
தூசியோ தும்போவென
பதைத்திடினும்
உனக்காக என் வாழ்க்கையயே
மாற்றி வைத்து
இழந்தவளை உன்னில்
கண்டிடினும்

பணிநேரப் பிரிவில்
உன் அன்னை
உனைப் பிரிந்து
வெளிச்செல்ல
என்னுடன்
பேசி பழகி
சிரித்து களித்து
மகிழ்ந்து நீ
ஆடித்திரிந்த அந்த
மூண்று மணி நேரமும்
என்னை
அம்மா அம்மா வென்றே
அழைத்தாயே...

நான் தாயுமானவானா..??
இல்லை
தந்தை என்ற பொறுப்பையே
இதுநாள்வரை
தட்டிக் கழித்திருந்தவனா..??

தெரிந்திதை செய்தனையோ...
அல்லது
என் மனசாட்சி விழித்ததுவோ..

சொல்லப்பா
என் ஸ்வாமிநாதா..


இன்றைய கவிதை உபயம்

என் செல்வன். ஸ்ரீமான். சூர்யா சுந்தர்ராஜன்

blog_surya

Friday, April 16, 2004

கார் காலக் கதைகள்
====================

அமெரிக்காவில் ஆடு கூட கார் ஓட்டும் என்று சுஜாதா எங்கோ எழுதி இருக்கிறதாய் ஞாபகம்.

அது ஒருவகையில் உண்மை. நம்ம ஊர் கார்களைப் போல் இங்கு க்ளட்ச் கிடையாது. ஆட்டோ கியர் சிஸ்டம் வேறு. பார்க் மோட், ரிவர்ஸ் மோட் , டிரைவ் மோட் என்று ஹாண்டிலை மாற்றி மாற்றி ஓட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான். கார்களும் விலைக்கேற்ப, பாதுகாப்பு வசதிகளுக்கு ஏற்ப, உயர் ரகம்.

கார் ஒட்ட தேவர் ஃப்லிம்ஸ் ஆடு சிரமப்படாது. ஆனால் கார் லைசன்ஸ் வாங்க, என்னைப் போல விளையாட்டுப் பிள்ளைகள் பட்ட பாடு இருக்கிறதே....அதை எழுத ப்ளாக்கர் போதாது. மரணவேதனை. இந்தியாவில் முறையாக கற்றுக்கொண்டு நான் அவ்வளவாக கார் ஓட்டியதில்லை. கார் டிரைவிங் க்ளாஸ் போய்விட்டு, முதல்நாளே அந்தாள் பண்ணின அலட்டல் தாங்க முடியாமல் ஓடி வந்து விட்டேன்.கார் மட்டுமல்ல,எந்த வாகனத்தையும் (சைக்கிளைத் தவிர) நான் யாரிடமும் கற்றுக்கொள்ளவில்லை. முதல் முறை ஓட்ட ஆரம்பித்ததே சொந்தக் காரில்தான். முதல் கியர் போட்டுவிட்டு க்ளட்சை விடத்தெரியாமல் விட, ஒரு துள்ளு துள்ளி கார் பெட்ரோல் வாசமடிக்க கார் நின்று போனது. போராடி, அதை ஒருவழியாக தோது பன்ணி விட்டு கனஜோராக ஓட்டினால ஏதோ பொசுங்கும் வாடை வந்தது. பயந்து கொண்டு நிறுத்தி விட்டு , பிறகு பார்த்தால் ஹேண்ட் ப்ரேக் ஆன் ஆகி இருந்தது.

நிற்க.

இவ்வளவு 'அனுபவம்' இருந்ததால், அமெரிக்காவில் ஹாயாக கார் ஓட்டலாம் என்று வந்து சேர்ந்த இரண்டாம் மாதமே கார் வாங்கி விட்டேன். ஹோண்டா அக்கார்ட் - 6 சிலிண்டர் மாடல். டிரைவிங் விதிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற காரணத்துக்காகவாவது ஒரு இன்ஸ்ட்ரக்டரிடம் போக வேணும் என்று சகாக்கள் சொல்லவே, சூசன் என்ற சீனமாதுவிடம் கார் கற்றுக் கொள்ள ஏற்பாடாயிற்று. காரில் உட்கார்ந்து வீதிகளில் பிராக்டீஸ் பண்ணும் முன், கலிஃபோர்னியா ட்ரைவிங் ரூல்களைப் படித்து , ஒரு பரீட்சையில் பாஸ் பண்ண வேண்டும்.
மேனுவலைப் படித்து, ஏற்கனவே ப்ரீட்சை எழுதிய நண்பரகள் கொடுத்த் கொஸ்டின் பேப்பர்களை கடம் அடித்து, பாஸ் பண்ணி விட்டுத்தான் சூசனிடம் போனேன். சூசன் எனக்கு எப்படி சொல்லிக் கொடுத்தாள் என்று நான் சொலவதை விட, அந்த குடாப்பகுதி மக்கள் அந்தக் காலங்களில் என்ன பாடு பட்டார்கள் என்று சுருக்கமாக சொல்லி விடலாம். அவள பேசும் சிங்லீஷ் எனக்கு விளங்காது. அதே போல நான் பேசும் தமிழ் வாசம் அடிக்கும் இங்லீஷும்.

கடைசியாக அடுத்த கட்ட தேர்வு DMV யில். இத்த்னை நாள் சூசனுடன் ஓட்டியவன் அதே காரியத்தை டிரைவிங் இன்ஸ்பெக்டர்களுடன் செய்ய வேண்டும். அந்தாள் பக்கத்து சீட்டில் உட்கார்ந்து கொண்டு வழி காட்டுவான். அவன் காட்டும் வழியில் , எல்லா விதிகளையும் அனுசரித்து ஓட்ட வேண்டும். பக்கத்தில் உட்கார்ந்து மார்க் போட்டுக்கொண்டே வருவான்.பண்ணும் தவறுகளைப் பொறுத்து பாயிண்ட் குறையும். அதன் அடிப்படையில் பாஸ்/பெயில் என்று இறுதியில் காரை நிறுத்தச் சொல்லிவிட்டு சொல்லுவான்.சூசன் சொன்னாலே எனக்குப் புரியாது. டிரைவிங் இன்ஸ்பெக்டர்கள் எல்லாம் மிகுதியும் வெள்ளைகாரர்கள். என் நிலையை நினைத்துப் பாருங்கள்.

மூன்று முறை ரோட் டெஸ்டில் ( Road test) மண்ணைக் கவ்வினேன்.

பிறகு எழுத்துத்தேர்வை இன்னொரு முறை எழுதி, நாலாம் முறை ரோட் டெஸ்ட் பாஸ் பண்ணியபோது தான் உயிரே வந்தது. திமிர் சும்மா இருக்க விடுமா...?? லைசன்ஸ் கிடைத்து இரண்டாம் மாதம், ஒரு வெள்ளி இரவில் நண்பன் வீட்டில் லைட்டாய் 'தீர்த்தம் ' தெளித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தேன். அமெரிக்காவில் இது பஞ்சமாபாதகங்களில் ஒன்று. மேலும் போலீஸ்காரர்களிடம் மாட்டிக் கொண்டால் தீர்ந்தது கதை. தொப்பை இல்லாத , லஞ்சம் வாங்காத இந்தப் போலிஸ்காரர்களிடம் தலையை சொரியவும் முடியாது. இருந்தும் , நான் பாட்டுக்கு 'சுதியில்' வேகமாக ஓட்டி விட்டேன் போலிருக்கிறது.

மாமா , பின்னாடி வந்து 'விளக்கு' போட்டு விட்டான். உடனே வலப்பக்கம் ஓரம் கட்டி காரை நிறுத்தி விட வேண்டும். நிறுத்தினேன். கார் கண்ணாடியை இறக்காமல், ஸ்டியரிங் வீல் மேல் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு உட்கார்ந்து வெயிட் பண்ன வேண்டும். உட்கார்ந்திருந்தேன்.மாமா வந்து கார் கண்ணாடியில் விரல்களால் தட்டினான். கார் கண்ணாடி இறக்கும் சுவிட்சை தேடி என் விரல்கள் அலைந்த வேகத்தில் ஏதாவது பியானோ கீ போர்ட் மேல் பட்டிருந்தால் , ஒரு பெரிய சிம்பனியே கிடைத்திருக்கும். ஒருவழியாக இறக்கினேன்.
லைசன்ஸ் நம்பரையும், கார் ரெஜிஸ்ரெஷனையும் பரிசோதித்து, Do you think you can Go home safely..?? Because you were over speeding .. என்றான்.

தட்டுத்தடுமாறி Sorry Sir என்று சொல்லி விட்டு , தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்ததை இன்றைக்கு நினைத்தாலும் நம்பவே முடியவில்லை. நிஜமாகவே அங்கே மச்சம் எனக்கு.

பிறகு கடந்த மூன்று வருடங்களாக , எந்த விதி மீறலும் செய்யாமல் சமர்த்தாக கார் ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.என்னிடம் கற்றுக்கொண்ட என் மாணவியும்..ச்சீ..என் மனைவியும் ஒழுங்காக கார் ஓட்டிக் கொண்டிருக்கிறாள். இரண்டு நாள் முன்பு நண்பர் அருண் அவர் மனைவிக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பதாய் சொன்னபோது மேற்சொன்ன என் பராக்கிரமங்கள் நினைவுக்கு வந்தன.

Thursday, April 15, 2004

கோவில் - ( சிம்பு சினிமா விமரிசனம் அல்ல)
===================================

கும்பகோணம் கோயில்களுக்கு பேர் போனது என்றாலும் , பொதுவாகவே பழைய தஞ்சை மாவட்டத்து ஊர்கள் எல்லாமே பாடல் பெற்ற ஸ்தலங்கள் தான். சீர்காழி சட்டையப்பர், வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத ஸ்வாமி, திருவாரூர் கமலாலயம், மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி, தஞ்சை பிரகதீஸ்வரர் , வைணவத் தலங்களில் ( 108 திருப்பதிகளில்) பெரும்பான்மை, நவக்கிரக ஸ்தலங்கள், அட்ட வீரட்டாணங்கள் என்று எங்கெங்கு காணினும் கோயில்கள் தான். எனவே சின்ன வயசில் அப்பாவுடன் போனது பாதி நேரம் கோயில்களுக்குத்தான்.

ஆனாலும், அடிக்கடி போய் வந்தாலும் அலுக்காதது மாயவரம் மாயூரநாத ஸ்வாமி கோயில்தான். வருடம் முழுமைக்கும் ஏதாவது நடந்து கொண்டிருந்தாலும், ஐப்பசி மாதம் முழுக்க திருவிழாக் கோலம் பூண்டுவிடும் கோயில் அது. ஐப்பசி மாதம் முதலாம் தேதி கோயிலில் கொடி ஏறியதுமே, லேசாக மழை தூறி விடும். அன்று தொடங்கி, ஐப்பசி 30, கடைமுழுக்கு வரை, கோயில் புறப்பட்டு, ச்ந்நித்த் தெரு, வடக்கு வீதி, தெற்கு வீதி வழியாக, எங்கள் தெருவான மேலவீதி வந்து, பிறகு பட்டமங்கலத் தெரு வழியாக நேராக லாகடம் ( துலாக்கட்டம்) போய் காவேரி ஆற்றில் தீர்த்தம் கொடுத்து விட்டு , பிறகு கோயிலுக்கு போவது தினப்படி நடக்கும்.ஒவ்வோரு நாளும் ஒவ்வொரு வாகனம், ஒவ்வொரு அலங்காரம் என்று அம்பாளும் , ஸ்வாமியும்,வழியில் சாத்தப்படும் பட்டுத்துண்டுகளையும் அர்ச்சனைகளையும் ஏற்றுக்கொண்டு விதியுலா போவதைக் காணக் கண்கோடி வேண்டும். மாயவரம் கோயிலில் உற்சவர் ஸ்வாமி அலங்காரத்துக்கு பேர் போனது என்று என் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன்.

periyakovil


தமிழக அரசிலிருந்து கோயிலுக்கு சரியாக நிதி வராதபோது, உள்ளுர் ஆட்கள் சேர்ந்து கோயிலுக்கு நிரைய செய்ய ஆரம்பித்தார்கள். அதனால் பாழ்பட்டுக் கிடந்த கோயில் பகுதிகள் எல்லாம் சீர் செய்யப்பட்டு, இந்த முறை ஊருக்கு போனபோது கோயில் சுத்த்மாக இருந்தது. கற்பூர வாசமும், கதம்ப வாசமும், விபூதி வாசமும், பத்தி வாசமும், அபிஷேக நீர் தரையில் ஓடி கல்தரையில் பிடித்த பாசி வாசமும், கோயில் யானையின் கொட்டகையைக் கடக்கும்போது வரும் 'அந்த' வாசமும், நெக்குருகி இந்திரதீபம் பார்க்கையில் ஏற்படும் மெய்யுணர்வும் கலவையான அனுபவம்.

சிங்கப்பூரிலும், அமெரிக்காவிலும் பிஸினஸ் செய்யும் இடம் போல , பள பளத்துக் கொண்டு , நாசுக்கான ஆங்கிலத்தில் பக்தர்களை வழிகாட்டும் கோயில்களில், 'இறைவன் தன் பாதத்தில் ஈடுபடும் சொல் அல்லால் பிற வார்த்தை யாதொன்றும் பேசற்க ஆலயத்துள் ' என்று அழகு தமிழில் வழிப்படுத்திய ஆலயங்களை ஒப்பிடவே முடியவில்லை.

இது சம்பந்தமாக ராயரில் ஒரு திரி ஓடிக்கொண்டிருந்தபோது, தமிழ்மாது கீழ்வரும் கவிதையை முன்னிப்பு செய்தார்.

எண்ணைய்ச் சிக்கு நாற்றமும்,
குறுக்கே ஒடும் மூஞ்சூருகளும்,
வௌவ்வால் புழுக்கைகளும்,
வேர்க்கும் கர்ப்பக்கிரகங்களும்,
இருட்டுப் பிரகாரங்களும்,
பயமுறுத்தும் துவாரபாலகர்களும்,
மூலவர் பின்னால் காப்பி குடிக்கும் அர்ச்சகரும்,
மடிசார் மாமிகளும்
இல்லாத கோவிலா ?
நான் வரவில்லை
ஸ்வாமி.


கடைசி இரண்டு வரிகளுக்கு நடுவே இடைவெளி விட்டு படித்துப் பார்த்தேன்.

சுவாரஸ்யமாக இல்லை..??

Wednesday, April 14, 2004

வயசுப்பசங்க சமாசாரம் - பகுதி 2
==================================

முதல் வெளிநாட்டுப் பயணம்.

மே 3, 1999 மதியம் சென்னை விமானநிலையத்தில் வீட்டாருக்கு விடை கொடுத்து 'ஏர்-இந்தியா' பிடித்து மாலை சிங்கப்பூர் 'சாங்கி' யில் இறங்கி, 'பொடாங் பாசிர்' மெய்யப்பன் செட்டியார் தெருவில் உள்ள வீட்டில் தங்குகிறேன்.மூன்று நாட்கள் கழித்து தமிழ்முரசு பத்திரிக்கை வரிவிளம்பரங்களை படிக்கையில், மசாஜ் பார்லருக்கு ·போன் செய்து, "கட்டணம் என்ன என்று கேட்டேன்" என்று சொன்னால் நம்புவீர்களா..??

செய்தேன்.

சிங்கப்பூர் என்றதுமே எனக்கு 'ப்ரியா' வில் தேங்காய் சீனிவாசன் மசாஜ் பார்லரில் அடிக்கும் கூத்துக்கள்தான் நியாபகம் வந்தன. ஏற்கனவே சிங்கப்பூரில் இருந்த என் கல்லூரி நண்பர்கள் இந்த மாதிரி தீரச்செயல்கள் எல்லாம் புரிந்து 'கதை' சொல்லி இருந்தார்கள். கெட்ட காரியம் பண்ணும்போது மட்டும் கூட்டணியே கூடாது என்ற தர்மத்திற்கேற்ப அந்த நாளுக்காக காத்திருந்தேன். சிஙகப்பூரில் வேறு பகுதிகளில் எல்லாம் தாய்லாந்து பாணி மசாஜ் இருந்தாலும் ( அதுதான் ஒரிஜினல் மசாஜ் !!) , சிட்டி ஹால் ஸ்டேஷனை ஒட்டி தமிழ் மகளிர் பார்லர் ஒன்று உண்டு.

blog_massage


உள்ளே போனவுடன் ஒரு மாதிரி அரை இருட்டாக இருக்கும். அதுவும் காலை நேரம் என்றால் , சாம்பிராணி எல்லாம் போட்டு உள்ளே கம கம என்று வாசனை அடிக்கும். பழங்கால ஜமீந்தார் வீட்டில் இருக்கும் கணக்குப் புத்தகம் போல இருக்கும் ஒரு குண்டு ரெஜிஸ்தரில் பேர், பாஸ்போர்ட் நம்பர், EP நம்பர் எல்லாம் எழுத சொல்வார்கள். பிறகு வரிசை வரிசையாக தடுப்பு வைத்து கட்டப்பட்டிருக்கும் அறைகளில் ஒன்றினுள்ளே காத்திருக்கச் சொல்வார்கள். உட்காரச் சொல்லிவிட்டு போகும் போது, அறை உள்ளேயே இருக்கும் பாத்ரூமில் குளிக்கச் சொல்லி விட்டு, ஒரு பெரிய தேங்காய்ப் பூ டவல் - மட்டும் - கட்டிக் கொள்ள சொல்வார்கள். முடித்து விட்டு , தடக் தடக் என்று மனசு அடிக்க, உட்கார்ந்திருந்தால், பிறகு வருவார்கள் மசாஜ் பெண்கள்.

இதற்கு பிறகுதான் தமாஷ்.

பேர் கேட்பார்கள். கல்யாணம் ஆச்சா என்பார்கள். எந்த ஊர் என்பார்கள். என்ன மசாஜ் வேண்டும் என்பார்கள். பவுடர் மசாஜ் என்றால் ஒரு ரேட், ஆயில் மசாஜ் என்றால் கொஞ்சம் அதிகம். 'ஸ்பெஷல்' மசாஜ் என்றால் ரொம்....ம்ப அதிகம். உயரமான பெட் ஒன்று இருக்கும். அதில் குப்புற படுக்கச் சொல்லி விட்டு, மசாஜுக்கு ஏற்றபடி, முதுகுப் பக்கம் அமுக்குவார்கள். பலவீனர்களை எங்கு 'தட்ட' வேண்டுமோ அங்கு தட்டி , பாதுகாப்பான "ஸ்பெஷல்' மசாஜுக்கு ஏற்பாடு பண்ணி விடுவார்கள். '·புல் மீல்ஸ் வாணாம். ஸ்நாக்ஸ் மட்டும் போதும்' என்று நிறுத்தி விடுவது புத்திசாலித்தனம்.

இல்லாவிட்டால் பரங்கிமலை "ஜோதி" யிலோ, கீழ்பாக்கம் 'மோட்சம்' மிலோ, பிட் ரீல் எக்ஸ்ட்ரா ஆகும் அபாயம் இருக்கிறது.

ஜாக்கிரதையாக ஆடினால் இது ஜாலி கேம்தான்.

வேறு எதற்கும் அல்ல. ஒரு தமாஷ் அனுபவத்திற்கு. இந்த மாதிரி உங்களுக்கு எழுதிக்காட்டுவதற்கு.


எரிச்சல் தாங்கலை சாமி....
====================

விருமாண்டி, தென்றல், ஆட்டோகிராஃப் என்று பார்க்க வேண்டிய படங்களின் லிஸ்டில் ' கனவு மெய்ப்பட வேண்டும்' என்ற புதுப்படமும் சேர்ந்திருக்கிறது. சாக்ரமண்டோ தேசி ஸ்டோர்களில் இந்தப் படங்களின் அடர்தகடு வந்து சேருவதற்குள் எனக்கு சதாபிஷேகம் பண்ணி விடுவார்கள் போலிருக்கிறது.

kanavu02


க.மெ.படவேண்டும் டைரக்டர் ஜானகி விஸ்வநாதன் ஏற்கனவே 'குட்டி' என்ற படம் எடுத்திருக்கிறார் என்று நமக்குத் தெரியும். குட்டி படம் குழந்தைத் தொழிலாளர் கொடுமையை மனம் கனக்கும் வண்ணம் சொல்லிச் சென்ற படம். காட்சியமைப்புகள் சற்றே செயற்கையாக இருந்தாலும், கனிவும் கருணையும் மிக்க டைரக்டரின் மனசுக்காக , அது அந்தப் படத்தில் வெளிப்பட்ட விதத்துக்காக, எனக்குப் பிடித்தது. நாசர், தன் மகளோடு அந்தப் படத்தில் பாடும் ஒரு பாடல் கொஞ்ச நாளைக்கு மனசை என்னமோ செய்து கொண்டிருந்தது.

இந்தப் படத்தின் கருவும் சீரியஸ் ஆன 'தேவதாசி' விஷயத்தை ஒட்டியதுதான். பல கதைகளில், பல திரைப்படங்களில் எல்லோரும் தொட்டதுதான். ஜானகிராமனின் அம்மிணி, பாலகுமாரனின் 'அகல்யாவில்' சிவசுவின் அம்மா, வாழ்வே மாயம் ஸ்ரீப்ரியா, மோகமுள் யமுனாவின் அம்மா , என்று சட் சட்டென்று விளக்கு போட்டாற்போல கொஞ்சம் பேர் வந்து போனார்கள். ரம்யா கிருஷ்ணன் இந்த மாதிரி பாத்திரத்திற்கு பொறுத்தமான ஆள்தான். :-)

ramya01


யப்பாடி, நம்மாளுங்க யாராவது மெட்ராஸ்ல படத்தைப் பாத்து சுடச்சுட எழுதுங்கப்பா...

பாலைவனத்துல மாட்டிகிட்டு காஞ்சு போனா மாதிரி இருக்குது.

பி.கு: இந்தப் பதிவு வந்த ஒரு வாரம் கழித்து சுரேஷ் ராயரில் இட்ட விமரிசனம்.
நேசமுடன் வெங்கடேஷ்
====================

சிஃபி வெங்கடேஷ் புதிய முயற்சிகளுக்கு எப்போதும் யோசிப்பவரல்ல. எப்போதும் அவரிடம் இருந்து ஏதாவது அறிவிப்பு மடல்கள் வந்து கொண்டே இருக்கும். பழைய விஷயங்களைக் கூட வித்தியாசமாக செய்து எல்லோரையும் வியக்க வைப்பதில் அவர் "இணையப் பார்த்திபன்".

அவரிடம் தனிமடல்கள் அனுப்பினால் மறந்து விடாமல் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்வது மட்டுமல்ல, ஆலோசனையும் வழங்கி, கடைசியில் 'நேசமுடன் வெங்கடேஷ்' என்று கையெழுத்திடுவார். என் நண்பரகள் வட்டாரத்தில் வார்த்தையாடும் போது கூட 'நேமுடன்' வெங்கடேஷ் மெயில் போட்டாருய்யா என்று சொல்வதே வழக்கம்.

போன வார இறுதியில் 'நேசமுடன்' மடலிதழ் வழியே எல்லோருடனும் பேசப் போவதாக அவர் அறிவிப்பு இட்டதும் ' ஆஹா..சரியான பெயர் ' என்று நானே உரக்கச் சொல்லிக் கொண்டேன். இன்னமும் சப்ஸ்க்ரைப் செய்யவில்லை. விரைவில் செய்ய வேண்டும். ஆனால், மடலாடற்குழுக்களில் எழுதுபவர், வலைப்பூ வைத்திருப்பவர், ஏற்கனவே வெப்சைட் வைத்திருப்பவர், அதையெல்லாம் விடுத்து, அவரே அறிவிப்பில் சொல்லி இருக்கும்படி ரிவர்ஸில் ஏன் போக வேண்டும் என்று யோசித்துக் கொண்டே...ஏ ....ஏ இருக்கிறேன். ஏற்றுக்கொண்ட பொறுப்புகளினாலும், பணி அழுத்தத்தினாலும், மடலாடற்குழுக்களிலேயே ரெகுலராக எழுத முடியவில்லை என்று குறைபட்டுக் கொள்பவர் இந்த மடலிதழை தொடர்ந்து நல்லபடியாக நடத்த வேண்டும் என்று நினைப்பது , நிச்சயமாக நமக்குத்தான் லாபம்.

இதில் இன்னொரு பயனும் விளையப்போகிறது. நம்மில் யாராவது முக்கியமான இலக்கிய சம்பந்தமான விஷயங்களை அறிவிப்பு செய்ய விரும்பினாலோ, புதிதாக வெளிவந்த புத்த்க தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்பினாலோ, உலகமெங்கும் சிதறிக்க்கிடக்கும் நாம் எல்லாரும் இணையம் வழியே புத்த்கம் வாங்க ஒரு நல்ல வெப்சைட் பற்றிய தகவல்கள் வேண்டினாலோ, நேசமுடன் மடலிதழாசிரியருக்கு ஒரு 'காயிதம்' போட்டால் போதும்.

என் வாழ்த்துக்கள்...

Tuesday, April 13, 2004

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது
===============

பக்தி

மாலை கோவில் போக வேண்டும்
மறக்காமல் அர்ச்சனை செய்ய.

அரளியில்லா கதம்பம் வேண்டும்
அரளிபட்டால் அரிக்கும் இவளுக்கு.

கனிந்த வாழைப்பழம் வேண்டும்
காலையில் இரண்டு நாளாய்க்
கழிவறை போகவில்லை.

முத்திய தேங்காய் நல்லது
திரும்பும் ஒற்றை மூடி
தோசைக்குச் சட்டினியாகும்.

அய்யருக்குச் சில்லரை தேவை
ஐந்தாய்த் தட்டில் போட்டால்
மீதி தரமாட்டார்.

உண்டியலுக்குத் தேவையில்லை
போனமுறை சில்லரையின்றி
முழுரூபாய் போட்டான் உதவாக்கரை.

செருப்பை மறக்காமல்
பிரித்து விட வேண்டும்.



என்னதான் எழுதி இருக்கிறார் என்று கனடா வெங்கட்டின் தளத்தில் இன்று மேய்ந்தேன். கண்ணில் பட்ட இரண்டு கவிதைகளில், எனக்குப் பிடித்தது இதுதான் என்று நான் இங்கே எடுத்த்துப் போட்டால், என் அறிவின் எல்லைகளும், எதை நோக்கி என் மனம் போகிறது என்பதும் அன்பர்களுக்கு ஒருவாறு விளங்கும் என்பதே என் நோக்கம்.

என்னுடைய கருத்துக்கள் இவ் விஷயத்தில் மாறலாம். வலைப்பூக்களைப் பற்றியும் இப்படித்தான் அவரிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன். கிண்டல் அடித்தேன். இப்போது முழு வேகத்தில் வலைப்பதிந்து கொண்டிருக்கிறேன். வளர விருப்பம் உள்ளவர்களுக்கு எதுவும், எக்காலத்திலும் இறுதிக்கருத்தல்ல. எனக்கும் அவ்விதமே.

அவருடைய 'சங்கம்' முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

இத்துடன் இந்த சர்ச்சையை முடித்துக் கொள்கிறேன்.

Monday, April 12, 2004

இந்த வார ஸ்பெஷல் - கும்மோணம் கொத்து பரோட்டா
=====================================================

கனடா வெங்கட் தன் வலைப்பதிவிலும், ராயர் காப்பி கிளப்பிலும் என் மூக்கை ஏகத்துக்கு சேதாரப்படுத்தி இருக்கிறார். என்மீது கோபப்பட அவருக்கு உரிமை இருப்பது போலவே அவருக்கு பதில் சொல்ல எனக்கும் உரிமை இருக்கிறது. என் பதிலினால் அவருக்கு கோபம் ஏற்பட்டால் அதற்கு நான் வருந்துவதை தவிர ஏதும் செய்ய இயலாது.

அவர் பெரிய விஞ்ஞானி. படிக்கும் காலத்திலிருந்தே ஏக காலத்தில் ஏகப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய ஆர்வமும், அதீத சக்தியும் இருந்திருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற ஒரு சராசரியின் வலைப்பதிவில் எழுதி இருக்கக்கூடிய விஷயங்களை முழுதாக, சரியாக படிக்காமல், வேக வேகமாக வார்த்தைகளை வீசி இருக்கிறார்.

புரட்சி வெடிக்கிறது..?? என்று தலைப்பிட்டால் இளப்பமா..?? எள்ளலா..?? இது எந்த ஊரில்..? நான் எழுதும்போது எனக்குத் தோணாத விஷயம், படிக்கும்போது ஒருவருக்குத் தோன்றி இருந்தால் அது அவர் பார்வைக் கோளாறு என்றுதான் நினைக்க முடியும். அந்தக் கேள்விக்குறிகள் என்னுடைய ஐயத்தை, சந்தேகத்தை, மட்டுமே வெளிப்படுத்துவதாக நினைத்து நான் எழுதினேன்.

முதற்கண், வலைப்பூ என்னுடையது. கருத்துக்கள் என்னுடையவை. ' என் மூக்கு' என்ற தலைப்பின் கீழே ஆங்கிலத்தில் எழுதி இருக்கும் வார்த்தையும், அதன் 'ஒரிஜினல்' அர்த்தமும் அவருக்கு தெரிந்திருக்கும்.

அது போகட்டும். குறிப்பிட்ட பதிவின் கடைசி பத்தியையாவது ஒழுங்காய்ப் படித்தாரா
என்பது தெரியவில்லை. வேணுமானால் இப்போது படிக்கட்டும். அதோடு அந்தப் பதிவுக்கு
பின்னூட்டம் தந்திருக்கும் நண்பர்களுக்கு நான் அளித்த பதில்களில் இருந்த நடுநிலைமையையும் ....

கவிதை எழுதுபவர்களை, கதை எழுதுபவர்களை ' சில்லுண்டி ஆசாமிகள் ' என்று வர்ணித்த பிரகாஷ¤க்கு பதில் சொல்வதே அந்தப் பதிவின் நோக்கம். என்னுடைய விருப்பங்களை, என்னுடைய நம்பிக்கைகளை , என்னுடைய பெரும்பாலான நண்பர்களின் பதிவுகளில் வருகின்றவறை ஒருவர் சில்லுண்டி சமாசாரம் என்று சொல்லுகின்றபோது, அதற்கு பதிலாக அவர் உசத்தி என்று நினைக்கின்ற விஷயங்களில் என் கருத்தை
சொல்ல வேண்டுமல்லவா...அதைத் தான் செய்தேன்.

அதை உறைக்கிற மாதிரி சொல்லி விட்டேன் போலிருக்கிறது.

நியாயமாகப் பார்த்தால் இதற்கு பிரகாஷின் எழுத்தாள நண்பர்கள்தான் பதில் தந்திருக்க வேண்டும். ஏனென்றால் ' சில்லுண்டி' என்ற கமெண்ட்டுக்கு என்னைவிட அதிகமாக கோபப்பட அவர்களுக்குத்தான் தகுதி அதிகம்.

அவர்கள் கேட்க மாட்டார்கள்.

மற்றபடிக்கு, என் பதிவில் என் விருப்பத்துக்கு தகுந்த விஷயங்கள்தான் வரும். ஏனென்றால்
வலைப் பின்னல்களையும் , ப்ரோட்டோகால்களையும் பற்றி படிக்கவோ, அறிவை விருத்தி செய்வதற்கோ ஏகப்பட்ட ஆங்கில புத்தகங்கள் இருக்கின்றன. பல்கலைக்கழகத்தில் பாடங்கள் உள்ளன. அவை என்ன புத்தகங்கள் என்று சொல்ல google இருக்கிறது. ஆங்கிலமே படிக்கத் தெரியாதவர்கள் இதை எல்லாம் என் மூலமாக படிக்க வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு இதை எல்லாம் என் வலைப்பதிவில் எழுதி, குன்றேறி மண்டைக்குப் பின் ஒளிவட்டத்தோடு காட்சி தரவும், பின் அதை எல்லாம் தொகுப்பு கட்டுரைகளாக போட்டு ' தமிழில் சுஜாதாவுக்கு பின், முருகனுக்குப் பின் விஞ்ஞானம் எழுதுபவர் ' என்று பேர் வாங்கும் உத்தேசம் எதுவும் எனக்கு இல்லை. எனக்கு என் தொழில் கடந்து , என் பிழைப்பு கடந்த ஆர்வங்கள் பல உண்டு. எழுத, பகிர்ந்து கொள்ள செய்திகள் உண்டு. விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்று நான் படித்தவனில்லை. " சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் முழு நேர பத்திரிக்கையாளரகவும், எழுத்துத் தோழில் செய்பவனாகவும், கலை சார்ந்த துறைகளிலேயே ஈடுபட்டிருப்பேன்" என்று வலைப்பூவிலேயே பல முறை எழுதி இருக்கிறேன். விருப்பமும் தொழிலும் ஒன்றாய்ப் போகும் அதிர்ஷ்ட்டம் வெங்கட்டுக்கும், தங்கப்பல் ரெங்கய்யனுக்கும் இருக்கிறது. எனக்கு அது இல்லை . அதற்காக தவச மந்திரம் ஓதுவது மாதிரி என் வேலையை செய்கிறேன் என்ற பொருள்பட அவர் எழுதி இருப்பதும் உண்மை இல்லை. அது எனக்குத் தெரியும். கல்லூரி முடித்த காலத்திலிருந்து இன்றுவரை மேலே மேலே போய்க் கொண்டிருக்கும் என் career graph க்கு தெரியும்.

Networking is my Bread winner. Literature is my soul winner.அதில் நான் தெளிவாக இருக்கிறேன். விஞ்ஞானமானலும் இலக்கியமானாலும், உண்டு உறங்கி புணர்ந்து எழுவத தவிர மனிதனை இயக்கும் எல்லா விஷயங்களும் வாழ்வின் பால் அக்கறையும், சக மனிதர்கள் மீதான நேசத்தையும், மரணபயம் மூலமாகவும் விளைந்தவையே. இதில் விஞ்ஞானம் சார்ந்ததும், அதை பகிர்ந்து கொள்வதும் அற்புதம் என்றும் கலையையும் இசையையும், சராசரிகளே பகிர்ந்து கொள்கிறார்கள் என்று விஞ்ஞானிகளுக்கு தோன்றுமானால், அது அவர்களோடு இருக்கட்டும்.

என் நம்பிக்கைகளும், ஆதர்சங்களும் என்னோடு. அவை சில்லுண்டி சமாசாரங்கள் என்றாலும்....


Friday, April 09, 2004

சாக்ரமண்டோ - என் புத்தக அலமாரிக்கு ஒரு விசிட்
=====================================


திடீரென்று கிடைத்த இந்த லீவில், புத்தக அலமாரியை ஒழுங்கு படுத்தலாம் என்று இறங்கினேன். ' என்னுதா இதெல்லாம்..எப்ப வாங்கினேன் ' என்று மூளையக் கசக்கி யோசித்தாலும் நினைவுக்கே வராதபடிக்கு கீழ்க்கண்ட புத்த்கங்கள் அனைத்தும் காணக் கிடைத்த்ன.

பிச்சைக்காரன் வாந்தி எடுத்தாற்போல உள்ள அந்தப் பட்டியல் இதோ :

1. நிஜங்கள் - டாக்டர் ருத்ரன்
2. சோ என்கிற இரட்டை நாக்குப் பார்ப்பனர் - கலி.பூங்குன்றன்
3. மெளனமே காதலாக - பாலகுமாரன்
4. தமிழர் தலைவர் தந்தை பெரியார் - சாமி.சிதம்பரனார்
5. இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள் - பாகம் 2/3 - தொகுப்பு - விட்டல் ராவ்
6 .நெஞ்சில் நிற்பவை - 60 முன்னணி எழுத்தாளர்களின் சிறுகதைகள் - தொகுப்பு - சிவசங்கரி
7. கடற்கரைக் கால்கள் - பூமா. ஈஸ்வரமூர்த்தி
8. பசுவய்யா 107 கவிதைகள்
9. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன்
10. தீ பரவட்டும் - சி.என்.அண்ணாதுரை
11. மரபுகளின் அருவி - பாபா
12. அபிதா - லா.ச.ரா
13. 406 சதுர அடிகள் - அழகிய சிங்கர்
14 .இறகுகளும் பாறைகளும் - மாலன்
15. யாருடனுன் இல்லை - அழகிய சிங்கர்
16. சிகரங்களை நோக்கி - வைரமுத்து
17. அர்த்த்முள்ள இந்து மதம் - கண்ணதாசன் பாகங்கள் - 4/5/7/8/9/10
18. அக்னிச்சிறகுகள் - டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்
19. தியானம் - ஓஷோ
20. தேவைகள் ஆசைகள் - ருத்ரன்
21. உறவுகள் - ருத்ரன்
22. எப்போதும் பெண் - சுஜாதா
23. அட்டை பிய்ந்து போன ஒரு விடுதலை பிரசுரம் ( காங்கிரஸில் பிராமணீயம்..? )
24. பிரிவோம் சந்திப்போம் - பாகம் 2
25. சித்தர் பாடல்கள் தொகுப்பு - அரு ராமநாதன்
26. மேய்ச்சல் மைதானம் - பாலகுமாரன்
26. பார்ப்பனர்கள் பற்றி தந்தை பெரியார்
27. who moved my cheese
28. உயிரைச் சேமித்து வைக்கிறேன் - எஸ்.ஷங்கரநாராயணன்
29. வேரும் வாழ்வும் - மலேசிய சிறுகதைத் திரட்டு - கலந்தை சை.பீர்முகம்மது
30. The person - Theodore Lidz
31. பாரதியார் கவிதைகள் - தொகுப்பு
32. புத்ர - லா.ச.ரா
33. மாறுதடம் - சுப்ரபாரதி மணியன்
34. வெறுக்கத்தக்கதா பிராமணீயம்- சோ
35. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
36. அன்பு ஒரு ஆன்மீக அனுபவம் - ஓஷோ
37. விகடன் பவளவிழா மலர்
38. The 100 Greatest Entertainers - 1950-2000 - From "entertainment weekly magazine "

"இத்தனையும் நீ படித்தாயா" என்று நீங்கள் கேட்டீர்களானால் என் பதில் ஹி..ஹி.

இத்தனையும் படித்து விட்டால் நான் ஏன் "இப்படி" எழுதுகிறேன்.

எப்போதாவது படித்துவிடலாம் என்பது ஒரு நம்பிக்கைதான்.

மூன்று வருடங்களுக்குப் பிறகு.......
===============================

மேனேஜனிடம் சொல்லிக் கொள்ளாமல், முன்னறிவிப்பு இல்லாமல், எந்த முகாந்திரமும் இல்லாமல் 4 மாதங்களுக்கு ஒரு முறை எனக்கு சட்ட விரோதமாக லீவ் எடுத்தே ஆக வேண்டும். இதை கடந்த 10 வருடங்களாக ஒரு தவம் மாதிரி செய்து கொண்டிருக்கிறேன்.

இன்று அம் மாதிரி இரு நாள்.

லேட்டாக எழுந்து கழிவறைக்குள் தினசரி பிரவத்துக்கு செல்லும் போது , அவசரமாக புத்தக அலமாரியை பீராய்ந்ததில், 'நிஜங்கள்' என்ற புத்தகம் கிடைத்தது. மூன்று வருடங்களுக்கும் முன் சென்னை மவுண்ட் ரோடு ஹிக்கின்பாதம்ஸில் , அலமாரி அலமாரியாக பொறுக்கிக் கொண்டிருந்தபோது வாங்கிய ஒரு ஒல்லி புத்தகம்.

ருத்ரனை நீங்கள் எல்லாம் காலை நேர ராஜ் டீவில் பார்த்திருக்கலாம். விளம்பர தாத்தாக்கள் போல நேர்த்தி தாடியாக இல்லாமல், ஏராளமாக நிஜ தாடி வைத்துக்கொண்டு, நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டு, தீட்சண்யமான கண்களோடு காலை நேரத்துக்கு சம்பந்தம் இல்லாமல் சீரியஸாக பேசிக் கொண்டிருப்பார். அவர் எவ்வளவு பெரிய ஆள் என்பது விகடன் நண்பர் ம.கா.சிவஞானம் மூலம் பிறகு தெரிந்தது.

இன்று அந்தப் புத்தகத்தை இன்னொருமுரை படித்தேன். மனோவியாதியை குழப்பாமல் விளக்கும் எளிய மொழியில் சொல்லப்பட்ட 12 கதைகள். ஒவ்வொரு கதையின் முடிவிலும் டாக்டர் ருத்ரனின் விளக்கங்கள். obsessive compulsive disorder, alchoholic anonymous, delusional disorder, personality disorder, depression, manic disorder, schizophrenia என்று வகைக்கு ஒன்றாக எடுத்துக் கொண்டு டாக்டர் வெளுத்துக்கட்டி இருக்கிறார். " This book is dedicated to vidya sagaran, vancheeswaran, ravindran, ravindramoorthy and srinivasan , for reasons known to us " என்று சொல்லும் முதல் பக்கத்தை படித்தவுடனே முதுகுத்தண்டில் 'சில்' லென்று இருந்தது .

எந்த முயற்சியும் இல்லாமல் இன்று 'சுகப்பிரசவம்'

இதை எழுதி முடித்து விட்டு முதல் வரியை மறுபடி படித்தவுடன் கொஞ்சம் பயமாகக் கூட இருக்கிறது

Wednesday, April 07, 2004

திசைகள் - ஏப்ரல்
============

திசைகள் இதழ் நல்ல கனமாக வ்ந்திருக்கிறது. சூடாகவும் இருக்கிறது.

சேவியர் கவிதை 'ஊர்ப்பேச்சை ' எள்ளல் செய்கிறது. நம்பியின் கவிதை இணையத்தமிழை வம்புக்கு இழுக்கிறது.இரண்டுமே வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் ரகம்.

எம்.கே.குமார் வலைப்பதிவிலும், மடற்குழுவிலும் இட்ட ஆட்டோகிராஃப் விமர்சனததை திசைகளிலும் மாலன் பதிப்பித்து இருக்கிறார். நம்பியின் கவிதையும் அவ்விதமே என்று கொசப்பேட்டை குப்ஸாமி சொல்கிறார். திசைகளுக்காகவே பிரத்தியேகமாக எழுதப்பட்ட படைப்புகளை பிரசுரிப்பது நலம்.

வாசகர் கடிதம் பகுதியில்தான் காரம் ஜாஸ்தி.

தன் படைப்புக்கு பின்னூட்டமாய் வந்த ஜீவமுரளியின் கடிதத்தை, சந்திரவதனா பிரசுரித்து, அதற்கு தன் பதிலையும் அளித்துள்ளார். அவருடைய கதையை நான் படிக்கவில்லை ஆயினும், அவர் கடித்திலிருந்து என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க் முடிகிறது. பொதுவாகவே அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை இந்தியர்கள் சற்று இளக்காரமாக்த்தான் பார்க்கிறார்கள் என்று நானும் கருதுகிறேன். வளர்ப்பு சார்ந்தும், படிப்பு சார்ந்தும்தான் குணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன என்று நாம் என்னதான் தத்துவம் பேசினாலும், ஒருவருடைய முகத்தையும், உடலமைப்பையும், நிறத்தையும், பார்த்துத்தான் பெரும்பாலானவர்கள் பற்றிய முடிவுக்கு வருகிறோம். 'மிஸ்ஸிஸிபி மசாலா ' என்ற படத்தில் உள்ள ஒரு இந்தியப் பெண் கதாபாத்திரத்தை பார்த்து டென்ஸல் வாஷிங்டன் ஒரு கேள்வியைக் கேட்பார். பளாரென்று அறையும் கேள்வி அது.

தமிழ்நாட்டில் கூட சாதி ரீதியான பாகுபாடுகள் பார்ப்பதாக, பிராமணர்களை சாடும் பெரும்பாலானோர் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக இழைக்கும் கொடுமைகளை வச்தியாக மறந்து விடுகின்றனர். தான் ஒரு தாழ்ததப்பட்ட சாதியை சேர்ந்தவரை எப்படி அணுகுகிறோமோ , அதைப் போலத்தான் பிராமணர்கள் தன்னை அணுகுவார்கள் ' என்று ஒரு பிள்ளைக்கோ, தேவருக்கோ, வன்னியருக்கோ, முதலியாருக்கோ தோன்ற வேண்டும். அது தோணாதவரை, குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்தவர்களை குறை சொல்லி பிரயோசனம் இல்லை. ஜாதி தரும் அந்தஸ்து தனக்கு, வேண்டுமென்றால் , அது எல்லாருக்கும் வேண்டும் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

ஜீவமுரளியின் கடிதத்தில் இருந்த 'யாழ்ப்பாண கிடுகுவேலி மனோபாவம்தான் கறுப்பர்களை வெறுக்கச்செய்கிறது ' என்ற வரிகள் யாழிலும் இத்தகைய தமிழ்நாட்டு மனோபாவம் நிரம்பிக் கிடப்பதை குறிப்பதாகக் காண்கிறேன். அந்த வரியின் முழு அர்த்தம் விளங்காவிடினும், ' யாழ்ப்பாணத் தமிழர் மலையக / கொழும்புத் தமிழர்களை சற்று இளக்காரமாகத்தான் நினைக்கிறார்கள் ' என்று நான் ஏற்கனவே கேள்விப்பட்ட விஷயத்தை ஊர்ஜிதப்படுத்தும் வகையில்தான் இருக்கிறது.

உன்னிப்பாகப் பார்த்தால் , உலகமெல்லாம் நீக்கமற இறைவன் நிறைந்திருக்கிறானோ இல்லையோ,
இம் மாதிரியான சாதி, இன, மத , நிற ரீதியான வேறுபாடுகள் நிறைந்து காணப்படுவது தெளிவாகத் தெரியும்.

இதன் தொடர்பில் நான் முன்பொருமுறை கிறுக்கியது இங்கே.....




Tuesday, April 06, 2004

துறை சார்ந்த பதிவுகள் - புரட்சி வெடிக்கிறது...???
======================================

எங்கே ஆரம்பித்தது என்று தெரியவில்லை. சுந்தரவடிவேல், வெங்கட், பிரகாஷ் என்று எல்லாரும் துறை சார்ந்த வலைப்பதிவுகளைக் கொண்டுவந்து, அந்தந்தத் துறை விற்பன்னர்களை தமிழிலேயே வெளுத்துக்கட்ட வைத்து விடுவது என்று இறங்கி இருக்கிறார்கள்.

என்னை Networking பற்றி தமிழில் எழுதச் சொன்னால், போங்கப்பா என்று சொல்லி விடுவேன்.

காலையிலிருந்து மாலைவரை அலுவலகத்தில் உட்கார்ந்து செய்யும் வேலையை பற்றி சாயந்திரமும் என்னால் வலைப்பதிவில் எழுத முடியாது. அது என் மேனேஜனுக்கு நான் ரிப்போர்ட் கொடுப்பது போல ஆகிவிடும். மேலும் என் திருப்திக்காக, நான் எழுதிப் பழகுவதற்காக, என் பணி தவிர்த்த ஜன்னல் வழியே நான் எட்டிப் பார்ப்பதற்காக வைத்திருக்கும் என் பதிவை , உலக நன்மைக்காக பயன்படுத்தும் சக்தி என் எழுத்துக்கு இப்போது இல்லை.அந்த உத்தேசமும் எனக்கு இல்லை.அதை எழுத்தில் ஏற்கனவே பல பரிட்சார்த்த முயற்சிகள் பண்ணி ஜெயித்தவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.

ரங்கோலி போடுபவர்கள் ரங்கோலி போடட்டும். கோலத்தில் திரிகோணமிதி சொல்லித் தர விரும்புபவர்கள் அதைப் பண்ணட்டும். வலது மூளையையும் இடது மூளையையும் ஒன்றாக்கி, குழப்பி, காற்று தேடி வெளியே ஓடி வரும் நான் களைப்படைய விரும்பவில்லை.

என் பதிவு சில்லுண்டி விஷயங்கள் பற்றியே இருக்கட்டும் .

நான் எதை விரும்புகிறேனோ, அதை செய்ய இங்காவது சுதந்திரம் இருக்கட்டும்.

'யாரும் உன்னை வற்புறுத்தவில்லை ' என்று நீங்கள் சொல்லலாம். ஆனாலும்
தமிழில், தமிழ்ப்பதிவுகளில் சில்லுண்டி விஷயங்களே எழுதப்படுகின்றன
என்று 'போகிற போக்கில்' பிரகாஷ் (?!! ) கமெண்ட் அடித்ததால் எழுதத் தோன்றிற்று.

Monday, April 05, 2004

இதற்குத்தானா ஆசைப்பட்டாய் சிவாஜிராவ் கெய்க்வாட்...?
=======================================

"அண்ணாமலை" யில் ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். தன்னுடைய நிலத்தை அடைய விரும்பும் லோக்கல் எம்.எல்.ஏ வின் வீட்டு ஹாலில் மாடுகளை கட்டி விட்டு, வியர்த்த முகத்தோடு ' நான் பாட்டுக்கு என் வழியில் போயிக்கிட்டு இருக்கேன். தேவையில்லாம என் வழியில வந்தீங்கன்னா, நான் சொன்னதையும் செய்வேன். சொல்லாததையும் செய்வேன் " என்று அவர் பேசப் பேச மாநில ஆட்சியின் மீது வெறுப்புற்றிருந்த மக்கள் தியேட்டரில் ஆவேசமாக விசிலடித்துக் கைதட்ட , படமும் ஓட்டமாக ஓடியது. அன்று ஆரம்பித்தது ரஜனியின் அரசியல் ஆசை....இல்லை..இல்லை..அரசியல் வசனங்கள்.

எதைக்கண்டாலும் பயந்து கொண்டு, ஏகப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, எதிரியை வேகமாக வளரவிடும் பலவீனம் நமது அரசியல்வாதிகளுக்கு "ரிக்ஷாக்காரன்' காலத்திலிருந்தே இருந்து வருகிறது.அப்போதைய முதல்வரும் விதி விலக்கா என்ன..?? சும்மா இருந்த சங்கை,அவரும் ஊதிக்கெடுத்தார் தன் பேச்சினால்...!. எம்.ஜி.ஆருக்கு அரசியல் ஆசை இருந்ததை தனது பத்திரிக்கையில் எழுதி, அவருடைய ஆரம்பகால நம்பிக்கைகளுக்கு ஒரு வித உந்து சக்தியாக இருந்த தமிழ்நாட்டின் "க்ளெவர் ராஸ்கல்" இங்கும் தன்னுடைய வேலையை ஆரம்பித்தார். ஜெ வின் தலைமையினால் ஒதுக்கப்பட்டு வாழ்விழந்து கிடந்த சத்யா மூவிஸ் கணக்கப் பிள்ளை, 'காலத்தின் தூதுவனாக நீ வந்திருக்கிறாய்' என்று கூர் தீட்ட ஆரம்பித்தார். முத்துவேலர் மகனோ, சினிமா கவர்ச்சியை தான் எதிர்த்து வாழ்வின் பாதி நாள் அடிபட்டதை நினைவில் கொண்டு, 'இம் முறையாவது' இந்தக் கவர்ச்சியை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தூது விட்டார். 'ஜெய் ஹிந்த்' என்று இவர் சொல்வதால் , தேசியக் கட்சியில் அமுக்கிவிடலாம் என்று நம்ம கபிஸ்தலம் மிராசு, வாசனைப் பாக்குடன் யோசித்து யோசித்து, கடைசியில் ஸ்தாபன கட்சி ஆரம்பிக்கும் ஸ்டைலில் ஆவது காமராஜர் போல இருப்போம் என்று ரஜினையை நம்பியே சைக்கிள் கட்சி ஆரம்பித்தார். அரசியல் ஆசையுடனும், சொந்த அபிலாஷைகளுடனும் ஆளாளுக்கு சூப்பரை மொய்க்க, சூப்பர் தன் வசனகர்த்தாக்களுக்கு இங்க் பாட்டிலும் , பேனாக்களும் வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருந்தார் - படங்களை ஓட வைக்க.

பொது ஜன அதிருப்தி அலையும் , வலுவான கூட்டணியும் சாதகமாக இருக்க, அதுவே ஜெ. வீழ்ச்சிக்கு அப்போது காரணமாக, ' வாய்ஸ்' புகழ்பெற்றது. வேறு சில படங்களும் ஓடியது.நடுவில் வாய்ஸ் தடுமாறியது. பிறகு சாப்பிடுவதற்கு மட்டுமே வாய்(ஸ்) திறந்தது

baba_announce


இப்போது ரஜினிக்கு வந்திருப்பது உண்மையான அரசியல் சோதனை. வெறுமனே ஒதுங்கி இருந்து, வசனம் பேசி, அரசியலின் லாபத்தை மட்டுமே அறுவடை செய்து என்ஜாய் செய்து கொண்டிருந்தவர், ராமதாஸ் கட்சியனரால் தாக்கப்பட்டிருக்கிறார். அரசியல் என்றால் ரத்தம் என்பதும், அரசியல் என்றால் கலாட்டா என்பதும், கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தால் கூட எதிராளியினர் ரத்தக்களறி ஆக்குவார்கள் என்பதும் முதன் முறை அவரால் எதிர்கொள்ளப்படும் கசப்பான நிஜங்கள்.

இதனை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதும், இதற்காகவாவது அவர் வெளியே வந்து தன் ரசிகர்களுக்கு வழியும், ஆறுதலும் காண்பிக்கிறாரா என்பதை வைத்துத்தான் ரஜினியின் எதிர்காலம் தமிழ்நாட்டில் நிச்சயிக்கப்படப் போகிறது. அப்படி இல்லாது இம்முறையும் வெண்டைக்காயில் விளக்கெண்ணை ஊற்றியது போல அவர் பேசிக் கொண்டிருந்தால், இனி அவர் என்ன பேசினாலும், எங்கே பேசினாலும் எடுபடாது - சினிமா, அரசியல், ஆன்மீகம்,ரத்ததானம் உள்பட

Friday, April 02, 2004

வழியனுப்பல்

=============

வாடிக் கிடக்கிறது முகம்
கவளம் கவளமாய் விழுங்கிய நீ
ஸ்பூன் ஸ்பூனாக கஞ்சி
குடிக்கிறாய்
உரத்து பேசி ஊர்மடக்கியவன்
மூச்சு விடவே திணறுகிறாய்
மலமும் நீரும் பிரிவது
உனக்குத் தெரிகிறரதோ இல்லையோ
எனக்குத் தெரிகிறது
அதையெல்லாம்
நான் துடைப்பது மட்டும்
உன் விசும்பலில்
எனக்குத் தெரிகிறது
வெடித்து அழாமல்
இன்னமும்
அழுத்தி வைத்துத்தான்
உள்ளுக்குள் கலைந்து போகிறாய்
ஊர் ஊராய் சுற்றியாகி விட்டது.
வைத்தியம் எல்லாம்
பார்த்தாகி விட்டது
குலதெய்வ பூஜையும்
சாமியார் விபூதியும்
வீடு கொள்ளா
மூணு பந்தி சனமும்
நீ பிழைக்க வேண்டி
இல்லை
என்பது தெரியுமா
உனக்கு..?

நாலு வால்வும் வலது
சிறுநீரகமும்
உதவாது போயிற்றாம்.

சிரமப்படாமல்
கம்பீரமாய் செத்துப் போ
என் பிரிய அப்பாவே..

உன் சாயலில்
உன்னிடம்
நான்
கேட்ட என் அவனை
நானே தேடுவேன் இனி
இரா.முருகன் அவர்களுக்கு ஒரு பாமரனின் பகிரங்கக் கடிதம்
===============================================


" ஞானபீட விருது பெற்ற பிரபல கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பதாகப் படித்தேன்.

அனந்தமூர்த்திக்கு முன்னால் இந்த மாதிரித் தப்புத் தப்பாக சிந்தித்து அரசியல் அரங்கில் நுழைந்ததுமே க்ளீன் போல்ட் ஆன கன்னட எழுத்தாளர்கள் உண்டு. எண்பதுகளில், அனந்தமூர்த்தி போலவே ஞானபீட விருது பெற்ற இன்னொரு பிரசித்தமான கன்னட எழுத்தாளர் சிவராம கராந்த் உத்தர கன்னடத் தொகுதி ஒன்றில் சுயேச்சையாகப் போட்டியிட்டு மண்ணைக் கவ்வினார். கய்கா அணுமின்நிலையத்தை எதிர்த்து இவர் ஆவேசத்தோடு பேசிப் பிரசாரம் செய்ததைக் கேட்க மேடையிலேயே ஆட்கள் இல்லை. இன்னொரு பிரசித்தமான கன்னடக் கவிஞரான பேராசிரியர் கோபாலகிருஷ்ண அடிகாவும் மாநிலச் சட்டசபைக்குச் சுயேச்சையாகப் போட்டியிட்டு ஜாமீன் இழந்தார்.

துரதிருஷ்ட வசமாக, அனந்தமூர்த்திக்கு அறிவுரை சொல்லித் தடுத்தாட்கொள்ள இந்த இருவரும் இப்போது உயிரோடு இல்லை. ஆனாலும் என்ன? இவர்கள் சார்பில் மத்தளராயன் தரும் ஆலோசனை இதோ -

அனந்தமூர்த்தி சார், எழுத்தாளன் எழுதறதோடு நிறுத்திக்கறதே நல்லது. மிஞ்சிப் போனா, வருடம் ரெண்டு இலக்கிய விழாவுலே மைக்கைப் பிடிச்சு சோடா குடிச்சு ஏப்பம் விட்டு நாலு வார்த்தை பேசலாம். மத்தப்படி அரசியல், கலையிலக்கியப் பிரக்ஞையைக் காத்திரமாக்குவது, சகலரோடும் தோளோடு தோள் சேர்ந்து நின்று இலக்கிய ஊடாட்டம் வெண்டைக்காய் வெங்காயம் ஒரு எழவும் வேணாம். "


எழுத்தாளர் இரா.முருகனின் திண்ணைக் கட்டுரையின் கடைசி பகுதிதான் நீங்கள் மேலே படித்தது. சமீபத்தில் நடந்த சம்பவங்களால் மிகவும் பாதிக்கப்பட்ட தொனி இதில் தெரிகிறது. சேட்டனுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றுதான்.

இத்தனை விஷயம் தெரிந்தவர், இத்த்னை விருதுகள் வாங்கியவர், இத்த்னை வயசு காலம் அலுவலக்த்திலும், தனி வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தவர், நடந்ததை எல்லாம் மறந்து விட்டு மறுபடியும் மடற்குழுக்களில் தொடர்ந்து எழுத வேண்டும். அவர் அங்கே எழுதாமற்போனாலும் அவரால் பட்டை தீட்டப்பட்ட எழுத்தாளர்கள் ரா.கா.கி யை தொடர்ந்து நடத்துவார்கள் என்று தெரியும். ஆனால் ஆறு லடசம் பேர் கூடி இழுக்கும் தேரில் உற்சவர் இல்லாதது போலத் தான் அது இருக்கும்.



இளைஞர்களை , இலக்கியம் ஆர்வம் மிக்க சிறுசுகளை , தடால் தடாலென்று காயப்படுத்தாமல், எல்லாரையும் ஊக்குவித்து, அவருக்கு இருக்கும் அதே கோபமும், வேகமும் , உணர்ச்சி வயப்பட்ட தன்மையும் அவரைவிட வயதில் குறைந்தவர்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கும் என்பதையும் உணர்ந்து , மறுபடியும் மடற்குழுக்களில் எழுத ஆரம்பிக்க வேண்டும்.

இது முருகனால் பொருட்படுத்தப்படக்கூடிய "பெரிய" ஆட்களிடம் இருந்து வரவில்லை எனினும், ஒரு முதல்வரிசை விசிலடிச்சான் குஞ்சுவிடம் இருந்து வந்ததாய் அவர் பரிசீலிக்க வேணும்

சேட்டனுக்கு இதை தனி மடலில் எழுதி இருக்கலாம். ஆனாலும் பதில் தரும்போது போதுவில் தானே போடப் போகிறார் என்று நானே பகிரங்கமாக எழுதுகிறேன்.

என்றென்றும் அன்புடன்

சுந்தர்ராஜன்





Thursday, April 01, 2004

ஜூனியர் விகடன் நினைவுகள்
======================

சமீபத்தில் அமீரக ஷேக் ஆசிஃப் மீரான் எழுதிய ஒரு மடலில் , தான் ரமேஷ்பிரபாவை, விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்ட கூட்டத்தில் எடக்கு மடக்காக மடக்கியதை எழுதி இருந்தார். அட , இவரும் முன்னாள் ஜூ.வி நிருபர்தானா என்று சந்தோஷப்பட்டேன்.

மடற்குழுவிலும், பத்திரிக்கைத் துறையிலும், சினிமா டைட்டில்களிலும், விகடன் ஆசிரியர் குழு பட்டியலிலும்
மாணவப்பத்திரிக்கையாளர்களாக இருந்து , எழுத்துத் துறையிலேயே தொடர்கிறவர்களின் பெயர்களைப் பார்த்தால் ஒரு பக்கம் சந்தோஷமாக இருக்கும் - பிழைத்துக்கொண்டார்களே என்று. இன்னொரு பக்கம் வருத்தமாக இருக்கும் - நாம் விட்டுவிட்டோமே என்று.

மற்ற கல்லூரிகளில் எப்படியோ, எங்கள் கல்லூரியில் ஜூ.வி பத்திரிக்கையாளர் என்பது ஒரு கவுரவம். நான் படித்த காரைக்குடி அழகப்பச்செட்டியார் கல்லூரி பசும்பொன் மாவட்டத்தில் உள்ளது என்பதால், அந்த மாவட்டத்தை ரெப்ரசண்ட் செய்ய விகடனால எடுக்கப்படும் மாணவர் அதே மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளில் இருந்து விண்ணப்பம் செய்திருக்கும் மாணவர்களை முதல்கட்ட எழுத்துத்தேர்வுகளில் வெற்றி கொண்ட பிற்கே இறுதிச்சுற்றுக்கு செல்ல வேண்டி இருக்கும். எனக்கு முன்னே மூன்று ஆண்டுகள் எங்கள்
கல்லூரியிலிருந்தே மாணவ நிருபர்கள் தெரிந்தெடுக்கப் பட்டிருந்தார்கள். அது வேறு எனக்கு ஒரு கூடுதல் திக் திக் .

வி.பி.சிங் ஆட்சி பிழைக்குமா என்பதுதான் முதல்கட்ட எழுத்துதேர்வுக்கு தரப்பட்ட தலைப்பு. அதில் தேர்வாகி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அடுத்த கட்ட தேர்வு. அதில் ஒரு ரயில் விபத்தை கவர் செயவது மாதிரி எழுத்ச்சொல்லி இருந்தார்கள். அடுத்த்கட்டம் சென்னையில் நேர்முகத்தேர்வு. காலையில் விகடன் அலுவலகத்தை விட்டுக் கிளம்பி, மாலை நாலு மணிக்குள் திரும்பி , பார்த்த ஏதாவது ஒரு செய்தியை எழுதி தரவேண்டும். முடித்த்பின் ஆசிரியர் பாலனுடனும், இணையாசிரியர் மதனுடனும் கூட்டுச் சந்திப்பு.

இதெல்லாம் முடிந்து நான் தேர்வான செய்தி, போட்டோவோடு விகடனில் வந்ததும் தரையிலேயே கால்கள் பாவவில்லை. பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டவகள் அனைவருக்கும் சென்னை தி.நகரில் மூன்றுநாள் பயிற்சிக்கூட்டம். பெரிய பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள், விகடன் குழும சீனியர்கள் கலந்து கொள்ளும் அந்தக்கூட்ட முடிவில் பத்திரிக்கையாளர் அடையாள அட்டை, இன்னபிற அயிட்டங்களோடு நெஞ்சு நிறைய பெருமிதமும் , நம்பிக்கையுமாய் வழியனுப்பும் விகடன். எழுதும் கட்டுரைக்கான சன்மானத்தோடு, செய்யும் செலவுகளுக்கான பணவிடைத்தாள்களுமாய், வாராவாரம் விகடன் குழுமப் பத்திரிக்கைகளை இலவசமாக அனுப்பி வைத்து, கல்லூரிக்குள் நிறைய காசும் கொஞ்சம் கர்வமுமாய், வலம் வரச்செய்த விகடனை இப்போது நன்றியோடு நினைவுகூரத் தோன்றுகிறது

எனக்குத் தெரிந்த வட்டங்களில் மாணவப்பத்திரிக்கையாளர்கள் :

ஆசிஃப் மீரான், விகடன் சீனியர் எடிட்டர் ரா.கண்ணன்/ம.கா.சிவஞானம், ஜி.கெளதம், ஆனந்தராகவின் ஹாங்காங் நண்பர் மாயவரம் ஜி.ரமேஷ்குமார் , (ஷங்கர் அசிஸ்டெண்ட்) அ.ஜெரால்டு , எஸ்.பி.ஹோசிமின், சிஃபிராயர் வெங்கடேஷோடு பணிபுரியும் எம்.பி.உதயசூரியன், காலமாகிப் போன திருப்பதிசாமி, காலமாகிப்போன தமிழன் எக்ஸ்பிரஸ் நிருபர் வி.வேல்பாண்டியன், ஜூவி எடிட்டோரியல் விகேஷ் என்கிற வெங்கடேஷ் , பார்த்திபன கனவு டைரக்டர் கரு.பழனியப்பன், விரும்புகிறேன் டைரக்டர் கணேசன், மற்றும் எனக்குத் நெருக்கமாகத் தெரியாத எண்ணிலடங்காத விகடன் குழும நிருபர்கள் என்று, அது ஒரு பெரிய லிஸ்ட்.

அவர்கள் அனைவரின் சார்பாகவும் , விகடன் தாத்தாவுக்கு ஒரு 'ஓ' ..............


தேர்தல் ஜூரம்
===========

தமிழ்நாட்டில் தேர்தல் ஜூரம் அடிப்பது போல் வலைப்பூக்களிலும் அங்கங்கே அடித்துக் கொண்டிருக்கிறது. கருத்துக்கணிப்பு எடுக்கிறார்கள். தொகுதியிலுள்ள வேட்பாளர்களின் தராதரத்தைப் பற்றி அலசுகிறார்கள். ரஜினியின் வாய்ஸ் எடுபடுமா என்று பேசுகிறார்கள்.

எல்லாம் சரிதான்...

ஆனால், தமிழ்நாட்டில் மாநில ஆட்சி மீது நிலவும் அதிருப்தி தேர்தலில் எதிரொலிக்கக்கூடாது என்கிறார்கள்.யாருக்கு ஓட்டு போடப் போகிறீர்கள் என்று கேள்வி கேட்டு மக்கள் கருணாநிதி என்று சொன்னால் ' ந்மக்கு குறுகிய மனப்பான்மை வந்துவிட்டது. ' என்று வெங்கடேஷ் எழுதி இருக்கிறார். பின்னூட்டம் அளித்திருக்கும் 'படித்த' பெரும்புள்ளிகளும் நம் முட்டாள்தனத்தை நொந்து கொண்டு விசனப்பட்டிருக்கிறார்கள்

'சோனியா வேண்டுமா..வாஜ்பாய் வேண்டுமா' என்பதுதான் கேள்வியாய் இருந்திருக்க வேண்டும் என்றால், அந்தக் கேள்வி கேட்க காங்கிரஸூம், பா.ஜ.க வும் இந்தியாவெங்கும் எந்தக் கூட்டணியும் இல்லாமல் தனித் தனியாக நின்று தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். எப்போது அது நடக்கவில்லையோ, எப்போது அவர்கள் மாநிலக்கட்சிகளின் கூட்டணியை நாடினார்களோ, அப்போது மாநில ரீதியான எண்ணங்கள் உள்ளே வரத்தான் செய்யும். அப்போதுதான் ந்ம்மைப் போல பெடெரல் அபைப்பில் இருக்கும் நாட்டின் பிராந்திய ரீதியான எண்ணங்கள் மத்திய அரசை எட்டும். அது நடக்காமல், வாஜ்பாய்க்காக ஒட்டுப் போட்டு பாஜக- கூட்டணியை ஜெயிக்க விட்டால் தமிழ்நாட்டில் நல்லாட்சி நடந்து, மக்கள் சந்தோஷத்தில் பூத்து குலுங்குகிறார்கள் என்ற மாயை ஏற்பட்டு விடும். பிற்கு அம்மா வைத்ததுதான் சட்டம். தனக்கு எதிராக யார் வாயை திறந்தாலும் 'ஆப்பு'
என்று ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் கந்தரகோலம் இன்னமும் முழு வேகத்தில் தொடரும்.

அப்படி இல்லாமல், தமிழ்நாட்டில் இந்தக் கூட்டணி தோற்று , மக்களின் எதிர்ப்பு பலமாக பதிவு செய்யப்பட்டால் ஆளும்கட்சிக்கு தற்காலிகமாவேனும் ஒரு மூக்கணாங்கயிறு போட்ட திருப்தியில் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம்.

பிறகு வாஜ்பாயை பேருக்கு பிரதமராக்கி, அத்வானி கோஷ்டிகளும், சங் பரிவார் அமைப்புகளும் இன்னமும் எங்கேயாவது ரதயாத்திரை நடத்தும். எங்காவது சர்ச் இடிபடும். மசூதி தீக்கிரையாகும். குஜாரத் போல
பயங்கரங்கள் இன்னமும் தொடரும். அந்த அலையில் தேர்தல் நடந்து, தீப்பந்தம் கொளுத்திக் கொடுத்த்வர்க்கு
மறுபடியும் அதிகாரம் கிடைக்கும்.

மக்கள் வெகுசுபிட்சமாக வாழ்வார்கள் அந்த ராம ராஜ்ஜியத்தில்.........
த பார்ரா....ஜப்பான் கம்ப்யூட்டர்
==============================

In Japan, they have replaced the impersonal and unhelpful Microsoft error messages with Haiku poetry messages. Haiku poetry has strict construction rules - each poem has only 17 syllables; 5 syllables in the first line, 7 in the second and 5 in the third. They are used to communicate a timeless message, often achieving a wistful, yearning and powerful insight through extreme brevity.



Here are 15 actual error messages from Japan that are the essence of
Zen:

-------------------------------------------

Your file was so big.

It might be very useful.

But now it is gone.

---------------------------------

Cannot be located, ----------

The Web site you seek but

Countless more exist.

--------------------------------------------

Chaos reigns within.

Reflect, repent, and reboot.

Order shall return.

--------------------------------------------

Program aborting:

Close all that you have worked on.

You ask far too much.

--------------------------------------------

Your Windows has crashed.

I am the Blue Screen of Death.

No one hears your screams.

--------------------------------------------

Yesterday it worked.

Today it is not working.

Windows is like that.

---------------------------------------------

First snow, then silence.

This thousand-dollar screen dies

So beautifully.

----------------------------------------------

With searching comes loss

And the presence of absence:

"My Novel" not found.

----------------------------------------------

The Tao that is seen

Is not the true Tao - until

You bring fresh toner.


----------------------------------------------

Stay the patient course.

Of little worth is your ire.

The network is down.

----------------------------------------------

A crash reduces

Your expensive computer

To a simple stone.

----------------------------------------------

Three things are certain:

Death, taxes and lost data.

Guess which has occurred.

----------------------------------------------

You step in the stream,

But the water has moved on.

This page is not here.

----------------------------------------------

Having been erased,

The document you're seeking

Must now be retyped.

----------------------------------------------

Serious error.

All shortcuts have disappeared.

Screen. Mind. Both are blank.

-----------------------------------------------



Aren't these better than "your computer has performed an illegal operation"?

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...