நேற்று இரவு சி.என்.என் டீவியில் அமெரிக்க டெமாக்ரட்டிக் கட்சியின் வேட்பாளர்களுக்கிடையே லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த விவாதத்தை ஒலி பரப்பினார்கள். வேட்பாளர்கள் நால்வரும் மிக நாகரீகமாக வாதம் செய்ததைப் பார்க்க காணக் கண் கோடி வேண்டும். பொருளாதாரம், மருத்துவ வசதி, சர்வதேச தீவிரவாதம், ஒருபால் திருமணங்கள் என்று விவாதத்தின் தலைப்புகள் பொதுத்தன்மை உடையனவையாக இருந்தன. டெமாக்ரடிக் நாமிநேஷனுக்கான விவாதகளமாக இருந்தாலும், புஷ்ஷை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணமே எல்லோர் பேச்சிலும் தொனித்ததால் பேச்சில் சூடு இருந்ததே தவிர ஒருவரை ஒருவர் கால் வாரிக் கொள்ளும் தொனி தெரியவில்லை.
அதிக இடங்களில் வென்று முதலிடத்தில் இருக்கும் ஜான் கெர்ரி, ஜான் எட்வர்ட்ஸ் ஆகிய இருவரும் பரஸ்பரம் புகழ்ந்து கொண்டார்கள். ஆனால் அவர்கள் இருவருக்கும்தான் பேச அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டார்போல ஒரு பிரமை. டென்னிஸ் குசினிச் என்ற வேட்பாளர் தன் பக்கம் கவனத்தை ஈர்க்க அதிக பிரயத்தனம் செய்தாலும், அது வேலைக்கு ஆகவில்லை.
எது எப்படியோ, ஜெயிக்கப்போவது ஏதோ ஒரு ஜான்....
தமிழ்நாட்டில் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஜெ வையும், கலைஞரையும் ஒரே மேடையில் உட்கார வைத்து விவாதம் செய்ய விட்டால் எப்படி இருக்கும் என்று சற்றே கண்ணை மூடி யோசித்துப் பார்த்தேன்.
மத்தியானம் சாப்பிட்ட லஞ்ச் உடனே செரித்து விட்டது.
No comments:
Post a Comment