நேற்றான நீ
============
கடிதங்களை பிரித்து
நாளாயிற்று
நிழற்படத்தை வருடி வருடி
நிஜம் மறக்க நேரமில்லை
இப்போதெல்லாம்
தினவாழ்வு அவசரத்தில்
எதிர்ப்படும்
சிறுசிறு நினைவுக்குமிழ்
வெளிச்சமெலாம்
வைரமென்று நெக்குருகி
நெகிழ்வதில்லை
நான் கூட
கண்முன் வாழ்வும்
அது தரும் சவாலும்
அடி வயிறு வரை தித்திக்கும்
உணர்வுக்கு உந்துதலாய்
ஜனித்த விதை வளர்வதையும்
அதை பாலூற்றி நீரூற்றி
என்னில் படர்ந்த கொடி
சீராட்டுவதையும் கண்டதில்
பொருக்குத் தட்டிய
வெளித்தோலுக்குள்
ரணம் மூடி வளர்ந்த
உள்தோலினுள் கிளரும்
நமைச்சலை மீறிய
சந்தோஷம்
நிஜம்....
திணிக்கப்பட்டதே
இத்தனை இதம் தந்தால்
நழுவிய கனவு
நனவாயின் எத்தனை
சுகித்திருக்கும்...??
வாழ்வு.....
இன்பக்கேணிதான்
முகரத்தான் மனக்குவளை
மலர வேண்டும்
பி.கு:
திண்னையில் வெளியாகியது. மறுபடியும் "அவள்" தான்..
No comments:
Post a Comment