பள்ளி நாட்களில் மேடையில் பேசிக்கொண்டிருந்த நான், படித்த தமிழ் புத்தகங்கள் விசேஷமாக சொல்லிக் கொள்ளும்படி ஏதும் இல்லை. எனினும் இன்னது என்றில்லாமல் , எது கிடைத்தாலும் படிக்கும் வழக்கம் என் வீடு எனக்களித்து இருந்த சுதந்திரம்.
எல்லோரையும் போலவே அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்ரா , முத்து காமிக்ஸ் என்று படிக்க ஆரம்பித்தவன், சீக்கிரத்திலேயே குமுதம் , விகடன் என்று ப்ரமோஷன் ஆகி விட்டேன். தாத்தா விட்டு பழம் புத்தகங்களில் இருந்து
ஏடு ஏடாய்ப் போன ' பொன்னியின் செல்வன்' தான் குறிப்பிடத்தகுந்த முதல் நாவல். தஞ்சை மாவட்டத்துக்காரர்களுக்கே பெருமை சேர்க்கிற, இறும்பூது எய்தச் செய்கிற மகத்தான நாவல் அது. அதற்குப் பிறகு அதைப் பலமுறை படித்தேன். வாழ்வின் எந்தக் காலகட்டத்தில் படித்தாலும் வெவ்வேறு விதங்களில் கவரக்கூடிய நாவல் அது.
அதற்குப் பிறகு க்ரைம் நாவல்கள் வாசித்ததும், அரசியல் பத்திரிக்கைகள் படிக்கத் துவங்கியதும், ஜூனியர் விகடன் மாணவப் பத்திரிக்கையாளராக பயிற்சி பெற்றதும் இங்கே வெறும் கொசுறுத் தகவல்கள்தான்.
சிங்கப்பூரில் இருந்தபோது நண்பர் அரவிந்த் ஹரிஹரன் மூலமாக 'தினம் ஒரு கவிதை' இணையக்குழு அறிமுகமாகியது. அங்கு கவிதைகள் படிக்கத் துவங்கி,பிறகு எழுதத் துவங்கி, அக்குழுவின் மட்டுறுத்துநர் நண்பர் சொக்கன் மூலமாக ராயர் காப்பி கிளப் வந்து சேர்ந்தேன். பெரிய எழுத்தாளர்கள் எழுதும் அந்தக் குழுதான் என் படிக்கும் பழக்கத்தை மறுபடியும் உயிர்ப்பித்தது. அங்கு கிடைத்த பல நல்ல அனுபவங்கள் என் தமிழார்வத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது.
இப்போது இந்த வலைப்பூ...
என்னுடைய பழைய , ஏற்கனவே பிரசுரமான கவிதைகளை அங்கங்கே தெளித்தும், ராயர் காப்பி கிளப்பில் எழுதிக் கொண்டு இருந்த காலத்தில் தனியே சேமித்து வைத்திருந்ததை எடுத்தும் இங்கே முதலில் இட உத்தேசம்.
No comments:
Post a Comment