இனிய முருகன்,
நிச்சயமாய் அவருடைய அந்தரங்கத்தைப் பற்றி பேசவில்லை...
நான் ஜே.கே வை ஒரு காட்டாறு போல கற்பனை செய்து வைத்திருந்தேன். தனக்கு சரி என்று படுகிற விஷயங்களை தெளிவாக சொல்லும் ஆளாய், தனக்கு உடன்பாடில்லாத விஷயங்களை ஏற்றுக்கொள்ளாத பிடிவாதக்காரராய், ஒரு சிங்கம் போலத் தான் உருவகப்படுத்தி வைத்திருந்தேன்.
2000 ல் சிங்கப்பூரில் ஒரு நேரடி கலந்துரையாடலுக்கு வந்திருந்தார். மலேசிய எழுத்தாளர் திரு.பீர்முகம்மது கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். தமிழ்நாட்டில் அப்போது மிக மோசமான அரசியல் சூழ்நிலை நிலவி வந்தது. இந்தியாவெங்கும் மத ரீதியாக கலவரங்கள். சண்டைகள். சச்சரவுகள்...!! "இம் மாதிரியான சூழ்நிலையில், ஏற்கனவே அரசியல் தொடர்புகள் கொண்ட, உங்களைப் போல தெளிந்த சிந்தனையாளர்கள், அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கலாமா..?? உங்கள் பங்களிப்பு இந்தக் காலகட்டத்தில் தேவை..தயக்கம் ஏன் ? என்று வினா எழுப்பினேன். கூட்ட அமைப்பாளர், "அரசியல் கேள்விகள் கூடாது. அமருங்கள் " என்று கட்டளையிட்டார். இதை திரு ஜே.கே மெளனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்,
எனக்கு ஆச்சரியமாய் இருந்தது, கேள்வி மிக பொதுவானது. கட்சி சார்ந்ததல்ல.ஆயினும் அது ஒருங்கிணைப்பாளரால் தடை செய்யப்பட்டது. ஜே.கே யாவது அதை தாண்டி "இல்லை...இது சர்ச்சைக்குரிய கேள்வி இல்லை" என்று பதில் சொல்லியிருக்கலாம். அவர் ஏதும் சொல்லவில்லை. ஒருவேளை தன்னை அழைத்து அயல்நாட்டில் கூட்டம் போடுகிறவர்களுக்கு , சங்கடத்தை உண்டாக்க வேண்டாம் என்று நினைத்தாரோ..?? நானறியேன்...என்வரையில் விளைவுகளை பற்றி கவலைப்படாது, தனக்குத் தோன்றியதை எழுதும் ஜே.கே யின் உருவம் கலங்கிப்போனது உண்மை.
கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற பெரியவர்கள் , கூட்டம் முடிந்த பின்பு என்னிடம் பேசினார்கள். "உங்கள் கேள்வி சரிதான்..ஆனால் இங்கே அவர் ஏன் தயங்கினார் என்று தெரியவில்லை. நாளை நாங்கள் அவருடன் ஒரு மதிய உணவுக்கூட்டதிற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். நீங்கள் கலந்து கொண்டால் அவருடன் ரிலாக்ஸ்டாக பேசலாம். " என்று அழைப்பு விடுத்தனர். கலந்துகொண்டு இதே கேள்வியைக் கேட்டேன். " கட்சி அரசியல் செய்தால்தான் என் அரசியல் கடமையை செய்வதாக நான் இப்போதெல்லாம் கருதுவதில்லை...அரசியலுக்கு வெளியிலிருந்தும் செய்யலாம்" என்றார். எனக்கு அது வெறும் சமாதானமாகவே பட்டது. மேலும், இந்த பதிலை பொதுக்கூட்டத்தில் சொல்ல தயங்கியது எனக்கு வியப்புத்தான்.
அடுத்த உரையாடல், தமிழ்நாட்டு சாட்டிலைட் டீ.வி பற்றியது.
தமிழ்நாட்டில் எந்த சானலை திறந்தாலும் ஒரே சினிமா மயம்தான். எல்லா நடிகர்களும் தமிழை கொலை செய்கிறார்கள். எனவே தமிழ்நாட்டில் தமிழை கொலை செய்கிறார்கள். புலம் பெயர்ந்தோர் / அயலகத்தமிழோர் தான் தமிழை வாழ வைக்கிறார்கள்..தமிழ்நாட்டு எழுத்தாளர் என்ற முறையில் இதையெல்லாம் கண்டிக்கலாகாதா? என்ற ரீ¢தியில் ஒருவர் பேசிக் கொண்டே போனார். இதற்கு சரியான முறையில் பதில் கூறி விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்த்தேன். இதற்கும் ஏமாற்றந்தான்.
"நீங்கள் பார்ப்பதெல்லாம் சினிமா நிகழ்ச்சிகள்...தமிழ்நாட்டில் எந்த நடிகர்/நடிகை தமிழகத்தை சேர்ந்தவர்களாயிருக்கிறார்கள். கேரளமும், கரநாடகமும், மஹாராஷ்டிரமும் , வங்காளமும் தன் நாடாக கொண்டவர்க்கு தமிழ் சரியாக வரும் என்று எப்படி நினைக்கலாம். நீங்கள் சொல்லும் அதே சேனலில்தான் "தினம் ஒரு குறள்" வருகிறது. சுகி.சிவம் பேசுகிறார். நல்ல தமிழ் நிகழ்ச்சிகள் வருகிறது. ரிமோட்டை உங்கள் கையில் வைத்துக் கொண்டு, நீங்கள் எதை பார்ப்பது என்பதை முடிவு செய்கிற அதிகாரம் உங்களிடம் இருக்கிற நிலை இருந்தும். நீங்கள் வெறும் சினிமா நிகழ்ச்சியைப்பார்த்து விட்டு " தமிநாட்டில் தமிழ் சாகிறது" என்று சொல்வது அபத்தம் என்று சொன்னேன். ஆயினும் அந்தக் கேள்வுக்கு ஜே.கே பதில் சொல்லியிருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும்.
இன்னமும் பல கேள்விகள். அவ்வள்வு திருப்தியில்லத பதில்கள். போதுவாகவே அவரிடம் ஒரு நொய்மை தெரிந்தது. சரிதான் சிங்கத்துக்கு வயதாகி விட்டது என்று நினைத்துக்கொண்டேன்.
சுந்தர்ராஜன்
( ஜெயகாந்தன் உடனான என் சிங்கப்பூர் சந்திப்பு - ரா. கா.கி மடல்)
No comments:
Post a Comment