வெடி
=====
அப்போதெல்லாம் தீபாவளி வருவதற்கு இரண்டு மாதம் முன்னரே ஒரே பரபரப்பாயிருக்கும்.விநாயகர் சதுர்த்தி வரும்போதே அதன் சாயல் தெரிந்துவிடும். முதல் அடையாளம் சின்னக்கடைத்தெருவில் வரும் பட்டாசுக் கடைகள் தான். மற்ற நேரத்தில் சோனியான பையன் காத்தடிக்க பஞ்சர் பார்க்கும் கனகு, தீபாவளியானால் பட்டாசுக்க் கடை வைத்து விடுவார். போன வருசத்து சரக்குகளையெல்லாம் எடுத்து தூசி தட்டி, வெயிலில் காய வைத்து, முதலில் விற்றுத் தீ¢ர்ப்பார். பிறகே வரும் துப்பாக்கிகள். அலுமினியப் பளபளப்பில், கருப்பு மினுக்கலில், இரட்டைக் குழலோடு சரம் சரமாக சணலில் கட்டித் தொங்கும். ஸ்கூல் போகும் போதும் வரும்போதும் ஆசை ஆசையாய் எட்டிப்பார்த்து , எச்சில் விழுங்கி, வீட்டில் கோரிக்கை வைத்து கடைசியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு , கிடைக்கும். பின் கேப்புகள். வாங்கி சுருள் சுருளாய் கோர்த்து, வெடிக்கும்போது ...அப்... ப்....பா ஜென்ம சாபல்யம் தான். +1 படிக்கும்போது கூட காலாண்டு தேர்வு ஹாலில் சுருள் கேப்பு வெடித்தது ஞாபகம் இருக்கிறது.
60 நாளைக்கு முன்பிருந்தே வெடி வாங்க லிஸ்ட் தயாராகும். குருவி வெடி, யானை வெடி, லக்ஷ்மி வெடி, டபுள் ஷாட் என்று எழுதி வைத்து, எங்கு வாங்கலாம். சிவகாசியில் நேரே வாங்கினால் விலை குறைவாமே..ஸ்கூல் ·ப்ரெண்ட் எத்தனை ரூபாய்க்கு வாங்கினான். நாம் அவனை விட அதிகம் வாங்க வேண்டுமா..??என்று பல பல கேள்விகள் . சந்தேகங்கள். ஆசைகள். அபிலாஷைகள். சில பேர் வீ ட்டில் தீபாவளிக்கு ஒரு மாசம் முன்பே வெடிக்க ஆரம்பித்து விடுவார்கள். விட்டு வாசலில் உட்கார்ந்து ( டேய்...அவங்க வீட்டு வாசல்ல போய் உட்கார்ந்து 'பே' ந்னு பாத்துகிட்டு நிக்காதடா - அம்மா) அவர்கள் வெடிப்பதை, வீட்டுக்கும் வாசலுக்குமாய் ஓடி ஓடி ஊதுபத்தியால் திரியில் வைத்து விட்டு வருவதை, அவர்கள் த்ரில்லை, வெடிப்புகை வாசனையை ஏக்கத்தோடு உக்காந்து பார்த்து விட்டு, வீட்டுக்குள் வந்து என் வெடி லிஸ்டை இன்னொரு தடவை சரி பார்த்துவிட்டு கனவுகளுடன் தூங்கிப் போவேன்.
தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பு தடக்கென்று அப்பா வெளி ஊரிலிருந்து வெடி வாங்கி வந்து விடுவார். பிரித்துப் பார்த்தால்
எல்லாம் மத்தாப்பு, தீப்பெட்டி, சாட்டை, சங்கு சக்கரம், புஸ்வானம் என்று தலையில் இடி விழும். கேட்டால்" சீ..நீ சின்னப் பையன். வெடி யெல்லாம் வெடிக்கக்கூடாது. மத்தாப்பு போதும்' என்ற கண்டிப்பு . தீபாவளிக்கு தீபாவளி வந்து போனதே ஒழிய , நான் பெரியவனாகவெ இல்லை. அப்பாவின் மத்தாப்பு பாக்கெட்டுகளும் குறையவே இல்லை.
மெல்ல மெல்ல இதில் நாட்டம் குறைந்து, தீபாவளி புது ட்ரெஸ், புது படங்கள், சாட்டிலைட் டீவி சிறப்பு நிகழ்ச்சிகள் என்று வேறு திசையில் பயணப்பட்டது மனசு. காலையில் தலையில் எண்ணை வைத்துக் கொண்டு சாஸ்திரத்துக்கு இரண்டு வெடிகொளுத்திப் போடுவது வரை வந்தது நினவுக்கு இருக்கிறது. பிறகு வேலை தேடி வெளியில் பயணப்பட்டு, சில வருடங்கள் தீபாவளி எப்போ வருகிறது என்பதே மறந்து போய், வாழ்க்கையில்/ மனதில் ஏகப்பட்ட வெடிகள் வெடித்து ரணப்பட்டு, புகை மூட்டமாய் போய், மீண்டு, தெளிந்து ,மணமாகி, லாப் டாப்பில் cracker.exe யை வெடித்துப் பழகிய பிளளையோடு ஊருக்கு தீபாவளிக்கு போனேன். அப்பா தீபாவளி சாமான் வாங்க லிஸ்ட போடச்சொன்னார்.
பட்டாசு லிஸ்ட்டில் ஒரே மத்தாப்பாக பார்த்து விட்டு நிமிர்ந்த அப்பாவின் பார்வையை, அவரது புன் சிரிப்பை, அதன் அர்த்தத்தை எழுத எனக்கு ஆயிரம் விரல்கள் இருந்தாலும் போதாது
-I wrote this in Raayar kaapi klub during Diwali.
No comments:
Post a Comment