Friday, February 27, 2004

நம்பிக்கையளிக்கக் கூடிய 10 இணைய எழுத்தாளர்கள்

விகடன், குமுதம் , தமிழ்சினிமா.காம், சி·பி, வெப் உலகம் என்று இணையத்தில் தமிழ் படித்த காலமெல்லாம் மலையேறிப் போச்சு. இப்போது கணிணி முன் உட்கார்ந்தால், ராயர் காப்பி க்ளப், மரத்தடி, திண்ணை, காலச்சுவடு , திசைகள், வலைப்பூக்கள் என்றுதான் எலி ஓடுகிறது. எழுதுபவர்கள் எல்லாம் மேலதிகமாக இளைஞர்கள் என்பதால், எழுத்தில்
முதிர்ச்சி தெரிகிறதோ இல்லையோ, கலகலப்பும், விறுவிறுப்பும், அதிகமாக தெரிகிறது. அதுவும் எல்லாரும் நம்ம ஜாதி ( அதான் சார்..கணிணிக் கூலி) என்று நினைக்கும்போது கொஞ்சம் கூடுதல் பரிவு. அவர்கள் எழுத்துக்களில்
நம்மை அடையாளம் காணமுடிகிறது போல் ஒரு தோணல். பாரா சொன்னபடி எதிர்காலத்தில் பிரபல எழுத்தாளர்கள் , இணையத்தில் இருந்து தான் வருவார்கள் போல.... சந்தோஷம் !!!!

அது இருக்கட்டும்.

கோக் பாட்டிலின் அடிப்பகுதியை உடைத்து போட்டது போல் ஒரு கண்னாடியை மாட்டிக் கொண்டு தனம் தினம் நான் வலையில் மேய்ந்ததில் கீழ்வரும் ஆட்கள் , நல்ல எழுத்துக்கு சொந்தக்காரர்கள்.


1. ஹரன் பிரசன்னா - இளைஞர். தாமிரபரணித் தீரர். உணர்ச்சி பூர்வமான படைப்புகளுக்கு சொந்தக்காரர். மனவியல் கூறுகளும் அதிகம் உண்டு இவர் எழுத்துக்களில். கல்யாணம் ஆகாததால் எழுதக் காரணமும், நேரமும் நிறைய இருக்கிறது. இந்த வேகமும், ஆர்வமும் குறையக்கூடாது.

2. எம்.கே.குமார் - சிங்கை வாசியான இவர் எழுத்துக்கள் எனக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் புரிந்தது என்றதுமே இவரை நான் பெரிய இலக்கியவாதி ஆக்கி விட்டேன். இவரும் உணர்வு பூர்வமான எழுத்துக்கு சொந்தக்காரர்.
தமிழ்நாட்டு கிராமத்து இளைஞனின் உள்ளத்தை இழக்காது இருப்பதால் படைப்புகள் ·ப்ரெஷ்ஷாக இருக்கின்றன

3. பீ.கே.சிவகுமார் - எழுதுவதை விட படிப்பதற்கு நேரம் அதிகம் செலவிடும் ஆசாமி. விவாதங்களில் விடாக்கண்டர். சமீபத்தில் மரத்தடியில் சக்கைப் போடு போட்ட கதை/கவிதை போட்டி இவர் மூளைக்குழந்தைதான். புனைவுப் படைப்புகளை விட கட்டுரையாளராகவும்/ பத்திரிக்கையாளராகவும் வெற்றி பெறுவார்.

4. ஐகாரஸ் பிரகாஷ் - தோழமையான படைப்பாளி. ' சிந்தனையாளன் போல யோசிக்க வேண்டும். ஒன்றுமே தெரியாதவன் போல எழுத வேண்டும் ' என்று (அவர்) வாத்தியார் சொல்வதை எழுத்துக்கு எழுத்து பாவிப்பவர். சிரிக்கச் சிரிக்க எழுதும் அவர் , அடிப்படையில் ரெம்ப ஸீரியஸ் படிப்பாளி என்று பட்சி சொல்கிறது.

5.நம்பி - இவரும் சிங்கை வாசிதான். ஆரம்ப காலங்களில் காலேஜ் கலக்கல்ஸ் என்று விடலைப் பருவ நினைவுகளை ரீவைண்ட் செய்தபோது அவ்வளவாக ரசிக்கவில்லை. நாராய் நாராய் கவிதையை நவீனப்படுத்தியபோது தான் அட! என்று திரும்பிப் பார்த்தேன். சிங்கப்பூர் கப்பலில் இருக்கும் காக்காய் கதை அவரை குபீரென்று உச்சத்துக்கு தூக்கி விட்டது எனக்குள். மாலன் கையால் 'தைப்பூசத்துக்கு' ஷொட்டு வாங்கியவர் இன்னும் நிறைய எழுத வேண்டும்

6. சொக்கன் - லாவண்யா என்று தினம் ஒரு கவிதை இணையக்குழு மூலமாக அறிமுகமான இந்த இளைஞர் சரியான துறு துறு. 1000 பேர் கொண்ட ஒரு கவிதைக்குழுவை வத்துக் கொண்டு, வேலை பார்த்துக் கொண்டு, புதிதாக கல்யானம் செய்து கொண்டு, வாரப்பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுதிக்கொண்டு, மடலாடும் குழுக்களிலும் எழுதிக்கொண்டு, அம்பானியையும்
ருஷ்டியையும் பற்றி எழுதிக்கொண்டு, டேட்டாபேஸ் அட்மின் ஆக வேலை பார்த்துக்கொண்டு...மூச்சிரைக்கிறது.

7. உஷா - இந்தத் துடுக்கு (:-)) ) மாமிக்கு விடாமுயற்சி ஜாஸ்தி. எழுதி, எழுதி, எழுதி எழுதி, தமிழை ஒரு வழி செய்து, ' பிள்ளை நிலா' வில் கவர்ந்து விட்டார். ஆரம்பகாலங்களில் எல்லாரும் அசட்டை செய்த இவர் எழுத்து, இந்த இடம் அடைந்ததற்கு மரத்தடியும் ஒரு காரணம். ஒரு பக்க அளவைத் தாண்டி இவர் கதை எழுதப் பழகிக்கொள்ள வேண்டும். நகைச்சுவை இவருக்கு நன்றாக வருகிறது.

8. எல்லே ராம் - சிரிக்க சிரிக்கப் எழுதும் இவர், அதுபோலவே பேசவும் கூடியவர். கவிதைகள் திடீரென்று உசக்கத் தூக்கி விட்டு விடும். கால் வாரல், நக்கல், குசும்பு, என்று அந்த தஞ்சை மண்ணுக்கே உரிய அத்த்னை குணாதிசயமும் எழுத்துக்களில் பொங்கி வழியும். நான் கருத்து சொல்ல தேவைப்படாத ஸீனியர் எழுத்தாளர். இருப்பினும் இணையம் வழியே எனக்கு அறிமுகமானார் என்பதால் இந்த லிஸ்ட்டில் வருகிறார்.

9. ஆசாத் பாய் - ரொம்ப பாஸிட்டிவ்வானவர். எழுத்துக்களும் அப்படியே. கவிதை, கானா, சினிமா, மேனேஜ்மெண்ட், எம்.ஜி.ஆர், கஜல் என்று பாய் சாகேப் தொடாத துறையே இல்லை. பால் மாதிரி மனசு. பாய்க்கு வயசு நாப்பதுங்கறதை
நம்பவே முடியாது. எழுத்தில் இளமை கொப்பளிக்கும்.

10. சேவியர் - எழுத்தில் வைரமுத்து சாயலடிக்கிற கவிஞர். விவாதங்களை விட எழுதுவதில் ஈடுபாடு உள்ளவர். சில சிந்தனைகள் அபாரமாக இருக்கும். இந்த வயசிலேயே பல்வேறு கவிதைத் தொகுப்புகளை கொண்டு வந்துள்ளார். நிறைய எழுதிகொண்டிருந்த இவர் தற்போது கொஞ்சம் இடைவெளி விட்டிருக்கிறார்.

கவிஞர்களுக்கு தேவையான இடைவெளி இது.இந்த லிஸ்ட்டில் யாரவது விடுபட்டுப் போயிருந்தால் அவர்கள் ரொம்பப் பெரிய எழுத்தாளர் என்று அர்த்தம்.


No comments:

Post a Comment

இன்னா நாற்பது ....

  மீசை நரை போக்க பொறுமை ஏகம் தேவைப்பட ஆசை நுரை மட்டும் சுழித்துப் பிரவகிக்கிறது இன்னமும்.... யோசித்துக் களைத்த மூளை கொஞ்சம் உருகியும் ...