விகடனில் சமீபகாலங்களில் வந்திருக்ககூடிய மிகக
அற்புதமான தொடர் இது.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சாதனையாளர்கள், திறமையாளர்கள் என்று வரிசை கட்டி ஆடுகிறார்கள்
மனதை மிகவும் கவர்கிற எழுத்துக்கள்.
*****************
‘எல்லோருக்கும் வாழ்வதற்கான பொருள் உண்டு. அதை அவரவர்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்பதைப் பள்ளிப் பருவத்திலேயே உணர்ந்துவிட்டேன். ஒவ்வொரு தோல்வியும் ஒரு சின்ன மரணம். ஒவ்வொரு அவமானமும் அதுதான். அவை பலரைச் சிதைக்கின்றன; சிலரைச் செதுக்குகின்றன. தோல்வியையும் துயரத்தையும் உளிகளாக மாற்றிக்கொள்பவர்கள்தான் சிற்பமாகச் சிறப்படைகிறார்கள்.
சேலம் மாவட்டம், காட்டூர் கிராமம் என் சொந்த ஊர். படித்தது எளிமையான பள்ளி. என்னுடன் படித்தவர்களில் சிலர் படிக்கும்போதே வாழ்க்கை துரத்த, பிழைப்புக்கு ஓடினார்கள். அவர்கள் கட்டடப் பணிகளுக்கும், மாட்டுவண்டி ஓட்டுவதற்கும் சென்றது என்னை நிறைய யோசிக்க வைத்தது. அந்தச் சூழலிலும் ‘ஜெயிக்க வேண்டும்’ என்கிற பொறி உள்ளுக்குள் தீயாகக் கனன்று சுழன்றது. பொறியை ஊதி ஊதிப் பெரிதாக்கியவர்கள் பெற்றோர். மேடையில் குரலெடுத்துப் பேசும் கலையைத் தந்தையும், ஆழ்ந்து வாசிக்கும் வித்தையைத் தாயும் கற்றுத் தந்தனர். தேசிய மாணவர் படை, சாரண இயக்கம், இந்தி வகுப்புகள் எனப் பள்ளி நாட்களிலேயே நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ளதாகச் செலவிடக் கற்றுக் கொண்டேன்.
சின்ன வயதிலேயே நான் பார்த்த பல வறிய குடும்பங்கள், ஏழ்மையின் கொடூரங்கள் என்னை ரொம்பவே பாதித்தன. அதுதான் சமூகம் பற்றிய அக்கறையை எனக்குள் கொண்டு வந்தது. கோவை வேளாண்மைக் கல்லூரியில் பட்டப்படிப்பு. அந்த நாட்களில் தான் என்னை நான் இன்னும் தீவிரப்படுத்திக்கொண்டேன். செடி களையும் கொடிகளையும் நேசிக்கக் கற்றிருந்த எனக்கு வேளாண்மையே விருப்பப் பாடமாக அமைந்தது. விடுதி வாழ்க்கையும், அளவற்ற சுதந்திரமும் எனக்குள் சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்தின. பொறுப்பும், பொறுமையும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்கிற உண்மையை உணர்ந்தது அப்போதுதான். கவிதையாக விரிந்த கல்லூரி வளாகத்தில், இலக்கியத்தில் ஈடுபாடும் கவிதையில் காதலும் உண்டானது.
கல்லூரிப் பூங்காவில், நானும் என் இலக்கிய நண்பர்களும் அடிக்கடி கூடுவோம். சம வயது உடைய மற்ற பலரிலிருந்து நாங்கள் விலகி இருந்தோம். கோவை ஆர்.எஸ்.புரத்தின் அகண்ட வீதிகளில் விழிகளின் தரிசனத்துக்காகத் தவம் கிடந்த அவர்களிடமிருந்து தனித்திருந்து கவிதையை, இசையை, நடனத்தைப் பற்றியெல்லாம் மரமல்லிகை மரங்களுக் கடியில் மணிக்கணக்கில் நாங்கள் பேசி மகிழ்ந்திருந்தோம். அப்படிக் கூடிய அனைவருமே இன்று ஒவ்வொரு துறையில் உன்னதங்கள் படைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
கல்லூரி நாட்களில் தேநீரே ஆகாரமானது. புத்தகங்களே ஆகாயமாயின. இலக்கியப் பரிசாகக் கிடைத்த ‘இயேசு காவியம்’ நூலை அன்று இரவே முழு வதும் படித்து முடித்தேன். புத்தகங்கள் படிக்கப் படிக்கக் கொஞ்சம் கொஞ்ச மாக விரிய ஆரம்பித்தேன். இரண்டு மூன்று மணி நேரம்தான் தூக்கம். ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகிய வற்றின் தோற்றம், மார்க்சிய நாத்திகம், தாய், அந்நியன் போன்ற நூல்கள் அப்போது அகலமான வாசல்களை எனக்குள் திறந்துவிட்டன.
கல்லூரி நாட்களில் கவிஞராக வேண்டும் என்பதுதான் லட்சியம். நோட்டுப்புத்தங்களின் கடைசி பக்கங்களில், வகுப்பு நடக்கும்போதே கவிதை எழுதுவது தொடர்ந்தது. ‘அன்று நடந்த கவிதைப் போட்டிக்கு எல்லோரும் கவிதையோடு வந்திருந்தார்கள்; நீ கண்களோடு வந்திருந்தாய்’ & மண்ணறிவியல் பாட நோட்டின் கடைசி பக்கம் எழுதிய கவிதை இன்னமும் ஈரமாக நிற்கிறது நினைவில்.
‘நிறையப் படிக்க வேண்டும். முனைவர் பட்டத்துடன்தான் வெளியே வர வேண்டும்’ என்கிற கனவோடு கல்லூரியில் நுழைந்த நான், இளமறி வியலுடன் நிறுத்திக்கொண்டேன். கல்லூரியைத் தாண்டித்தான் உண்மையான வாசிப்பு நிகழும் என்கிற உணர்வுடன் பணி தேட ஆரம்பித்தேன். அப்போது பலரும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுமாறு வற்புறுத்தினார்கள். அது பற்றி ஒன்றும் தெரியாமலேயே நம்மால் முடியும் என்கிற நம்பிக்கையில் ஒப்புக்கொண்டேன். ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டு, அதுபற்றித் தகவல்களைத் தேடி, தட்டுத்தடுமாறி புத்தகங்களைத் திரட்டி படிக்க ஆரம்பித்தபோது, அரசாங்கப் பணியும் கிடைத்தது.
தருமபுரி மாவட்டம், ராயக் கோட்டை கிராமத்தில், வேளாண் அலுவலர் பணி. அப்போது ராயக் கோட்டை மிகவும் பின்தங்கிய கிராமம். ஆங்கில நாளிதழ் வேண்டுமானால், ஒரு வாரத்துக்கு முன்பே முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் என் ஐ.ஏ.எஸ். போட்டித் தேர்வுக்கான தயாரிப்புகள் ஆரம்பித்தன.
சின்ன குடியிருப்பு அது. பகலிலும் விளக்கு போட்டால்தான் வெளிச்சம் கிடைக்கும். மிகக் குறுகலான ஒரு அறை. பக்கத்து அறையில் எப்போதும் சீட்டாட்டம், கீழே டீக்கடையில் ஊருக்கே கேட்டும்படி சினிமாப் பாடல்கள் ஒலிபரப்பு. சீட்டுக் கச்சேரிக்கும் பாட்டுக் கச்சேரிக்கும் இடையில்தான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான தீவிரத்தில் இருந்தேன்.
காலையில் அவசரமாக உணவு அருந்திவிட்டு, ஒரு பொட்டலத்தில் நான்கு இட்லிகளையும் புளித்த சட்டினியையும் மதிய உணவுக்காக கட்டிக்கொண்டு, டவுன் பஸ் பிடித்து இறங்கி, அந்தந்த கிராமத்திலிருந்து வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கொண்டு வேளாண் அலுவலர் பணியைத் தொடர்ந்துகொண்டிருந்த காலம் அது. பேருந்திலும்கூடப் படித்துக் கொண்டே செல்வேன். அந்த நாட்களும் நிச்சயம் அழகானவைதான்! காரணம்... சைக்கிள் பயணம், காய்ந்து போன இட்லி, புளித்த சட்டினி இவைதானே என் வைராக்கியத்தை இன்னும் அதிகப்படுத்தின!
வேளாண் அலுவலராக அப்போது தொட்ட திம்மனஹள்ளி, உத்தனஹள்ளி போன்ற கிராமங்களுக்கு சைக்கிளில் பயணித்தபோது, இன்னும் அதிகமாக மக்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். அது, ‘நிச்சயம் நான் வெற்றி பெற வேண்டும்’ என்பதைத் தீவிர மாக்கியது.
ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தமிழ் இலக்கியத்தை ஒரு விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தேன். அதில் ஒரு குழப்பம். வேளாண்மை இன்னொரு விருப்பப் பாடம். ‘இரண்டையும் தமிழில் எழுத வேண்டும்’ என்று இந்தத் தேர்வை ஏற்கெனவே எழுதித் தோற்றுப்போன ஒரு நண்பர் குழப்பிவிட்டார். வேளாண்மையை என்னால் தமிழில் எழுத முடியாது. ஏனென்றால், நான் படித்தது ஆங்கிலத் தில்! இந்தக் கேள்விக்கு விடை காண சென்னைக்கு ரயில் ஏறினேன். தலைமைச் செயலகத்தில் இருந்த என் உறவினர் உலகநாதன் மூலமாக விடை கிடைத்தது. பொது அறிவையும், வேளாண்மையையும் ஆங்கிலத்தில் எழுதலாம் என்று தெரிந்தபோதுதான் இழந்த சக்தி திரும்பியது.
இப்படித் தமிழகம் முழுவதும் தடுமாறும் இளைஞர்கள் தடம் மாறக் கூடாது என்பதற்காகத்தான் இந்தத் தேர்வை அணுகுவது பற்றி, ‘ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்’, ‘ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்’ என்று நூல்களை எழுதினேன்.
ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவது பெரிய விஷயமல்ல; அதில் தேர்ச்சி பெறுவதுகூடப் பெரிய சாதனையல்ல... அதற்குப் பிறகு நாம் எப்படிச் செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம். அறிவை அனுபவத்தால் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். பராமரிக்கா விட்டால் பளபளப்பாக இருக்கிற கோயில்கள்கூடக் குட்டிச்சுவர்களாகிவிடும்!
என்னுடைய பணிக்குப் பரிசை நான் ஒரு போதும் எதிர்பார்த்ததில்லை. சிறந்த பணியே செயல்பட்டதற்கான பதக்கம். அப்போது ஏற்படும் திருப்தியே விருது!
தூர் வாரப்பட்ட கால்வாயில் நீர் ஓடுவது பரிசு. நேர்த்தியாகப் போடப்பட்ட சாலைகளில் மக்கள் பயணிப்பதே பரிசு. நிலவொளிப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண்கள் பெறுவதே எனக்குக் கிடைத்த பெரிய விருது. நான் சாராட்சியராகப் பணியாற்றிய நாகப்பட்டினத்திலிருந்தும், கூடுதலாட்சியராகப் பணியாற்றிய கடலூரிலிருந்தும், ஆட்சியராக இருந்த காஞ்சிபுரத்திலிருந்தும் தலைமைச்செயலகம் வருகிற பொதுமக்கள் இப்போதும் என்னை வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போவதுதான் என் பணிக்குக் கிடைக்கிற அங்கீகாரம்!
மதுரையில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக இருந்தபோதும் மக்களுக்கும் எனக்கும் இடையே இருந்த இடைவெளி குறையவில்லை. மதுரையில் வாசிப்பவர் கூட்டமைப்பு உருவாக்க உதவியிருக்கிறேன். அந்த காலகட்டத்தில்தான் எம்.பி.ஏ., முடித்தேன். எம்.ஏ., ஆங்கிலம் படித்தேன். சம்ஸ்கிருதம் படித்தேன். திருக்குறளில் மனிதவள மேம்பாடு என முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்தேன். பத்து நூல்கள் எழுதினேன். நூறு ஆங்கிலக் கட்டுரைகள் எழுதி னேன். இருநூறுக்கும் மேற்பட்ட வானொலி உரைகள் வழங்கினேன். முன்னூறுக்கும் மேற்பட்ட கூட்டங் களில் இளைஞர்களுக்காகப் பேசி னேன். மூன்று ஆய்வாளர்கள் என் நூல்களில் முனைவர் ஆய்வு செய்ய உதவினேன். இப்படி மதுரை என்னை இன்னொரு பரிமாணத்துக்கு அழைத்துச் சென்றது.
என் குடும்பத்தில் முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி நான். இது தலைமுறைகளின் கனவு. அது பலித்தது என் காலத்தில்! துயரமும் சூழலும் நம்பிக்கையின் காட்டாற்றுப் பயணத்தை நிறுத்திவிட முடியாது. நம்மை நாமே கடந்து செல்வதுதான் வளர்ச்சி. நமக்குள்ளேயே அடுத்த தலைமுறையை அடையாளம் காண்பதுதான் முன்னேற்றம். அந்தத் தேடுதல்தான் என் இலக்கு, பயணம், அனுபவம் எல்லாமே!
*******
இறை நம்பிக்கை
அடுத்தவர்கள் நலனுக்காகச் செய்யும் ஒவ்வொரு செயலும் பிரார்த்தனைதான்! ஒவ்வொரு நிகழ்வையும் விழிப்பு உணர்வுடன் அணுகினால் வாழ்க்கையே வழிபாடுதான்!
ஜெயித்தது எப்படி?
சுயநலம் குறித்து சிந்திக்காமல் பணியாற்றத் தொடங்குகிறபோதே ஜெயிக்க ஆரம்பித்து விடுகிறோம். வெற்றி என்பது நம்மீது எறிந்த கற்களால் எழுப்புகிற கோபுரம்!
இளைஞர்களுக்குச் சொல்ல விரும்புவது..
தேடுதலை நிறுத்திவிடாதீர்கள். குறுக்குவழிகள் எல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை!
கெட்ட பழக்கங்களை விட்டது எப்படி?
கெட்ட பழக்கங்கள் என எதுவும் இல்லை. விட்ட பழக்கம் ஒன்று உண்டு. ஒவ்வொரு உயிரிலும் நம் பிரதிபலிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தபோது, அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன்!
ஒரே கனவு
அழகான தோட்டம், அடர்ந்த தோப்புகள், கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து மெல்லிய இசையைக் கண்மூடி ரசிக்கும் தனிமை...இயற்கையோடு நெருங்கிய சூழலில் அத்தனை அடையாளங் களையும் உதிர்த்துவிட்டு மறுபடியும் குழந்தையைப் போல மாறும் பக்குவம்... எல்லா சத்தங்களிலிருந்தும் விடுதலை...அமைதியான இனிமை...நெருடல் இல்லாத வாழ்வு...வலியில்லாத மரணம்....சாத்தியப்படுமா?